ரயில் சிநேகம்!

போன தலைமுறையுடன் காலாவதியாகி விட்ட விஷயங்களுள் குறிப்பிடத்தக்கது `ரயில் சிநேகம்’. இப்போ அது எப்படி இருக்குனு பார்ப்போமா?

* இருபது மணிநேரப் பயணம்கூட ‘உங்க சீட் நம்பர் என்ன’ என்பதோடு முடிந்துவிடுகிறது.

* குளிர்சாதன வகுப்புரை பயணம் என்றால் பிணவறையில் உயிரோடு படுத்துக் கொண்டிருப்பதற்கு சமானமாகிவிட்டது.

* அட்டவணையில் பெண் பெயரைப் பார்த்ததும் வரும் குறுகுறுப்பு, ஒரு பேரிளம்பெண்ணை வெற்றிலை வாசத்தோடும் சுண்ணாம்புப் பார்வையோடும் பார்த்ததும் போகுமிடம் தெரியாது!  

* இருக்கை இட மாற்றத்திற்கான பேரங்களில் பெரும்பாலும் பலியாவது இளந்தாரிகள்தான். `தம்பி, இந்த ஜன்னலைக் கொஞ்சம் ஓப்பன் பண்ணுப்பா' என்கிற விண்ணப்பங்களுக்கு உடனடியாக தன் புஜபலத்தை நிரூபித்துக்  காட்ட வேண்டிய கட்டாயம் உண்டு.

* எதிர் இருக்கை நபர் புளியோதரைப் பொட்டலத்தைப் பிரித்து அமோகமாக ஆரம்பித்து வைப்பார். அந்த கம்பார்ட்மென்ட்டே கறிவேப்பிலை வாசத்தில் கமகமக்கும்.

* பகல்நேர ரயில் பயணம் முற்றிலும் மாறானது. புதுமணத் தம்பதிகளின் ஒட்டுரசல்களை கண்டுங்காணாத மாதிரி ஜென்நிலையில் உட்கார்ந்து கொண்டு வரவேண்டும். 

* பயன்பாடு தாண்டியும் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தில் வெறித்தனமாய் கேம்ஸ், வாட்ஸ்-அப் சாட் எனக் கைப்பேசியில் பிஸியாக இருப்பார்கள் யுவ-யுவதிகள்! 

* கைப்பேசியில் ஒருவர் தன் குடும்பப் பிரச்னைக்கு ஊரே கேட்டு வருத்தங்கொள்ளும் அளவுக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டிருப்பார். கெஞ்சினாலும், ஒரு நிமிஷம் முணுமுணுத்து விட்டு, `அதெப்படி அவன் அந்த மாதிரி' என்று ஹை-டெசிபலில் வழக்கைத் தொடர்வார்.

* இறங்கும்போது கைப்பைகளைப் பரணிலிருந்து எடுக்கப் போராடுகையில் ஒரு கற்சிலைபோல இருப்பார்கள். இதுவே ஒரு பெண் என்றால் மூட்டை முடிச்சுகளை `பொன்னுமணி கார்த்திக்'காக மாறி தூக்கிச் சுமக்கவும் தயங்க மாட்டார்கள்.

* கொஞ்சம் கழிப்பறை போய்விட்டுத் திரும்பி வருவதற்குள் நம் இருக்கையையும் சேர்த்து பள்ளிகொண்ட பெருமாளாய்ப் படுத்திருப்பார் ஒரு தண்டபாணி அங்கிள். மூச்..! 3 மணிநேரத்துக்குப் பிறகு `ஸாரி' சொல்லி எழுவார்!

போங்கப்பா... ரயிலாவது சிநேகமாவது!

- தமிழ்ப்பிரபா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick