விஜயகாந்த் இப்போ செல்லாக் காசு ஆகிட்டார்!

.தி.மு.க-வின் ஸ்டார் பேச்சாளர், நடிகர் செந்தில். இடைத்தேர்தல் களத்தில் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்துவரும் அவரிடம், மூன்று தொகுதித் தேர்தல் முதல், மோடி அறிவிப்பு வரை கேட்ட கேள்விக்கு அசால்ட் பதில்களால் அசத்துகிறார்...

``மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க-வின்  வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?''

``அ.தி.மு.க என்றாலே வெற்றிதானே. இந்த மூன்று தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம். இப்போ கூட பிரசாரத்தில்தான் இருக்கேன். இங்கு ஒவ்வொருவரும் அம்மா மேல வெச்சிருக்குற நம்பிக்கை, பாசத்தைப் பார்க்கும்போது அ.தி.மு.க வெற்றி உறுதியா இருக்கு. அம்மா செய்துள்ள திட்டங்கள் எல்லாமே இந்த மக்களுக்கு, கிடைச்சிருக்கு. அப்ப ஓட்டுப் போடாம இருப்பாங்களா? நான் இந்த மூன்று தொகுதிகளிலும் ஏழு நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். அ.தி.மு.க-வின் வெற்றி உறுதியா தெரியுது.''

``ஜெயலலிதாவின் பிரசாரம் இல்லாமல் இந்தத் தேர்தலை அ.தி.மு.க சந்திக்கிறதே?''

``அம்மா களத்தில் இறங்காவிட்டாலும், அம்மாவோட வைப்ரேசன் தொகுதியில் நல்லா தெரியுது. அப்போ புரட்சித் தலைவர் எப்படிப் படுத்துக்கிட்டே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாரோ அதே மாதிரி இந்த மூன்று தொகுதிகளிலும் அம்மா பிரசாரத்துக்கு வராமலே அ.தி.மு.க வெற்றி பெறும். அதுதான் அம்மாவின் பலமும்கூட. அம்மாதான் மருத்துவமனையில் இருந்து, `நான் மறுபிறவி எடுத்து இருக்கேன்... திரும்பி நான் வீட்டுக்கு வந்து மக்கள் பணியைத் தொடருவேன்'னு சொல்லியிருக்காங்க. இந்த அறிக்கையால் வருத்தத்தில் இருந்த மக்கள், ரொம்ப சந்தோஷத்தில இருக்காங்க!''

 `` `ஜெயலலிதாவின் அறிக்கை தேர்தலுக்கான அறிக்கை, மக்கள் நல அறிக்கை இல்லை' என ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?''

``அம்மா என்ன செஞ்சிருக்காங்கனு மக்களுக்குத் தெரியும். இவருக்கு என்ன தெரியும்? சரி இவங்க மக்களுக்கு என்ன செய்தாங்களாம்? காவிரித் தண்ணியைத் தமிழகத்துக் கொண்டுவந்தாங்களா? முல்லைப் பெரியாற்றுக்கு நடவடிக்கை எடுத்தாங்களா..? அதையெல்லாம் விட்டுட்டுக் `கப்பல் துறை வேணும், தகவல் தொழில் நுட்பத் துறைவேணும், நிதித்துறை வேணும்'னு அவங்க குடும்பத்துக்கு வேண்டியதைப் பெறுவதற்கு சோனியா காந்தி வீட்டில் போய் நின்னாங்க. இதெல்லாம் மக்களுக்குத் தெரியும். தி.மு.க என்ன செய்தாலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இப்பக்கூட பாருங்க, செல்லாத நோட்டை மக்களுக்குக் கொடுத்து ஓட்டு போடுங்கனு கேட்டுக்கிட்டு இருக்காங்களாம். இன்னொரு விஷயம், இவங்க ஆட்சியில இருந்து கொள்ளையடிச்சுச் சேர்த்த பணத்தை இப்ப மோடி அறிவிப்பால எப்படி மாத்துறதுனு தெரியாமா திண்டாடிக்கிட்டு இருக்காங்க. மக்களுக்குத் தேவையான எல்லாத்தையும் அம்மா செஞ்சுட்டாங்க. இனிச் செய்யிறதுக்கு என்ன இருக்கு?''

``விஜயகாந்த், `இந்தத் தேர்தலில் நாங்கதான் வெற்றிபெறுவோம்'னு சொல்கிறாரே?''


``சரியான காமெடி! அவரு அம்மா கூட இருந்த வரைக்கும் செல்வாக்கு இருந்தது. அவரு எப்போ அம்மாவை எதிர்த்தாரோ, அப்பவே அவர் கட்சி ஆட்டம் காண ஆரம்பிச்சிடுச்சு. மோடி `ஆயிரம், ஐந்நுாறு செல்லாத காசு'னு அறிவிச்ச மாதிரி, விஜயகாந்த் இப்போ செல்லாக் காசு ஆகிட்டார். அதனால அவரு ஆசைக்கு அவர் சொல்லிட்டுப் போறார்னு விட்றவேண்டியதுதான்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick