‘எம்.ஜி.ஆர்’ தாத்தா! | Dindigul to Madurai Byepass Motel singer Jayaprakash - Timepass | டைம்பாஸ்

‘எம்.ஜி.ஆர்’ தாத்தா!

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையோரம் மோட்டல்களுக்குப் பஞ்சமில்லை. போட்டி போட்டுக்கொண்டு தங்கள் மோட்டல் களுக்கு வாகனங்களையும் அதில் வரும் பயணிகளையும் கவர்வதற்காகவே வித்தியாசமாய் ஓசை எழுப்பியபடி நிற்பார்கள் சிலர். பெரும்பாலும் அந்தவகை ஆட்களை நாம் சட்டை செய்வதே இல்லை. அல்லது அவர்கள் ஏனோ  நம்மை வசீகரிப்பதில்லை. `இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுறேன்’ என ஒருத்தர் கிளம்பியிருக்கிறார்.

திண்டுக்கல் பைபாஸில் இருக்கும் சரவணபவனுக்குள் சாப்பிட நுழைபவர்கள் சாலையோரம் நிற்கும் இவரைத் திரும்பிப் பார்க்காமல் போக முடியாது. பளீர் எம்.ஜி.ஆர் காஷ்ட்யூமில் ஆளே வேற லெவலில் இருக்கிறார். பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகளை ஸ்டைலாய் விட்டுக்கொண்டும்,  `அன்பே வா' எம்.ஜி.ஆர் போல ஓடிக்கொண்டும் இருக்கும் அவர் கண்களில் கறுப்பு கலரில் கூலர்ஸ், தலையில் தொப்பி! விசிலில் எம்.ஜி.ஆர் பாடல்களைத் தெறிக்கவிட்டு அனைவரையும் கவரும் அவர் பெயர் ஜெயப்பிரகாஷ்!

``நான் பதினைஞ்சு வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். திண்டுக்கல் வெள்ளோடு பக்கத்துல வேடப்பட்டிதான் சொந்த ஊர். சினிமால நடிக்கணும்னு ஆசை அப்போ இருந்துச்சு. அப்புறம் குடும்பம் குழந்தை குட்டி பேரன் பேத்தினு வாழ்க்கை திரும்பிப் பார்க்குறதுக்குள்ள கடகடனு ஓடிப்போச்சு. ஏடிஎம்ல செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். வயசானாலும் ரிட்டையர்டு ஆகி வீட்டுல சும்மா இருக்க மனசு கேட்கலை. எப்பவும் எம்.ஜி.ஆர் பாட்டுக்களைப் பாடிக்கிட்டு வேலை பார்ப்பேன். கையைக் காலை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க? என்னோட காஸ்ட்யூம் பார்த்துட்டு வேலை போட்டுக் கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம். என்னைப் பார்த்து ஒரு நிமிஷம் காரை ஸ்லோ பண்ணுவாங்க. அந்த கேப்புல பாட்டுப்பாடி, ‘உள்ளே வாங்க’ என சைகை கொடுத்து பார்க்கிங் போட்டுருவேன். இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போ அர்த்தம் கிடைச்சதா உணர்றேன். ஏன்னா, பல குழந்தைங்க எங்கூட நின்னு செல்போன்ல போட்டோ புடிச்சுக்குதுங்க! பெருமையா இருக்கு’’ என்றவர் நாம் கிளம்பும்போது அந்தத் தொழில் ரகசியத்தைப் போட்டுடைத்தார்.

``எம்.ஜி.ஆர் ஏன் அடிக்கிற கலர்ல டிரெஸ் போட்டார்னா இதுக்குத்தான்...  குழந்தைக மனசுல ஈஸியா இடம் பிடிச்சிரலாம்னுதான். அதைத்தான் நானும் செய்றேன்’’ என்று சொல்லும் ஜெயப்பிரகாஷ் தாத்தா, தூரத்தில் வரும் வாகனத்தைக் கவர்வதற்காக ‘உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால்...’ என எம்.ஜி.ஆர் பாடலைப் பாடத் தொடங்குகிறார்.

சூப்பர் தாத்தா! 

- கோ.கீதப்பிரியா, படம்: வீ.சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick