விழுவதெல்லாம் விதைதான்!

விபரம் தெரிஞ்ச காலத்துல இருந்து ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ டயலாக்கைப் படிக்கிறோம். கல்யாணம், காது குத்துக்கு இலவச மரக்கன்றுகளைக் கொடுத்து இயற்கையைப் போற்றுகிறோம். சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மக்களும் அடிக்கடி மரக்கன்று வழங்கும் விழா நடத்தி, கெத்து காட்டிக்கிறாங்க. இப்படிப் பலவகையில நட்டுவைக்கிற மரமெல்லாம் முளைச்சுருந்தா, ஓஸோன் ஓட்டையை என்னைக்கோ அடைச்சிருக்கலாம். சரி... விஷயத்துக்கு வருவோம். தன் கையால், தானே மரத்தை ஊன்றும் கதை எல்லாம் நம்ம ஊரில்தான். மரம் வளர்க்கும் விஷயத்தில் வெளிநாடுகள் எல்லாம் வேற வெவல்! எப்படி?

நீங்கள் தூக்கிப்போடும் குப்பைகள் எல்லாம் மரமாக, செடியாக முளைத்தால் எப்படி இருக்கும்? இந்த கான்செஃப்ட்டில்தான் மரம் வளர்த்து அசத்துகின்றன பல்வேறு நாடுகள். ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் கடையை விரித்திருக்கும் ‘ஸ்ப்ரோட்’ நிறுவனம் விதைகளுடன் கூடிய பென்சிலைத் தயாரித்து விற்கிறார்கள். எழுதும் பென்சிலின் அடிப்பகுதியில் விதைக்கென தனி இடம் இருக்கும். இந்தப் பகுதியைத் தொடும் அளவுக்கு பென்சில் கரைந்ததும் பென்சிலைத் தூக்கித் தூர எறிந்தாலும் சரி, மண்ணுக்குள் மூடிவைத்துவிட்டுச் சென்றாலும் சரி. அதிலிருக்கும் விதை விருட்சமாகும்.

கலிபோர்னியாவின் சன் டியாகோ நகரில் இருக்கும் ‘கிரீன் பட்ஸ்’ செஞ்ச காரியம் ‘நெருப்புடா’ ரகம். சிகரெட் உடலுக்குக் கெடுதல்; அதில் இருக்கும் பஞ்சு இயற்கைக்குக் கெடுதல். எனவே, எளிதில் மட்கக்கூடிய சிகரெட் பஞ்சுகளை அறிமுகம் செய்திருக்கிறது இந்த நிறுவனம். தவிர, இதில் செடி, கொடி மரத்திற்கான விதையும் இருக்கும். பிறகென்ன? நீங்கள் தூக்கியெறியும் அத்தனை சிகரெட் துண்டுகளும் உங்களைச் சுற்றி செடியாக முளைக்கும். அதாவது, புகை பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது. தூக்கியெறியும் பஞ்சு இயற்கைக்கு நன்மையானது!

கனடாவின் ‘பொட்டானிக்கல் பேப்பர் வொர்க்ஸ்’ நிறுவனம், எழுதும் பேப்பர்களில் விதையை பிரின்ட் செய்து கொடுக்கிறார்கள். பயன்படுத்திய பிறகு பேப்பரைக் கிழித்துப் போடுவது, எரியவிட்டுக் குளிர்காய்வது என சேட்டை செய்யாமல், அந்த பேப்பரைப் புதைத்துவிட்டுத் தண்ணீர் தெளித்தால் போதும். பேப்பரில் பதிந்திருக்கும் விதைகள், காய்கறித் தோட்டமாகும். இந்த பேப்பர் கான்செஃப்ட்டில் நோட்டுப் புத்தகங்களும் இருக்கின்றன. எழுதிய நோட்டுப் புத்தகங்களை அப்படியே புதைத்தால், ஒரு தோட்டமே உருவாகும்.

இதே கனடாவைச் சேர்ந்த சில மாணவர்கள் பீட்சா, பர்கரின் பேக்கிங்கிற்குப் பயன்படும் அட்டைகளில் விதைகளைப் புகுத்தி பேக்கிங் செய்திருக்கிறார்கள். அட்டைப் பெட்டியைத் தூக்கி வீசினாலும் சரி, குப்பையில் போட்டாலும் சரி...  நிச்சயம் ஒருநாள் செடி முளைக்கும். பிறகு குழந்தைகளுக்குப் பிடித்த, அதிகம் விற்பனையாகும் சாக்லேட்டுகளின் பேக்கிங்கிலும் இந்த முறை புகுத்தப்பட்டிருக்கிறது. தவிர, கழிவறைகளில் பயன்படுத்தும் பேப்பர்கள், சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் என எங்கும் நீள்கின்றன விதைகள்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick