கொலைநாயகிகள்!

‘சீரியல் கில்லர்கள்’ - இந்த வார்த்தையைக் கேட்டதும் சீரியல்களில் வரும் கில்லர் கதாபாத்திரங்கள் என தப்பா நினைச்சுடாதீங்க சகோதர, சகோதரிகளே... சீரியல் கில்லர்கள்னா தொடர் கொலைகாரர்கள்னு அர்த்தம். இன்னும் புரியற மாதிரி சொல்லணும்னா, பல பேரைக் கொலை செய்தவர்கள். அப்படிப் பல பேரைக் கொன்றவர்கள் சிலரைப் பற்றிய ஷாக்கிங் வரலாறு.

மேக்டலினா சோலிஸ்: இரத்தங்களின் கடவுள் என்று அழைக்கப்பட்ட மெக்ஸிகோவைச் சேர்ந்த இந்தப் பெண் வாழ்ந்தது முழுக்க முழுக்க இரத்தத்துடன் மட்டுமே.சிறு வயதிலேயே கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்ட  சோலிஸ் பலவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் ஹெர்னான்டஸ் பிரதர்ஸ் என்ற லோக்கல் தாதாக்களால் மீட்கப்பட்டவருக்கு வாழ்க்கை மொத்தமாக மாறியது என்று சொல்வதைவிட இரத்தமாக மாறியது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஹெர்னான்டஸ் பிரதர்ஸ் தங்களுடைய செல்வாக்கை அதிகரிக்க இந்தப் பெண்னை கடவுளின் வாரிசு என மக்களிடம் நம்ப வைத்துள்ளனர். இதைப் பயன்படுத்திய சோலிஸும் இரத்தத்தைக் காணிக்கையாகக் கேட்டுள்ளார்.காலப்போக்கில் மனித உடல்களையும் காணிக்கை கேட்கத் தொடங்கியுள்ளார். எத்தனைப் பேரைக் கொன்று காணிக்கை சமைக்கப்பட்டது என்றுகூட தெரியாத  அளவிற்கு கொலைகள் நடந்துள்ளன. இதிலிருந்து தப்பித்த 14 வயது சிறுவன் ஒருவன் போலீஸில் சொல்ல, கைது செய்யப்பட்டார் இரத்தத்தின் கடவுள். ஆனாலும் கடைசியாக செய்த இரண்டு கொலைக்கு மட்டுமே சாட்சி இருக்கிறது என்று கூற அம்மணி தூக்கில் இருந்து எஸ்கேப். கடைசியாகக்  கொல்லப்பட்ட அந்த இரண்டு பேரும் யார் தெரியுமா? அந்தப் பெண்ணைக் கடவுளாக்கிய அதே ஹெர்னான்டஸ் பிரதர்ஸ்தான். ‘ஆரண்யகாண்டம்’ சாயல் அடிக்குதே.

வேரா ரென்சி: ரோமானியா நாட்டைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண் சிறுவயதில் முழுக்க முழுக்க தன்னைவிட  பெரியவர்களிடம் மட்டுமே பழகியுள்ளார். தன் வயதுடையவர்களுடன் எப்போதும் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

பணக்காரத் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாகக் குடும்பம் நடத்திய இந்தப் பெண், முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் கணவன் மீது சந்தேகப்பட்டு மதுவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளார். (முதல் பாயசம்) சில மாதங்களுக்குப் பின் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரென்சி மீண்டும் அதே போன்று குழந்தை பிறந்த உடன் மதுவில் விஷம் கலந்து இரண்டாவது கணவரையும் கொன்றுவிட்டார். (இரண்டாவது பாயசம்) பின்னர், ஏற்கெனவே திருமணம் ஆன ஆண்களை பாய் ஃப்ரெண்டாக்கி கொஞ்ச நாளில் அதே போல் தன்னுடைய பராம்பரிய பாயச முறையில் கொன்றுள்ளார். இதில்  இறந்த ஒருவரின் மனைவி இவர் மீது புகார் தெரிவிக்க, அதைக் கொண்டு போலீஸ் ரென்சி வீட்டை சோதனை செய்தபோது ஆங்கில நாவல்களில் வருவது போல 32 ஒயின் பேரல்களில் 32 பிணங்கள் மிதந்திருக்கின்றன. அதில் ஒன்று அவர் மகனுடைய பிணம். ஆத்தி!

மரியா ஸ்வானன்பர்க்: நெதர்லாந்தைச் சேர்ந்த இவர் நான் கடவுள் என தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்ட பெண். கடவுள் என்றவுடன் பெண் சாமியார் என நினைக்க வேண்டும். இவர் முழுக்க முழுக்க சேவை உள்ளம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே பலருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே வளர்ந்ததால் என்னவோ வளர்ந்தபின்பும்கூட வயதானவர்களுக்காக இல்லம் நடத்தியுள்ளார்.

விக்ரமன் படம் மாதிரி அழகா போய்க்கிட்டு இருந்த இவர் வாழ்க்கை ராம் கோபால் வர்மா படம் மாதிரி ரத்த சரித்திரமா மாறிடுச்சு. மூன்று வருடங்களுக்கு முன் தன்னுடைய இல்லத்தில் சேர்ந்தவர்கள் எல்லோரையும் விஷம் வைத்துக் கொன்றுள்ளார். பின் அவர்களுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாளர் என்ற பெயரில் தன்னுடையதாக்கி உள்ளார். இப்படியே அடுத்தடுத்த வருடங்களில் கொலைகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் சென்றுள்ளன. இவர் சேவை இல்லத்தில் கை கால்கள் மட்டும் இழந்து தப்பித்த சிலர் போலீஸில் புகார் தெரிவிக்க, மூன்று வருட சிறைத்தண்டனை பெற்று பின் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். கடவுள் இல்லைனு சொல்றவனை நம்பு. ஏன், கடவுள் இருக்கார்னு சொல்றவனைக்கூட நம்பலாம், ஆனால், நான்தான் கடவுள்னு சொல்றான் பார். அவனை மட்டும் நம்பாதே.

ஹெலன் ஜெகாடோ: அமெரிக்காவைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத்தில் பிறந்த ஹெலன் எல்லா சிறுமிகளையும் போல் தன் சிறு வயதில் இயல்பாகவே இருந்துள்ளார். வளர்ந்த பின் தன் தோழிகளுடன் வீட்டு சாமான்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். தொடக்கத்தில் நன்றாக வேலை செய்தவர் கொஞ்ச நாட்களிலேயே தீயாக வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

தான் பொருட்கள் எடுத்துச் செல்லும் வீட்டில் வாடிக்கை யாளர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆர்சனிக் கொடுத்துக் கொன்றுள்ளார். இப்படி மூன்று மாத்தில் ஏழு பேரைக் கொன்றுள்ளார். இதில் ஒரு சர்ச் பாதிரியாரும் ஹெலனின் தங்கையும் அடக்கம். இந்தப் பெண்ணுடைய வாடிக்கையாளர்கள் மட்டும் இறப்பதைக் கண்டு விசாரித்தபோது தான் செய்த அத்தனைக் கொலைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார் ஹெலன்.இருபதுக்கும் மேல் கொலைகள் செய்தாலும் மூன்று கொலைகளுக்கு மட்டும்  தூக்குத் தண்டனை பெற்றார். ஆனால் அந்த அம்மா எதற்கு கொலை பண்ணுச்சுனுதான் தெரியலை!

ஜவ்னா பராசா: பிரேசிலைச் சேர்ந்த சிறு வயதில் குடிகாரத் தாயிடம் நிறையக் கொடுமைகளை அனுபவித்த ஜவ்னா மூன்று பீர் பாட்டில்களுக்காக ஓர் ஆணிடம் விற்கப்பட்டார். கொஞ்சநாள் நல்லவனாக இருந்த அவனும்  கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய பாலியல் துன்புறுத்தல்களால் வரிசையாக நான்கு குழந்தைகள் பிறக்க மனம் முழுக்கக் கோபத்தை தேக்கிவைத்திருக்கிறார்.

பின் அவனை விட்டு விலகியவர் தனியாக வீடு எடுத்து அரசு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். அதைப் பயன்படுத்தி கொஞ்ச நாட்களில் 60 வயதுக்கு மேல் தனியாக உள்ள பெண்களை எல்லாம் கண்டுபிடித்து வரிசையாகக் கொலை செய்யத் தொடங்கியுள்ளார் ஜவ்னா. கொலை செய்வது பிடித்துப் போகவே கொலை செய்யும் வேகத்தை அதிகரித்து கிட்டத்தட்ட  40 பேரைக் கொன்றுவிட்டார். இவர் மீது சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் கொடுக்கவும் ஜவ்னா கைது செய்யப்பட்டார். மூன்று கொலைகளை மட்டும் ஒப்புக் கொண்ட ஜவ்னா பின் 16 கொலைகள் நிரூபிக்கப்பட்டதால், 759 வருட சிறைத் தண்டனைக்கு அனுப்பப்பட்டார். ஜவ்னா ஒரு மல்யுத்த வீராங்கனை என்பது கூடுதல் தகவல்!

- ஷியாம் சுந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick