ஃபேஷன் ஆகிப்போச்சு!

ந்த உலகத்தின் மூலை முடுக்கில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஃபேஷன் சங்கதிகள் இவை... சும்மா தெரிஞ்சு வெச்சுக்கோங்க மக்கா!

தாய்லாந்து ‘ஹிட்லர்’ ஃபேஷன்:

டீ-ஷர்ட்டில் ஆரம்பித்துக் குப்பைத் தொட்டி வரை இப்போது ஹிட்லரின் வினோத பொம்மை வடிவங்கள் தான் தாய்லாந்தின் பாங்காக் நகரின் ட்ரெண்ட். ஹிட்லர் உருவத்தைப் பயன்படுத்துவதால், ஒருவித ஆளுமைக் குணம் வந்துவிட்டதாய் நம்புகிறார்களாமாம் அந்த ஊர் இளசுகள்!

போஸ்ட்வானா மெட்டல் மண்டை:

ஹெவி மெட்டல் ஸ்டைல் என அழைக்கப்படும் இதில் கௌபாய் ஸ்டைலில் ராப் சிங்கரைப்போல லெதர் ஜாக்கெட்களை அணிந்துகொள்வார்கள். முகத்தில் கன் பவுடரைப் பூசிக் கொண்டு தமிழ் சினிமாவில் பாம் வைத்த பிறகு முகத்தில் கரி அப்பிக் கொண்டு எழுந்து வருவார்களே காமெடி நடிகர்கள். அதுபோல வளைய வருவார்கள்!

ஜப்பானின் ‘பகெல்’:

அதாவது நெற்றியில் 300-400 சிசி அளவுகொண்ட சிரிஞ்ச் வைத்து சலைன் வாட்டரை செலுத்தி செயற்கையாக வீக்கங்களை உருவாக்குவது டோக்கியோவின் லேட்டஸ்ட் ஸ்டைல். பார்க்கவே கொடூரமாக இருக்கும் இந்த மண்டை வீங்கி ஸ்டைலில்தான் ஜப்பானிய பப்கள் இயங்குகின்றன.

கனடாவின் ‘ஐ டாட்டூஸ்’:

கண்ணில் இருக்கும் கார்னியா எனப்படும் வெள்ளைப் பகுதியில் சிரிஞ்சின் மூலம் விதவிதமான நிறமிகளை செலுத்தி கண்ணில் வண்ணத்தையே மாற்றிவிடுவது இப்போது கனடாவின் ஸ்டைல். மருத்துவத்துக்காக இப்படி செய்து இப்போது ஸ்டைலாக மாறிவிட்டது!

நெதர்லாந்து ‘ஐ ஜுவல்லரி’:

அதாவது கண்ணுக்குள் மாட்டப்படும் கான்டாக்ட் லென்ஸில் சின்னதாய் இதய வடிவத்தை மெட்டலில் சேர்த்து விடுவது. பார்ப்பதற்கு புரை விழுந்தது போல வித்தியாசமாய் இருக்கும் இந்த வகை ஸ்டைலில் கண் பார்வை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் மக்களே!

சீனாவின் ஃபேஸ்கினி:

‘உடம்புல எல்லா பாகத்தையும் மறைக்கத் தெரிஞ்ச மக்களே, மூஞ்சி மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு? அதுக்கு ஒரு ஆடை அணிஞ்சு பார்க்கக் கூடாதா?’ என்ற ஒரு சீன டிஸைனரின் யோசனையில் விழுந்ததுதான் இந்த ஸ்டைல். இதை அணிந்துகொண்டால் முகத்தில் சூரியனில் இருந்து வரும் மோசமான கதிர்வீச்சுகள் உங்கள் சருமத்தைத் தாக்காது என விளம்பரம் செய்ய சீனா முழுவதும் முகமூடித் திருடர்கள் போல விதவிதமான ஃபேஸ்கினியை அணிந்துகொண்டு அலைகிறார்கள்.

மெக்ஸிகோ ‘எல்ஃப் பூட்ஸ்’:

மன்னர் காலத்தில் ஷூக்களின் முனை முன்னோக்கி சுருட்டிக்கொண்டு இருப்பது போல இருக்கிறது இவ்வகை பூட்ஸ்கள். ஆனால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டு மூன்று அடிகள் நீளமாக வாத்து போலவே இருக்கும்!

ஜப்பானின் ‘மன்பா’:

அதாவது இக்கரைக்கு அக்கரைப் பச்சை கான்செஃப்ட்டே தான். சிகப்பான பெண்கள் சாக்லெட் கலருக்கு மேக்-அப்பி அப்படியே வேறு வண்ணத்துக்கு மாறும் ஸ்டைல் இது. எவ்வளவுக்கு எவ்வளவு கருமையான கலரில் இருக்கிறார்களோ, அதுதான் செம ஸ்டைலிஷாம்!

என்னமோ போடா மாதவா!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick