தீபாவளியை எப்படி கொண்டாடுவீங்க?

தீபாவளி வீக் எண்ட் இது. அடித்துப் பிடித்து ஊருக்கு வந்து புது டிரெஸ், ஸ்வீட், பட்டாசு, ஃப்ர்ஸ்ட் ஷோ படம் என வழக்கமான ஃபார்முலாவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் கொண்டாடும் முறை வித்தியாசப்படும். `உங்க ரகம் எது'ன்னு தமிழ் சினிமா டைரக்டர்ஸ் வழியா தெரிஞ்சுக்கிற ‘பட்டாசு ஜோசியம்’தான் இது.

விக்ரமன் தீபாவளி:

சாதுவாக தீபாவளி கொண்டாடும் ஆட்கள் இவர்கள். தனியாகக் கொண்டாடினால் தெய்வக்குத்தம் ஆகிவிடும் என்பதால் கூட்டமாகக் கைகோத்துக் கொண்டாடுவார்கள். டிரெஸ்கூட ஒரே மாதிரிதான் இருக்கும். படபட பட்டாசுகள் மேல் எல்லாம் விருப்பம் இல்லாதவர்கள். மத்தாப்பைச் சுற்றிக் சுற்றிக் காட்டுவது, புஸ்வாணம் பொருத்தவே பம்மிப் பம்மிப் போவது என அநியாயத்திற்கு அம்பிகள். ஆச்சி கைப்பக்குவத்தில் சுடுசோற்றையும் பலகாரங்களையும் வீடு முழுக்கப் பரப்பிவைத்து வெளுத்து வாங்குவார்கள்.

பேரரசு தீபாவளி:

அதிரடி அதகள ஆட்கள் இவர்கள். `ஹேப்பி தீபாவளி' என்று வாழ்த்தைக்கூட காது பக்கத்தில் ரோல் கேப் வெடித்துச் சொல்வார்கள். வெடிக்கும் சரவெடியைக் காலில் அணைப்பது, ராக்கெட்டைக் கையில் வைத்துக் கொளுத்துவது என எல்லாமே பட்டாசு பாலு ரகம்தான். பனியன் தெரிய சட்டை, முட்டி தெரிய கிழிந்த பேன்ட், கழுத்தில், கையில் சங்கிலி என நடமாடும் இரும்புக்கடையாய்த் திரிவார்கள். வெஜ் பிரியாணியைக்கூட ராஜ்கிரண் ஸ்டைலில் குழப்பியடிப்பார்கள்.

ஷங்கர் தீபாவளி:


கொஞ்சம் ரிச் பேர்வழிகள். பகலில் அதிகம் பட்டாசுகள் வெடிக்க மாட்டார்கள். மிஞ்சிப்போனால் தெரு நீளத்துக்கு ஒரே ஒரு சரம். இரவில் கலர்கலராய்ப் பறக்க விட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் காதில் புகை வர வைப்பார்கள். டிரெஸ் ஷாப்பிங் எல்லாம் பெரிய பெரிய மால்களில்தான். நான்கே பேர்கொண்ட வீடென்றாலும் தலைக்குப் பத்துப் பதார்த்தங்கள் சமைத்து ஃபேமிலி இலை போட்டுப் பந்தி வைப்பார்கள்.

சேரன் தீபாவளி:


பண்டிகை எஃபெக்ட் ரொம்பவே கம்மியாக இருக்கும். ‘மாமானார் மோதிரம் போடலை', `மருமகன் சாமி கும்பிட வரலை', `மருமகள் கறிச் சோறு ஆக்கலை’ என சர்ச்சையும் சண்டையுமாய் பண்டிகை கொண்டாடும் பேர்வழிகள் இவர்கள். இருக்கிற பஞ்சாயத்துகளில் டிரெஸ் எடுக்க மட்டும் அக்கறை காட்டவா போகிறார்கள். சீசனுக்காக இல்லையென்றாலும் சாமிக்காக வேண்டுமே எனப் பேருக்கு நான்கு பலகாரங்கள் இருக்கும். கொஞ்சம் சோம்பலான தீபாவளிதான் இது.

கே.எஸ்.ஆர் தீபாவளி:

எல்லாவற்றையும் முறையாகச் செய்யும் ஆட்கள் இந்த வகைப்படுவார்கள். காலையில் எழுந்ததும் அரைமணி நேரம் டீக்கடை பஜ்ஜி போல எண்ணெயில் ஊறி, தலை குளித்து, புது டிரெஸ் மாட்டி, சாமி கும்பிட்டு, அப்புறம் பட்டாசு வெடிக்கப்போகும் பொறுப்பாளிகள். அடிக்கடி கெஸ்ட்டுகள் வரவும் வாய்ப்புண்டு. பட்டாசு வெடிக்கும்போது நடக்கும் காமெடிகளும் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும்.

தனுஷ் தீபாவளி:


முன்குறிப்பு
- தனுஷும் இப்போது இயக்குநர் என்பதைத் தெரிவித்துக்கொண்டு...

தனுஷ் சினிமாவில் கொண்டாடும் தீபாவளி எல்லாம் ஜோடியாகத்தான் என்பதால் இது முழுக்க முழுக்க தம்பதிகளுக்கானது. ஒரே கலர் ஷேடில் டிரெஸ், கொஞ்சம் காதல், கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் காபி என செமையாக இருக்கும். விளக்கு ஏற்றுவதைக்கூட ஜோடியாய்ச் செய்து பேச்சுலர்களை வெறுப்பேற்றுவார்கள். ஒண்டிக்குடித்தனம்தான் என்பதால் சுமாராகத் தெரிந்த சமையலில் சூப்பராக எதையாவது முயற்சி செய்து ரசித்து ருசித்து உண்பார்கள்.

இன்னும் மிஷ்கின் தீபாவளி, சமுத்திரக்கனி தீபாவளி எல்லாம் இருக்கு. அவை எல்லாம் 19.10.2017 டைம்பாஸ் தீபாவளி இதழில்...

- நித்திஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick