`கலைவெறி' அனுராக்!

“ஆமா, நான் நாத்திகன்தான்... ஆனா என்னோட மதம் சினிமா!” - இப்பிடிப் பேசுவது பாலிவுட் இயக்குநர் அனுராக்கின் பாலிஸி. இவர் இப்படித்தான் என்ற வரையறைக்குள்ளேயே அடக்க முடியாத மனுஷன். சமீபத்தில் நேரடியாக ட்விட்டரில் மோடியை இவர் சீண்டிவிட வடக்கே எக்கச்சக்க களேபரம்.

விஷயம் இதுதான்! பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ரொமான்ஸ் சொட்டச் சொட்ட ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா, ரன்பீர் கபூர், ஃபவாத் கான் ஆகியோரை வைத்து `ஏ தில் முஷ்கில்' என்றொரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. டீஸர், ட்ரைலர், பாடல்கள் என எல்லாமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க செம உற்சாகத்தில் இருந்த கரண் ஜோஹருக்கு பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் வடிவில் சைத்தான் வந்தது. `இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுகமற்ற நிலை நீடித்துவரும் சூழ்நிலையில் பாக் நடிகர்கள் நடித்த படத்தைத் திரையிடக்கூடாது' என முஷ்டி முறுக்கின சில கோஷ்டிகள். இதையடுத்து மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்குத் தடை அறிவித்துவிட்டார்கள்.

இந்தத் தருணத்தில்தான் பொங்கி எழுந்துவிட்டார் இயக்குநர் அனுராக் காஷ்யப். “நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் கடந்த டிசம்பரில் நவாஸ் ஷெரீப்பைப் பார்க்கப் போயிருந்தீர்கள். கரண் ஜோஹரோ வட்டிக்குப் பணம் வாங்கித் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். நீங்க செஞ்சா சரி, நாங்க செஞ்சா தப்பா?'' “இப்படியே அமைதியா இருந்தா எப்படி?” “எல்லா பிரச்னைகளுக்கும் சினிமாக்காரரர்களைக் குறை சொல்றதும், சினிமாத் தடை செய்து பிரச்னையை டைவர்ட் செய்றதும் சரியில்லை, சினிமா தொழிலுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என மோடிக்கு டேக் செய்து ட்வீட்டுகளாக போட்டுத் தாக்கிவிட்டார். `தேசப் பற்றைக் காட்டணும்னா பார்டர் போங்க' எனத் தன்னைக் கலாய்ப்பவர்களுக்குப் பதிலடியும் கொடுத்தார்.

அனுராக்குக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். `பாஞ்ச்', `பிளாக் ஃப்ரைடே'வில் ஆரம்பித்து சமீபத்தில் தயாரித்த `உட்தா பஞ்சாப்' வரை சென்சார் அதிகாரிகளுடன் மல்லுக்காட்டாமல் அனுராக்கின் பொழுது விடிந்தது கிடையாது. தன் படம் மட்டுமன்றி, எந்தப் படத்துக்கு பிரச்னை வந்தாலும் எதிராளிகளை நெம்பி எடுத்துவிடுகிறார்.

அவர் தயாரித்த `உட்தா பஞ்சாப்' படத்தை யாரோ நெட்டில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினார் அனுராக். ``நானெல்லாம் டோரண்ட்டுல இருந்து படத்தை டவுன்லோடு பண்ணியதே இல்லை, எப்படிப் பண்ணணும்னுகூட எனக்குத் தெரியாது. எப்பாவாச்சும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து படத்தை வாங்கிப் பார்ப்பேன். அதுக்கும் டிவிடி புளூரே, ஒரிஜினல் டிவிடி வாங்கி கணக்கை நேர் செஞ்சுக்குவேன். அப்பா சாமிகளா, நீங்க டவுன்லோடு பண்ணுவது உங்கள் உரிமை. அதைக் கொஞ்சம் படம் ரிலீஸான மறுநாள் செய்யுங்க'' என எழுதியிருந்தார். `பொய் சொல்லாதீங்க பாஸ்' என ஒரு ரசிகர் வெறுப்பு மூட்ட, `இந்தியாவிலேயே பெரிய பெர்சனல் சினிமா லைப்ரரி என்கிட்டேதான் இருக்கு தெரியுமா' என ட்விட்டரில் ரிப்ளை செய்தார் அனுராக்.

ஆண்ட்ரே போர்ஜஸ் என்ற நிருபர் இதைப் பார்த்துக் கடுப்பாகி, ``இது கொஞ்சம் ஓவர்... இந்தியாவுலயே பெருசுனு கப்ஸா அடிக்காதீங்க'' என நேரடியகக் கேட்டுவிட்டார். அனுராக்கோ, ``வீட்டுக்கு வாங்க தம்பி'' என அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டுக்குப் போன ஆண்ட்ரே மலைத்துப் போனார். மொழி பேதம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் டிவிடிக்களைக் குவித்து வைத்திருக்கிறார் அனுராக். ``அவர் வைத்திருக்கும் டிவிடி லைப்ரரியில் ஐந்தில் ஒரு பங்கு அளவு பற்றிக்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை. அவ்வளவும் ஒரிஜினல் டிவிடி'' எனச் சிலிர்த்துச் சொன்னார் ஆண்ட்ரே.

அதுதான் அனுராக்! 

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick