ஆஃப் த ரெக்கார்டு!

தன் காதலரான சிவ இயக்குநரின் அம்மாவைக் கவர, அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தாராம் ‘நம்பர் நடிகை!' தவிர, படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் அவர் வீட்டுக்கு விசிட் அடித்துவிட்டுத் திரும்புகிறாராம் நம்பர். மருமகளே வா வா!

‘காவல் கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நம்பர் நடிகைக்கு வயதாகிவிட்டதால், அவர் ரோலை டம்மி செய்து இன்னொரு இளம் நடிகையை நாயகியாக ஒப்பந்தம் செய்யச்சொன்னாராம் ‘மதுபான’ நடிகர். விஷயத்தைக் கேட்ட நடிகையின் தாய்க்குலம் கொந்தளிப்பில் இருக்கிறது! கும்மிடுங்க மாதாஜி!

‘விரல்’ நடிகர், சமீபத்தில் கண்ணீர் நடிகரின் பிரச்னைக்காக ஆதரவு தெரிவித்தார். அதைப் பற்றி ஒரு பேட்டியில் கேட்க, `அவருக்கும் எனக்கும் பழக்கமே கிடையாது' என நடிகர் சொல்ல, விரல் நடிகர் அப்செட். பாவம்யா!

‘நடை’ நடிகர் யாரை அணைப்பார், யாரை ஒதுக்குவார் என யாருக்குமே தெரியாதாம். கடந்த சில படங்களில் தன்னுடன் இணைந்து பணிபுரிந்த சுருள் முடி ஸ்டண்ட் மாஸ்டரை காரணமே சொல்லாமல் மாற்றிவிட்டாராம். மாஸ்டர் ஃபீலிங்!

‘துப்பறியும்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிங் நடிகைக்கு, இனிஷியல் இயக்குநரின் பட வாய்ப்பு கிடைக்க, தேதிகளை அதற்கு ஒதுக்கி இந்தப் படத்தை டீலில் விட்டு விலகிவிட்டார். கடுப்பில் இருக்கிறார், இருட்டு இயக்குநர். ரைட்டு!
‘பன்ச்’ நடிகர் படப்பிடிப்புத் தளத்தில் தன் குடையைக்கூட தானே பிடித்து கொள்பவர். அப்படிப்பட்டவர் படத்தை இயக்கும் ‘லீ’ இயக்குநர் ஷூட்டிங் ஸ்பாட்டில் 3 பாடிகார்டுடன் பந்தாவாக பவனி வந்ததைப் பார்த்து, ‘வெட்டி சீன் வேலைக்கு ஆகாது பாஸ்’ என சிரித்துக்கொண்டே பன்ச் பேசினாராம், ஹீரோ! சுட்ட படம் எடுக்கிறவராச்சே!

நாத்திகவாதியாக இருந்த ‘மில்க்’ இயக்குநர் சமீபத்தில் அடி மேல் அடி விழுந்ததினால் ஆத்திகவாதி ஆகி, கோயில் கோயிலாகச் சுற்றி வருகிறாராம். பாதி நேரம் ஆன்மிக புத்தகம் படிப்பது என ஆன்மீகத்தில் மூழ்கிவிடுகிறாராம். நம்பலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick