``எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் கிடையாது!’’

செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்ட சின்னத்திரை பிரபலம் ரத்னா. 800 எபிசோடுகள் தொடர்ந்த சன் டிவியின்  விமர்சன நிகழ்ச்சியில் தன் மேனரிசங்களால் தனிக் கவனம் ஈர்த்தவர்.தீபாவளிக்கு புதுப்படங்கள் வேற ரிலீஸ் ஆகிருக்கே என, கேரளாவில் இருந்த ரத்னாவோடு ஒரு பேட்டி.

``சீனியர் தொகுப்பாளர் நீங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க?’’

``சொந்த ஊரு கேரளா. ஆனாலும் நான் சென்னைவாசிதான். படிச்சது வைஷ்ணவா காலேஜ். 1989ல தூர்தர்ஷன்ல செய்தி வாசிக்க ஆரம்பிச்சேன்.அப்புறம் சின்ன இடைவெளிக்குப் பிறகு சன் டிவில சேர்ந்து இப்போ இருபத்தி மூணு வருஷமாச்சு.’’

``முதல் சினிமா விமர்சனம் ஞாபகம் இருக்கா?’’

``உமாபத்மநாபன்தான் அதுவரை அந்த நிகழ்ச்சிய தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க. அவங்க பிஸியானதால பண்ணச் சொன்னாங்க. படம் பேரு ஞாபகம் இல்லை. ஆனா விஜய் படம் தான் முதன் முதலில் பண்ணினேன்.''

``இப்போ உள்ள விமர்சன ட்ரெண்டை எப்படிப் பார்க்குறீங்க?’’

``விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த விஷயமும் கிடையாது. படம் ரிலீஸாகி மூணு நாள் வரை கூட்டமே இல்லாம, பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலமாவே மெகா ஹிட் ஆன படங்கள்லாம் இருக்கு. சமூக வலைதளங்களோட தாக்கம் அதிகமா இருக்கு. விமர்சனம் பண்றது தப்பு இல்ல. குறைஞ்ச பட்சம் ஒரு மூணு ஷோவாவது தியேட்டர்ல ஓடுன பிறகு விமர்சனம் எழுதுனா நல்லா இருக்கும்!’’

``சினிமா விமர்சனத்துல மறக்க முடியாத அனுபவம் இருக்கா?’’

``ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்ன விமர்சனம் சொல்லப்போறோம்னு படத்தோட டைரக்டர்ஸ்கூட ஆவலா எதிர்பார்ப்புல இருந்த காலகட்டம் அது. ஷோ முடிஞ்சதும் டைரக்டர்ஸ் பேசுவாங்க. அது மட்டுமில்லாம ஹே ராம் படம் வெளிவந்த நேரத்துல கமல் சார் கூட இருந்து அவரை எடுத்த பேட்டி என்னால மறக்க முடியாதது..!’’

``சினிமா வாய்ப்பெல்லாம் வந்துருக்குமே?’’

``ஆமா... எஸ்.ஜே.சூர்யா சார் `வாலி' படத்துல அஜீத் சார் ஆஃபீஸ்ல வர்ற ஒரு கேரக்டர் ரோலுக்கு என்னய நடிக்க வைக்க ரொம்ப முயற்சி பண்ணினாங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால நடிக்க முடியாம போயிடுச்சு. அக்கா அண்ணி கேரக்டர் எல்லாம் வந்தது. டிவியே போதும்னு இருந்துட்டேன்.’’

``நிகழ்ச்சியெல்லாம் பார்த்துட்டு வீட்டுல என்ன சொல்றாங்க?’’

``கணவர் சாஃப்ட்வேர் துறையில இருக்காங்க. அனிருத், ஆத்விகான்னு இரட்டைக்குழந்தைங்க. ஏழாவது படிக்கிறாங்க. அவங்கதான் நிறைய சொல்லுவாங்க. ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம், `உங்க அம்மா நேத்து போட்டிருந்த நெக்லஸ் நல்லா இருந்துச்சு எங்க வாங்குனாங்கன்னு கேட்டு சொல்லுங்க’னு வருவாங்க.’’

``ரொம்பப் பிடிச்ச சினிமா?’’

``எனக்கு கமல் சார் ஸ்ரீதேவின்னா ரொம்ப இஷ்டம். ராஜ பார்வை, பாச மலர், பாரதி இதெல்லாம் ரொம்ப பிடிச்ச படம்.''

`தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்தீங்களா? எந்தப் படம் பிடிச்சிருந்துச்சு?’’

``எனக்கு டி.வி, சினிமா பார்க்குற பழக்கமே கிடையாதுங்க. நான் கடைசியா பார்த்த படம் `பாபநாசம்'. ஏற்கெனவே திருஷ்யம் பார்த்திருந்தேன். கமல் சாருக்காகத்தான் பாபநாசமும் பார்த்தேன்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick