மோட்டார் காதலர்கள்!

பைக் ஓட்டுவதும் நீண்ட தூரம் டிராவல் பண்ணுவதும் உங்கள் ஹாபியா? தனியா போய்க்கிட்டு இருந்தா, எப்படி? வாங்க சேர்ந்து பைக் ஓட்டலாம் என அழைக்கின்றன சென்னையின் பைக் கிளப்புகள். அவற்றுள் சில...

‘சென்னை பிரதர்ஹூட் ஆஃப் ரைடர்ஸ்’ - ஹோண்டா சிபிஆர் கிளப்பின் இன்னொரு பெயர். ‘‘இது ஹோண்டா சிபிஆர் பைக் பிரியர்களுக்காக 2011-ல் துவங்கப்பட்டது. ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், சைகை பாஷைகள் எனப் பாதுகாப்பு அம்சங்களைத் தீவிரமாக ஃபாலோ செய்கிறோம். ‘எண்டியூரன்ஸ் ரைடு’ எனப்படும்  600 கிலோமீட்டர் டிராவல் எங்களுடைய முக்கியமான பயணம். 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்தியாவின் முக்கியமான நகரங்களைப் பயணத்தின் மூலம் இணைப்பது எங்கள் கிளப்பின் நோக்கம்!’’ என்கிறார்கள். புல்லட் வைத்திருப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு புல்லட் கிளப்புகள் ஒன்றிணைந்து, ‘ரைடர்ஸ் மேனியா’ எனும் புல்லட் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். ‘மெட்ராஸ் புல்ஸ்’ கிளப் இதில் ரெகுலராகக் கலக்கி வருபவர்கள். 

‘கியர் ஃபோர்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்- ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் புல்லட் கிளப்புகள் இருக்கின்றன. இந்த கிளப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது எங்கள் முக்கிய பணி. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஏதாவது ஓர் இடத்தில் கூடுவோம். மொத்தம் 52 கிளப்புகள் கலந்துகொள்ளும் ரைடர் மேனியாவுக்கு, வயது 14. இந்தியாவில் உள்ள ரீ-டிசைன் செய்யப்பட்ட, வித்தியாசமான, விசித்திரமான புல்லட் பைக்குகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். ‘மேட் புல்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் எங்கள் கிளப்புக்கு நூற்றுக்கணக்கான ஆக்டிவ் மெம்பர்ஸ்கள் உண்டு. பெசன்ட் நகர் காபி ஷாப் ஒன்றில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு மீட் பண்ணுவோம். இமயமலை வரை குழுக்களாகப் பயணம் செய்திருக்கிறோம். டிரைவிங் லைசன்ஸ், ஒரு முகம் மறைக்கப்பட்ட முழுமையான ஹெல்மெட் மற்றும் ரைடிங் ஷூக்கள் இருந்தால் எங்கள் குழுவில் மெம்பராக ஆன்லைன் மூலம் சேரலாம்’’ என்கிறார்கள். சூளைமேட்டில் இருக்கும் ‘கியர் ஃபோர்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்’பில் யமஹா ஆர்டி 350 வகை பைக்குகள்தான் அதிகம் வைத்திருக்கிறார்கள். 2001-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கிளப்பில் அதன் உறுப்பினர்கள் இன்னும் மாறாமல் இப்போதும் பயணங்களில் 350 சிசி பைக்குகளில் பிஸியாக இருக்கிறார்கள்.

‘ரோரிங் ரைடர்ஸ்’- ஜாவா மற்றும் யெஸ்டி வகை பைக்குகளை வைத்திருக்கும் 50 பேர் கொண்ட குட்டிக்குழு இது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜாவா பைக்கின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்கு கொலவெறி ரசிகர்கள் இவர்கள். அந்த வகை பைக் ஓட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எலியட்ஸ் பீச்சில் சந்திக்கிறார்கள். நீண்டதூரப் பயணமொன்றை மாதம் ஒருமுறை மேற்கொள்கிறார்கள்.

பைக்கர் பாய்ஸ்- குரோம்பேட்டையில் செயல்படும் ‘பைக்கர் பாய்ஸ்’ கொஞ்சம் ஆபத்தான பைக் ஸ்டன்ட்களில் சென்னையைக் கலக்கி வருபவர்கள். 50 பேருக்கும் மேல் உறுப்பினர்களாகத் தீவிரமாக இயங்குகிறார்கள். டி.வி மற்றும் சினிமாக்களில் இவர்களின் ஸ்டன்ட்களை அடிக்கடிப் பார்க்கலாம். எக்கச்சக்க பாதுகாப்போடு ஆட்கள் இல்லாத இடங்களில் வித்தைகள் காட்டி அடிபடும் இவர்கள் கிளப்புக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஆட்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

வி11 பைக்கர்ஸ் கிளப்:
2011-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கிளப்பில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வைத்திருப்பவர்கள் மெம்பர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி டூர் செல்பவர்கள் நீண்டதூரப் பயணமாக கோவா போன்ற வெவ்வேறு ஊர்களுக்கும் செல்கிறார்கள். அடிக்கடி டூர் செல்லும் இந்த கிளப்பில் ‘மௌனகுரு’ படத்தின் இயக்குநர் சாந்தகுமார் உறுப்பினராக இருக்கிறார்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick