இணையத்தைக் கலக்கும் கிராமத்து செஃப்!

`உப்பு தேவையான அளவு, கடுகு தேவையான அளவு' என நாம் வழக்கமாக பார்க்கும் சமையல் நிகழ்ச்சி அல்ல இது! எந்தவித அரிதாரமும் இல்லாமல் அருவிப்பாதையில் நண்டுக் குழம்பு, தோப்புக்குள் தலைக்கறிக் குழம்பு என கிராமத்து சமையலைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அறுபது வயது ஆறுமுகம். மெலிந்த தேகம் நரைத்த முடி என நம் கிராமத்துச் சொந்தங்களை நினைவுபடுத்தும் ஆறுமுகத்தின் வீடியோவுக்கு இப்போது ஏகப்பட்ட லைக்ஸ்! ஒவ்வொரு வீடியோவையும் குறைந்த பட்சம் மூணு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். `Village food factory' என இவர் மகன் கோபிநாத் நடத்தும் யூடியூப் சேனல்தான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக். திருப்பூரில் இருந்தவர்களுடன் ஒரு பேட்டி...

``யார் நீங்க... எப்போதிருந்து இப்படி ஆரம்பிச்சீங்க?''

``எனக்கு வயசு அறுபது ஆயிடுச்சுப்பா. சொந்த ஊரு போடிநாயக்கனூர் னாலும் இப்போ இருக்குறது திருப்பூர் நாச்சிபாளையம். வயசுப்பையனா இருந்தப்போ ஜவுளி வியாபாரம் பார்த்தேன். செங்கல்பட்டுல இருந்தப்போ கல்யாண வீட்டுக்கெல்லாம் சமைச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூர்ல பெயிண்டர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூத்த பையன் காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுல சேரப்போறேன்னு மெட்ராசுக்குப் போச்சு. திடீர்னு ஒரு நாள் கேமிரா எல்லாம் எடுத்துட்டு, `என்கூட வாங்கப்பா'ன்னு கூட்டிப்போயி என்னைய சமைக்கச் சொல்லி வீடியோப்படம் எடுத்துச்சு'' எனச் சொல்லும்போதே மகன் கோபிநாத் தொடர்கிறார்.

``டிப்ளமோ முடிச்சிட்டு சினிமால உதவி இயக்குநரா இருந்தேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகல. ஊருக்கு வந்த நேரத்துல யூ-டியூப் சேனல் நெறய பார்க்க ஆரம்பிச்சேன். சமையல் நிகழ்ச்சிகள் பற்றிய சேனல்கள் நிறைய இருந்துச்சு. `நாம மறந்துபோன கிராமத்து சமையலை ஏன் நிகழ்ச்சியா  பண்ணக்கூடாது'ன்னு தோணுனப்ப வந்த யோசனைதான்இது. அப்பாவுக்கு நல்லா சமையல் வரும்.  அதனால வேற யாரையும் வெச்சு பண்றதுக்கு மனசு இடம் கொடுக்கல.

அப்பா கூடப் பொறந்தவங்க எல்லாம், வறுமையைக் காரணம்  காட்டி  ஒதுக்கி வெச்சுத் தான் பார்ப்பாங்க. அவங்க எல்லோரும் அப்பாவைத் திரும்பிப் பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு. அதனால அப்பாவை வெச்சே நிகழ்ச்சியைத் தொடங்கிட்டேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick