மீரான் சாகிப் தெருவைத் தெரியுமா?

சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள மீரான் சாகிப் தெருவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. 70-களில் தொடங்கிக் கொஞ்ச காலம் முன்புவரை தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான திரைப்பட விநியோக வர்த்தகம் இங்குதான் நடைபெற்று வந்தது. கோடம்பாக்கத்திலிருந்து பிரிண்ட் ஆகிவரும் சினிமா படச்சுருள்கள் அடங்கிய ஃபிலிம் பெட்டி, பேரம் முடிந்தபின் இங்கிருந்துதான் திரையரங்குகளுக்குச் செல்லும். இப்போது எப்படி இருக்கிறது மீரான் சாகிப் தெரு?

தமிழ் சினிமாவில் தற்போது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் பல தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் முன்னொரு காலத்தில் உருவான இடம் இதுதான். விநியோகஸ்தர்கள் அலுவலகங்களாலும், தியேட்டர் உரிமையாளர் அலுவலகங்களாலும் சூழப்பட்டிருந்த பிஸியான இடம் தற்போது அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறது. திரைப்பட விநியோகஸ்தர்கள் பற்றி விசாரித்தால் பலர் தலையைச் சொறிகிறார்கள். இந்தத் தெருவில் பல காலமாக தொழில் செய்துகொண்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும்தான் இந்த ஏரியாவில் தமிழ்சினிமாவின் வர்த்தகம் இருந்தது பற்றித் தெரிகிறது.

ஏ.வி.எம். அலுவலகம் உள்பட பல விநியோகஸ்தர்களின் அலுவலகங்களும், விநியோக வியாபாரமும் 70-களுக்கு முன்புவரை தாயார் சாகிப் தெருவில் நடந்து வந்திருக்கிறது. அதன்பின் இந்த மீரான் சாகிப் தெருவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் வரத்திற்கு முன்பான 90-களின் இறுதிவரை இங்குதான் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் மொத்த விநியோக வியாபாரமும் நடைபெற்றது.

`காதலில் விழுந்தேன்', `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' போன்ற திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கும் `தேவி மூவிஸ்' உரிமையாளர் சந்திரன், ``கிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் இந்த ஏரியால இருந்தாங்க. அப்போ தொழில் நல்லா இருந்தது. வியாபாரம் அமோகமா இருந்தது. இன்னைக்கு எல்லா தியேட்டர்லேயும் ஒரே நேரத்துல படத்தை ரிலீஸ் பண்ணிடுறாங்க. டியூப் (கியூப்) வந்ததுல இருந்து எல்லாமே போச்சு! பிரின்ட் போட ஒண்ணுமே இல்லாம முக்கால்வாசி லேப் மூடிட்டாங்க. கோடம்பாக்கம் ஏரியாவில் இதைச் சார்ந்து இருந்த 10,000 தொழிலாளிங்க வேற தொழில் தேடிப் போயிட்டாங்க. ஜெமினி, பிரசாத், விஜயா லேப் எல்லாம் இன்னைக்குக் காலி. கிட்டத்தட்ட இந்தத் தெருவில் இருந்த எல்லோரும் போயிட்டாங்க. நானும் வெள்ளிக்கிழமை மட்டும் ஆபீஸ் திறக்கிறேன். இந்தத் தெரு முழுக்க எலக்ட்ரானிக்ஸ் கடைகள் வந்தாச்சு. சினிமா டிஸ்ட்ரிப்யூசன் ஆபீஸ்களே இல்லை. அப்படியொரு பிஸினஸ் நடந்ததுக்கான தடமே இல்லாம மாறிடுச்சு. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும்தான். இந்தத் தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆனா இவ்வளவு வியாபாரம் ஆகும், இவ்வளவு லாபம் வரும்னுதான் சார் எங்களுக்குத் தெரியும். கடவுள் புண்ணியத்துல எங்க பிள்ளைங்களை நல்லா படிக்க வெச்சுட்டோம். வேற எங்கேயாவது கைகட்டி வேலை செய்ய மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது. வேற தொழில் எதுவும் தெரியாததால அப்படியே உட்கார்ந்துட்டோம்'' எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick