டி-ஷர்ட்டைக் காட்டினாப் போதும்!

மொழி தெரியாத ஊருக்குப் போய்  விழி பிதுங்கியிருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு டி-ஷர்ட் போடறதுதான். புரியலையா?

பாஷை தெரியாத ஊரில் நாம் சிக்கி சிதறுதேங்காய் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘ஐகான் ஸ்பீக்’ நிறுவனத்தினர் டி-ஷர்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-ஷர்ட்டின் முன்புறத்தில் ரயில், மருத்துவமனை, பேருந்து, உணவு, பீர், மணி, வைஃபை என ஒரு டூரிஸ்ட்டுக்குத் தேவையான விஷயங்களை குறிக்கும் 40 குறியீடுகள் அச்சிடபட்டிருக்கின்றன. பாஷை தெரியாத ஊரில், அந்தக் குறியீட்டில் கைவைத்துக் காட்டி நாம் நினைப்பதை அந்த மக்களுக்குத் தெரிவிக்கலாம். அதேபோல், எங்கேயும் நாம் அடிவாங்கிவிடக் கூடாது என்பதற்காக சர்ச்சைகுரிய சில குறியீடுகளைக் கழட்டிவிட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு, அதில் மத சம்பந்தபட்டக் குறியீடுகள் எதுவும் இருக்காது. இந்த ‘ஐகான் ஸ்பீக்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்ஜ் ஹார்ன் கூறுகையில், ‘ஒருமுறை நாங்கள் வியட்நாம் நாட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கு நான் ஓட்டிக்கொண்டிருந்த மோட்டார் பைக் ஒரு சின்ன கிராமத்தைக் கடக்கும் வழியில் பிரேக் டவுன் ஆகிவிட்டது. பைக் மெக்கானிக் பற்றி விசாரித்தால், அந்தக் கிராமத்து மக்களுக்கு எங்களுக்கு தெரிந்த ஆங்கிலம், பிரெஞ்ச் என எந்த மொழியும் தெரியவில்லை. அப்போது, என் நண்பன் பேப்பரில் நாங்கள் சொல்ல நினைப்பதை வரைந்து அவர்களிடம் காட்டினான். அந்த டெக்னிக்தான் எங்களுக்கு உதவியது. அதுவே, இந்த டி-ஷர்ட்டை உருவாக்க வைத்தது’ என்கிறார். இதே டி-ஷர்ட் வாடாமல்லி கலரில் கிடைக்குமா பாஸ்?

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick