``மறக்க முடியாத விக்ரமின் பாராட்டு!''

``ரொம்ப லேட்டில்ல?’' என்றால், ‘`அதனாலென்ன நமக்கு இதுதானே முதல் சந்திப்பு. முதல் சந்திப்பு எப்போதுமே ஸ்பெஷல் தானே?’' - வார்த்தைகளில் பாசிட்டிவ் பட்டாம்பூச்சி பறக்க விடுகிறார் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன். ‘நேரம்’ படத்தில் ஆரம்பித்தது இவரது நேரம்! ‘மலரே...’ எனக் காதலர்களுக்கான தேசியகீதம் தந்த ‘ப்ரேமம்’ இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனுடன் ஒரு ஜாலி மீட்டிங்...

‘`அல்போன்ஸ் புத்திரன் - ராஜேஷ் முருகேசன் செம்ம கெமிஸ்ட்ரி! எப்படி செட் ஆனீங்க?”

``அல்போன்ஸ் புத்திரனும் நானும் ‘நாளைய இயக்குநர் சீசன்-1’க்கு முன்னால இருந்தே சென்னையில காலேஜ் மேட்ஸ். மலையாளத்துல பாபிசிம்ஹாவை வெச்சு ஒரு ஆல்பம் பண்ணோம். அல்போன்ஸ்தான் டைரக்டர், நான் புரொடியூசர். ஒரே அலைவரிசையில டிராவல் போய்ட்டு இருக்கு!''

‘` ‘மலரே...’ உருவான விதம்?’’


`` `ப்ரேமம்’ல ‘சின்ன சின்ன’னு ஒரு தமிழ்ப் பாட்டு இருக்கும். அதுவே போதும்னுதான் இருந்தோம். சீரியசான லவ்ல இருக்குற ஒருத்தன், காதல்ல உருகும்போது இன்னும் அழுத்தமா நிரூபிக்கிற மாதிரி ஒரு பாட்டு இருந்தா நல்லா இருக்குமேனு  ‘மலரே’ கம்போஸ் பண்ண ஆரம்பிச்சேன். பாட்டு ஷூட் பண்றதுக்கு முன்னால, ‘இந்தப் பாட்டு ரொம்ப மாஸாலாம் ஷூட் பண்ணலை. யதார்த்தமான காட்சிகள் இருக்கும். நிறைய பட்டாம்பூச்சிகள் எல்லாம் வர்ற மாதிரி பிளான் பண்ணியிருக்கேன். ஹீரோ வளர வளர அவனோட ஃபீலிங்கும் வளருது... அதுக்கேத்த மாதிரி வேணும்’னு அல்போன்ஸ் சொன்னார். அந்தப் பாட்டுக்காக ரெண்டு மாசம் ஒர்க் பண்ணேன்.''

‘‘ `நேரம்’ ரிலீஸ் ஆனதும் பெரிய இடைவெளிக்குப் பிறகுதான் ‘ப்ரேமம்’ பண்ணீங்க. இவ்வளவு கேப் ஏன்?’’


``ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ஆகுறதுக்கு முன்னாலயே அல்போன்ஸ் என்னை மியூசிக் டைரக்டரா கமிட் பண்ணிக்கிட்டார். அவ்ளோ தான். சென்னையில இருந்து கிளம்பி கேரளா போயிட்டேன். ஏன்னா, இந்தப் படத்தோட ஆரம்ப ஸ்டேஜ்ல இருந்து கடைசி வரைக்கும் டீமோடவே டிராவல் பண்ணணும்னு ஆசைப்பட்டேன்.''

‘`மறக்க முடியாத பாராட்டு?”

``எனக்கு விக்ரம் சார் ரொம்பப் பிடிக்கும். ஒரு அவார்டு ஃபங்ஷன்ல முதல் வரிசையில் அவர் உட்கார்ந்திருக்காரு, கூட்டத்தையெல்லாம் விலக்கிட்டு அவர்கிட்ட போனேன். ‘`நான்தான் சார் ‘ப்ரேமம்’ படத்தோட மியூசிக் டைரக்டர்’’னு சொன்னதும், ரொம்ப ஆச்சரியமா பார்த்துட்டு, ‘`உங்க மியூசிக் ரொம்ப ரொம்ப பிடிச்சது!’'னு அவர் சொல்லச் சொல்ல உறைஞ்சு போய்ட்டேன்!''

‘`அடுத்து என்ன படம்?’’


``அல்போன்ஸ் புத்திரனோட உதவியாளர் ஒருவரோட ‘800’னு ஒரு தமிழ்ப்படம். தவிர, ரெண்டு மலையாளப் படங்கள் போய்ட்டு இருக்கு!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick