“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“ ‘முதல்வன்’ படத்தில் ஒருநாள் முதல்வராக அர்ஜூன் கலக்கியது மாதிரி, கவுன்சிலராக நான் ஐந்து ஆண்டுகள் கலக்கவேண்டும்’’ இதுதான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்கிறார், கானா பாலா. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட உள்ள அவரிடம் சில கேள்விகள்...

‘`நான் தேர்தலில் நிற்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு முதன் முதலில் எனது வார்டில் போட்டியிட்டு, 1319 வாக்குகள் பெற்றேன். அதே வார்டுக்கு மறுதேர்தல் நடைபெற்ற போது 4142 வாக்குகள் பெற்றேன். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எனது கன்னிகாபுரம் வார்டில் நின்று 4416 வாக்குகள் பெற்றேன். அப்போது நான் திரைப்படத் துறையில் நுழைந்து புகழடைந்த பிறகு இப்போது மீண்டும் அதே கவுன்சிலர் பதவிக்கு நிற்க உள்ளேன். வெற்றி பெற தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்!’’ அதிரடியான என்ட்ரியுடன் ஆரம்பித்தார் கானா பாலா.

‘`அரசியல் ஆசை எப்படி வந்தது?’’

``சாவு வீட்டில் பாடியவன் நான். மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். ‘முதல்வன்’ பட அர்ஜூன் மாதிரி, நாமும் கவுன்சிலராகி நம் பகுதி மக்களுக்கு ஏதாவது செய்யணும்னுதான் தேர்தலில் நிற்கக் தொடங்கினேன். மூன்று முறை தோல்வியடைந்து, புது மாணவனாக களத்தில் நிற்கிறேன். கடந்த முறை நிற்கும்போது செலவழிக்க என்னிடம் பணம் இல்லாமல் திண்டாடினேன். இப்போது பணம், புகழ் எல்லாம் இருக்கு. அதனால் வெற்றியும் என்னைத் தேடி வரும்.

‘`ஏதாவது கட்சியில் சேர்ந்து, கட்சி சார்பாக நிற்கலாமே?’’


``அரசியலைத் தொழிலாகச் செய்ய நான் விரும்பவில்லை. நான் இந்த கவுன்சிலர் பதவியைக்கூட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என நினைக்கிறவன். அடுத்தவருக்கு வாய்ப்பு தரவேண்டும். ஐந்து ஆண்டுகள் என்னுடைய திட்டங்களைச் செயல்படுத்த, ஒரு கட்சியில் சேர்ந்து ஒன்பது கட்சிக்கு நான் எதிரியாக இருக்க விரும்பவில்லை. அதனால்தான், தனியா நிக்கிறேன். சினிமாவில்கூட அதிமாகப் பாடாததற்குக் காரணம், அடுத்தவருக்கும் வாய்ப்பு கிடைக்கணும்ங்கிற எண்ணம்தான். என் மக்களுக்கு என் சக்திக்கு முடிஞ்ச அளவு உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் கண்டிப்பா என்னை வெற்றிபெற வைப்பார்கள்.’’

‘`எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடாமல், கவுன்சிலர் பதவிக்கு நிற்க காரணம்?’’

``முதலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு ஜெயிப்போம். பிறகு எம்.எல்.ஏ பதவிக்கும் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும்போது, எம்.எல்.ஏ-வுக்கு நிற்பது கஷ்டமா என்ன? செல்போன் அப்படியேதான் இருக்கும், சிம்-கார்டு மாத்துறோம்ல... அதுமாதிரி, இப்போ கவுன்சிலர், அடுத்த இலக்கு எம்.எல்.ஏ! ஆனா, அப்போதும் எந்தக் கட்சி சார்பிலும் நிற்கமாட்டேன்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick