இவன் ரொம்ப வேற மாதிரி!

காவிரியில தண்ணி வருமா? அப்போலோவில இருந்து அறிக்கை வருமா? இந்த வருசமாச்சும் திரிஷாவோட கல்யாணச் சேதி வருமா? இப்படி ஆயிரத்தெட்டு ‘வருமா’வுக்கு மத்தியில் இதை எதையுமே கண்டுக்காமல் `தீபாவளி செலவுக்குக் கடன் கேட்டிருந்தவங்ககிட்ட இருந்து காசு வருமா'ன்னு யோசிச்சிட்டு இருக்கவன்தாங்க நம்ம ஆளு...

* உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவெச்சுட்டாங்கனு ஊரே பரபரப்பாகப் பேசிக்கிட்டு இருந்தாகூட மெயின்ரோடு கார்னர்ல இருக்கிற ஆயா கடையில ரெண்டு இட்லி கெட்டி சட்னி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பான்.

* ஊரே தீபாவளி பர்சேஸுக்குப் போத்தீஸ் போலாமா, சரவணா ஸ்டோர்ஸ் போலாமான்னு பிளான் போட்டுட்டு இருக்கும் போது, பேறையூர் செட்டியார் ஜவுளிக்கடையில ஆடித்தள்ளுபடி போட்டுருந்தப்பவே தீபாவளிக்கும் சேர்த்து மூணு மாசம் முன்னாடியே மொத்த குடும்பத்துக்கும் துணி எடுத்து வச்சிருப்பான் நம்ம ஆளு.

* ஐ.டி கம்பெனின்னா என்னன்னு தெரியாது, பீட்சா பர்கர்னா என்னன்னு தெரியாது. நம்ம ஆளைப் பொறுத்தவரைக்கும் புரோட்டாக் கடை கோபாலு போட்டுத் தரும் ஆனியன் ஊத்தாப்பம்தான் பீட்சா. முருகேசன் பெட்டிக்கடை பிளாஸ்டிக் கவர்ல தொங்குற பன்னுதான் பர்கர்.

* ஓட்டு போடச் சொல்லிக் காசு கொடுக்கிற கட்சிக்காரங்க எல்லோர்கிட்டேயும் காசு வாங்கிக்குவான். ஆனா ஓட்டு யாருக்குப் போடணும்னு போன வருடமே முடிவு பண்ணியிருப்பான். ‘ஏன் அண்ணாச்சி, ஓட்டுக்குக் காசு வாங்கறது தப்பில்லையா’ன்னு கேட்டோம்னா, ‘அட போங்க தம்பி. சுத்த வெவரம் கெட்ட ஆளா இருக்கீக... அவனுக என்ன அவங்க அப்பன் வூட்டுக் காசைக் கொடுக்குறானுவன்னு நினைச்சிட்டு இருக்கியளா? அம்புட்டும் நம்மகிட்ட ஊழல் பண்ணிக் கொள்ளையடிச்ச காசுதான் தம்பி. நீங்க டி.வி.யில செய்தியெல்லாம் பார்க்க மாட்டிங்களா? அது சரி உங்களுக்குத்தான் டி.வி.யைப் போட்டா டான்ஸ் ப்ரோகிராம் பார்க்கவே நேரம் சரியாருக்கே...’ன்னு கேப்பே விடாம லோக்கல் அரசியல்வாதியிலருந்து சுவிஸ் பேங்க் மேனேஜர் வரைக்கும் ஒரே போடா போட்டுத்தள்ளிட்டு, கடைசியா நம்மளையும் நோஸ்கட் பண்ணிருவாப்ல!.

* புருசன் பொண்டாட்டி டைவர்ஸ் கேஸுன்னா என்னன்னே தெரியாதவங்க. நம்ம ஆளு குடும்பத்துக்குள்ள எவ்ளோ பெரிய சண்டை வந்தாலும், மனஸ்தாபம் வந்தாலும், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் வந்து இவனை நாலு திட்டு, இவன் பொண்டாட்டியை நாலு திட்டு திட்டிட்டு சமாதானம் பண்ணி வெச்சிட்டுப் போனாருன்னா... அன்னைக்கி ராத்திரியே மல்லிகைப்பூ அல்வா கன்ஃபார்ம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick