“அ.தி.மு.க-வில் சுதந்திரம் இல்லை!” | Director Visu Interview - Timepass | டைம்பாஸ்

“அ.தி.மு.க-வில் சுதந்திரம் இல்லை!”

ரு சின்ன இடைவேளைக்குப் பிறகு ஆக்டிவ் மோடுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் விசு. தன் மூத்தமகள் லாவண்யாவுடன் இணைந்து `விசுமா’ என்னும் வெப் டிவியை ஆரம்பித்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். சன் டிவி, ஜெயா டிவி டாக் ஷோக்களைத் தொடர்ந்து பாலிமர் தொலைக்காட்சியில் மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது விசுவின் புதிய டாக் ஷோ. சென்னை ஈசிஆர் சாலையில் பிஸியாக இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு வந்தோம்.

``என்ன சார் நடுவுல கொஞ்சம் ஆளையே காணோம்?’’

``நான் எங்கயும் போகலை... சில பாலிடிக்ஸ் என்னைக் கொஞ்சம் தள்ளி வச்சிருக்கு. டிவி நிகழ்ச்சிகள்ல தொடர்ந்து  மக்களோட மக்களா இருந்துட்டு  இப்ப திடீர்னு ஓய்வுல இருக்கணும்னா கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... அதான் வெப் டிவி ஆரம்பிச்சு மொபைல் மூலமா உங்க எல்லாரோட கைக்குள்ளவும் வரணும்னு முடிவு பண்ணி வந்துட்டேன். இதுக்கு நடுவுல கட்சி, அரசியல்னு ட்ரை பண்ணி கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். யாரோட தலையீடும் இல்லாம நான் என்ன பேசணும்னு நினைக்கிறேனோ அதை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கவே இந்த வெப்டிவி. இனிமே வெளிப்படையா மனம் திறந்து பேசுற விசுவைப் பார்க்கலாம்.’’

‘‘உடம்புக்கு முடியலைனு கேள்விப்பட்டோமே..!’’


 ‘‘தொண்டைப் புற்றுநோய் வந்து போன வருஷம் முழுக்க ட்ரீட்மென்ட்ல இருந்தேன். இப்பதான் அதுல இருந்து மீண்டு வந்திருக்கேன். அதிகமா பேசுனா த்ரோட் கேன்சர் வருமான்னு நிறைய பேர் கேட்டாங்க. ஆனா காரணம் அது இல்ல. ஸ்மோக்கிங் ஹாபிட் இருந்துச்சு. அதுதான் காரணம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. இப்ப கண்டிப்பா சிகரெட்டை விட்டே ஆகணும்னு நிலைமை. விட்டுட்டேன்.’’

``அதிமுக, பா.ஜ.க-னு அரசியல் கட்சிகள் பத்தி உங்க நிலைப்பாடு என்ன?’’

``முதல்ல அதிமுகவுல இருந்தேன். அந்தக் கட்சியில இருந்தப்ப எனக்கான கருத்தியல் சுதந்திரம் இல்ல. அதனால அதுல இருந்து விலகி பிஜேபில சேர்ந்தேன். இங்கயும் எனக்கு எந்த வேலையும் இல்ல. கட்சியில சேர்ந்ததோட சரி, சும்மாதான் இருக்கேன். நான் போஸ்டிங் வேணும், பணம் சம்பாதிக்கணும்னுகூட கேட்கலை. என்னைக் கட்சிகள் சரியா பயன்படுத்திக்கலைனுதான் சொல்றேன். எந்தக் கட்சியா இருந்தாலும் அதுல சுதந்திரமா செயல்பட முடியணும். இல்லாட்டி கட்சி அரசியல் இதெல்லாம் தேவை இல்லைனுதான் சொல்லுவேன்.’’

``ஜெயாடிவி, சன் டிவினு 20 வருஷ டாக் ஷோ சாம்ராஜ்யத்தை கையில வச்சிருந்தீங்க. என்ன ஆச்சு அதெல்லாம்?’’


``ரெண்டு டிவியிலயும் எனக்கான சுதந்திரம் இல்லை. டாக் ஷோக்களோட குறிக்கோளே அது சாமன்யனோட பிரச்னையைப் பேசணும். ஆனா சாமன்யன் பேசுறது ஓட்டு வங்கியையோ இல்லை தனிநபரையோ பாதிக்குதுனு குற்றம் சொல்றப்ப என் குரல்வளை நசுக்கப்பட்டுச்சு. கருத்துச் சுதந்திரம் இல்லாம மக்கள்  குரலை எப்படிக் கொண்டு சேர்க்க முடியும்? யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் கட்சியை சார்ந்தவங்களைப் பத்தி விமர்சனம் வைக்க முடியாதுனா, எதுக்காக ஒரு மக்கள் மன்றம்? அதான் ஓரங்கட்டி ஒதுங்கிட்டேன். நான் மக்களோட அடிப்படையான பிரச்னைகளைப் பேசி நடத்துன ஒரு டாக் ஷோவை ஒரு குறிப்பிட்ட சேனல்ல ஒளிபரப்ப மறுத்தாங்க. எடிட்டிங்ல அவங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி வெட்டி ஒளிபரப்புனாங்க. அதனால் வேற வழியே இல்லாம நான் எந்த ஊர்ப் பிரச்னையை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேனோ, அதே ஊர்ல 8 இடங்களில் தனியா டிவியை வச்சு திரும்பத் திரும்ப அந்தப் பிரச்னைகளை ஒளிபரப்பிக் காட்டினேன். ரெண்டு சேனல்கள்லயும் நடந்த கருத்து வேறுபாடுகளால, கட்சிகள் நடத்துற டிவிக்கள்ல டாக் ஷோவே வேணாம்னு வந்துட்டேன்.’’

``பட்டிமன்றங்களை எதிர்த்து டாக் ஷோ மேல எப்படி நம்பிக்கை வச்சீங்க?’’

 ``1994ல இருந்து 2014 வரைக்கும் டிவிக்கள்ல டாக் ஷோ நடத்தினேன். சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனினு பட்டிமன்றங்களுக்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்த காலம் அது. சிறந்த பேச்சாளர்கள் மட்டும்தான் பட்டிமன்றங்கள்ல கலந்துக்க முடியும்னு ஒரு நிலைமை இருந்த காலத்தில் சாதாரணமான ஒருத்தன் மக்கள் பிரச்னையைப் பேசினா என்னன்னு தோணுன ஐடியாவைக் கொண்டு சேர்த்தோம். அப்புறம் அதுதான் பட்டிமன்றங்களைத் தாண்டி ஜெயிச்சது.

இதுவரைக்கும் 240 ஊர்கள்ல வருஷத்துக்கு குறைஞ்சது 20 ஷோக்கள்  நடத்தி இருக்கோம். பல ஆயிரம் மக்களை இந்த டாக் ஷோ மூலமா கொண்டு வந்து சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி பண்ணி இருக்குறதா நம்புறோம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick