நட்பு + பயணம் = ‘ஆனந்தம்’!

ருணுக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டும், ஒவ்வொரு விஷயத்திலும் பெர்ஃபெக்ட், கௌதமுக்கு தன் காதலி தேவிகாவுக்காக ராக்பேன்ட்டில் இருப்பதை அவளிடம் சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த இசையைப் பாட வேண்டும். அக்‌ஷய்க்கு எப்படியாவது தியாவிடம் பேசிவிடவேண்டும், இந்தக் கூட்டத்துடன் சேர்ந்து தானும் ஜாலியாக இருக்கவேண்டும் என்பது குப்பியின் ஆசை. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருப்பது, தனக்குப் பிடித்ததை வரைந்துகொண்டிருக்கும் தர்ஷனா மட்டும்தான். இப்படியான சில நண்பர்கள், தங்கள் கல்லூரியிலிருந்து செல்லும் ஐ.வி (இன்டஸ்ட்ரியல் விசிட்) பயணமே மலையாளத்தில் ரிலீஸாகி இருக்கும் `ஆனந்தம்' படத்தின் கதை!

மலையாள சினிமாவின் நம்பிக்கை இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் டீமிலிருந்து வந்திருக்கும் கணேஷ் ராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தன் உதவி இயக்குநரை தன்னுடைய தயாரிப்பிலேயே இயக்குநராக்கியிருக்கிறார் வினித். புதுமுகங்கள்சூழ் படத்துக்கு மலையாள தேசத்தில் செம வரவேற்பு!

கேரளா - ஹம்ப்பி - கோவா எனக் கிட்டத்தட்ட ஒரு ரோட் மூவி மூடிலேயே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். நண்பர்களுக்குள் நிகழும் குட்டிக் குட்டிச் சண்டைகள், எமோஷன்கள், அவர்களின் ஆசைகள், பயங்கள் என உணர்வுகளின் பயணமாகவும் இருப்பதும், எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மையப்படுத்தாமல், ஒவ்வொருவர் வழியாகவும் கதை நகர்வதும் இன்னும் அழகு. கெஸ்ட் ரோலில் நிவின் பாலி வரும் இடம் ஸ்வீட் சர்ப்ரைஸ். ரென்ஜி பனிக்கர், அஜு வர்கீஸ் என வினித்தின் ஃபேவரைட் காமெடி கலாட்டாக்காரர்களும் படத்தில் சின்னச் சின்னப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

வருண் தன்னுடைய சிடுசிடு குணத்தை உணர்வது, புரஃபசருக்கும் லவ்லி மிஸ்ஸுக்கும் இடையேயான காதல், தனக்குப் பிடிக்காத ராக்ஸ்டார் வேடத்தைக் கலைத்து காதலி முன் போய் நிற்கும் கௌதம் எனப் படம் முழுக்க நிறைய அழகான தருணங்கள் யூகிக்க முடிந்தது என்றாலும் கூட ரசிக்கும் படி இருப்பது ஆச்சர்யம்.

படத்தில் வரும் வசனங்களுக்குத் தனி அப்ளாஸ். படத்தின் காட்சியுடன் பார்க்கையில் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்றுகிறது. இது சாம்பிள்ஸ்... இருட்டைப் பார்த்து பயப்படும் தியாவிடம், “நானும் இப்பிடிதான் இருட்டைப் பார்த்து பயப்படுவேன். ஒரு நாள் எங்க அப்பா கூப்பிட்டு வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டி, எதுக்காக இருட்டில் கண்ணுக்குத் தெரியாத விஷயத்தை நினைச்சு பயப்படுற? கண்ணுக்குத் தெரிஞ்ச நட்சத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படு’னு சொன்னார்” என்பான் அக்‌ஷய்.

“நமக்கு எது நல்லாருக்கும்னு அம்மா, அப்பா எடுக்கும் முடிவு நல்லாதான் இருக்கும். ஆனா, அதையே நாம எடுத்தா இன்னும் நல்லா இருக்கும். அதை எடுக்கும் தெளிவு எப்போ வருதோ... அப்போ இருந்து நம்ம வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்” இதைச் சொல்வது கெஸ்ட் ரோலில் வரும் நிவின் பாலி.

 `நேரம்', `பிரேமம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆனந்த் சி சந்திரனின் ஒளிப்பதிவும், சச்சின்வாரியரின் இசையும் பக்கா.

ஃப்ரெஷ்ஷாக ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து ஓர் அழகான பயணத்தின் திருப்தியைக் கண்டிப்பாக ‘ஆனந்தம்’ உங்களுக்குக் கொடுக்கும். குறைந்த பட்ஜெட் என்கிற பிரச்னையை அழகாகக் கையாள்வதில் மலையாள சினிமாக்கள் கைதேர்ந்தது. இந்தப்படம் முழுமையான `ஃபீல் குட் மூவி'!

- பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick