சினிமால்

எம்.ஜி.ஆர் உருவாக்கிய நிறுவனம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ். அவர் மறைவுக்குப் பிறகு அவரின் வளர்ப்பு மகன் ரவீந்தர் இதை நிர்வகித்து வந்தார். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, மீண்டும் `எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' பேனரில் படங்களைத் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் ரவீந்தரின் வாரிசுகள். ஜனவரியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் புதுப்பட அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்களாம். நல்லது!

`பேராண்மை' படத்தில் பழங்குடி இனத்தவராக நடித்துப் பாராட்டுகளைப் பெற்ற ஜெயம் ரவி, தற்போது விஜய் இயக்கும் படத்திலும் பழங்குடி இனத்தவராக நடிக்கிறாராம். அதற்காக உடல் எடையையும் ஏற்றி வருகிறார். அஜய் தேவ்கனின் `ஷிவாய்' படத்தில் நடித்த சாயிஷா சேகல் நாயகியாக நடிக்கிறார். விஜய் முதன்முறையாக காடுகளில் முழுப் படப்பிடிப்பையும் நடத்த இருக்கிறாராம். ஜெயம் உண்டாகட்டும்!

சென்னை ரொம்பவே மாசுபட்டதால் ஆழ்வார்பேட்டையில் இருந்து அமைதியைத் தேடி ஈ.சி.ஆரில் உள்ள நீலாங்கரைக்குக் குடி போனார் கமல். தற்போது இந்த இரண்டு வீட்டையும் விட்டுவிட்டு கல்பாக்கம் அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பங்களாவைக் கட்டி வருகிறார். இதிலேயே சினிமா ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான வசதிகளையும் செய்து வருகிறார். தனது பணியாளர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்து தங்க வைக்கப் போகிறாராம். எங்கே நிம்மதி!

`இதயம் முரளி' படத்துக்காக உதயநிதியின் கூடாரத்துக்குப் போன இயக்குநர் அகமதுவிடம், அதைத் தள்ளி வைத்துவிட்டு `மனிதன்' படத்தை இயக்கச் சொல்லி உதயநிதி கேட்க, அதைச் செய்துவிட்டு `இதயம் முரளி'க்காகக் காத்திருந்தார். எந்த அறிவிப்பும் இல்லாமல், `இதயம் முரளி' டிராப் செய்யப்பட, வேறு ஹீரோவை வைத்து ஒரு படத்க்த் துவங்க முடிவெடுத்துள்ளார் இயக்குநர் அகமது. `இதயம் முரளி'க்காக ஒப்பந்தமான அனிருத், இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதயம் மலரட்டும்!

அடுத்து சின்ன பட்ஜெட்டில் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற காதல் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவார் என்றார்கள். ஆனால், நடப்பதெல்லாம் தலைகீழாக இருக்கிறது. அதில் தனுஷை ஹீரோவாக்கி பெரிய படமாக்கியது மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக 3 நாயகிகளை ஒப்பந்தம் செய்கிறார்களாம். காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன் ஓகே சொல்ல, இந்தி நடிகையும், தனுஷின் தோழியுமான சோனம் கபூரை மூன்றாவது நாயகியாக்கப் பேசியிருக்கிறார்கள். மீம் கிரியேட்டர்ஸ்க்கு வேலை வந்துடுச்சு!

`இவன் தந்திரன்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆர்.கண்ணன். படம் முழுக்க மழையில் எடுக்கத் திட்டமிட்டுள்ள இவர், இதில் இன்னொரு புதுமையையும் செய்துள்ளாராம். சூப்பர் சுப்பராயன், சில்வா ஆகிய இரண்டு ஸ்டண்ட் மாஸ்டர்களையும் கௌதம் கார்த்திக்கு வில்லனாக்கியிருக்கிறார். இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்திருந்தாலும் இணைந்து மிரட்டப் போவது இதுவே முதல்முறை. ஓ!

ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன், ரேவதியை விவாகரத்து செய்த பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் பிசினெஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சினிமாத் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தவரை, தான் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்காக திரும்ப அழைத்து வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். நடிக்கக் கேட்டவுடன் முதலில் `வேண்டாம்' என மறுத்தவரை கன்வின்ஸ் செய்து முக்கியமான ரோலில் நடிக்க வைக்கிறாராம் விக்னேஷ். உயர்ந்த மனிதன்!

`காற்று வெளியிடை' படத்தை கிட்டதட்ட முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் மணிரத்னம், காதலர் தினத்தன்று படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். அதற்குள் அடுத்த படத்தின் ஆரம்பப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம். தன் முதல் தமிழ்ப் படத்தின் ஹீரோ முரளியின் மகன் அதர்வாவை ஹீரோவாக டிக் அடிக்க, சந்தோஷமாகத் தலையாட்டியிருக்கிறார் அதர்வா. மைனா மைனா மாமன் புடிச்ச மைனா!

`கத்துக்குட்டி'க்குப் பிறகு சசிக்குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இரா.சரவணன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, சரவணன் இயக்கும் படத்திற்குத் தயாராகிறார் சசிக்குமார். வெல்லக் கட்டியா படத்தைக் கொடுங்க!

`ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஷாரூக்கான் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராயின் கணவராக வந்து போவார். அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தைப் பார்த்த இயக்குநர் கரண் ஜோகர், `இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க இருக்கிறேன். கதையை ஏற்கெனவே எழுதிவிட்டேன்' என அறிவித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். மீண்டும் ஒரு காதல் கதை!

சிம்பு இப்போதுதான் சரியான ரூட்டில் பயணித்து வருகிறார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். `அஞ்சாதவன், அசராதவன், அடங்காதவன்' படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தொடர்ந்து இரண்டு படங்களைக் கொடுக்க இருக்கிறாராம். அதில் ஒன்று அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும் ஆக்‌ஷன் படம். இதில் ஆச்சர்யமான விஷயம், குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவிருக்கிறது இப்படம். தவிர, பிரமாண்டமாக உருவாகவிருக்கும் `பில்லா 3' படத்தின் வேலைகளையும் இனிதே தொடங்கிவிட்டார் என்கிறார்கள். நம்பலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick