ஏலியன்ஸ் ஏன் பச்சையா இருக்காங்க?

 பிறந்த குழந்தைகளைப் பெரும்பாலும், ‘பச்சைக் குழந்தைங்க!’னு சொல்றோம். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிஜமாவே ‘பச்சை நிறக் குழந்தைகள்’ பற்றி சில கதைகள் இருக்கு. வதந்தியா, உண்மையா..? நிச்சயம் தெரியாது. ஆனால், கதை படு சுவாரஸ்யம்!

12-ம் நூற்றாண்டு. அதாவது 800 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் ஊல்பிட் என்ற ஊருக்கு அருகில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் அழுதுகொண்டே நடந்து சென்றிருக்கிறார்கள். குழந்தைகளைக் கவனித்துப் பார்த்த மக்களுக்கு ஷாக்கிங்! ஏனெனில், மனிதர்களுடைய முகமாக இருந்தாலும், அந்த இரண்டு குழந்தைகளின் தோலும் பச்சை நிறத்தில் இருந்திருக்கிறது. அவர்கள் அணிந்திருந்த உடை, புது டிசைனில் இருந்திருக்கிறது. யார் இவர்கள் எனத் தெரிந்துகொள்ள மக்கள் முயல, அவர்கள் பேசும் மொழியும் புரியாத புதிராக இருந்திருக்கிறது. உணவுக்காக அழுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மக்கள், அவர்களுக்கு விதவிதமான உணவுப்பொருட்களை எடுத்துவந்து நீட்டினார்களாம். அனைத்தையும் வெறித்துப் பார்த்த அந்தச் சிறுவனும் சிறுமியும் பீன்ஸை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டார்கள் என்கிறார்கள். ‘வதந்தி’, ‘கதை’, ‘உண்மைச் சம்பவம்’ என்றெல்லாம் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் சிறுவன், சிலநாட்களிலேயே இறந்துவிட்டானாம். அந்தச் சிறுமி மட்டும் பீன்ஸை உணவாக உட்கொண்டு, சில வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும், பிறகு அவளுடைய தோலின் நிறம் வெண்மையானது என்றும், ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டாள் எனவும் சொல்கிறார்கள். யார் இவர்கள்?

‘`நாங்க பூமிக்கு அடியில இருந்து வந்தோம். அங்கெல்லாம் சூரிய வெளிச்சமே படாது! ஏதோ ஒரு வெளிச்சத்தைப் பார்த்ததும், அதைப் பின்தொடர்ந்து வந்தோம்!’’ என்று அந்தச் சிறுமியே தெரிவித்ததாக, அந்தச் சிறுமியை நேரில் பார்த்ததாகச் சொல்லும் வில்லியம் நியூபர்க் மற்றும் ரால்ஃப் கோக்கஷால் என்ற இரு ஆய்வாளர்கள் தங்களது குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் ‘பச்சைக் குழந்தைகள்’ நினைவாக, இன்றும் ஊல்பிட்டின் வரவேற்புத்தூணில் இரண்டு குழந்தைகளின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து? ஸ்பெயின் நாட்டின் கதைக்கு வருவோம்!

முதல் சம்பவத்தோடு ஒப்பிடும்போது, இது சமீபத்தில் நடந்த சம்பவம். 1887ல் பஞ்ஜோஸ் என்ற இடத்திற்கு அருகே இருக்கும் குகையில் இருந்து இரண்டு குழந்தைகள் வந்தார்களாம் (இந்தக் கதையிலும் ஒரு சிறுவன், ஒரு சிறுமி!). ‘மணல் இல்லாத இடத்தில் நாங்கள் இருந்தோம்!’, ‘புயல் ஒன்றால் தாக்கப்பட்டு, இந்தக் குகையில் விழுந்துவிட்டோம்!’ என்ற லொக்கேஷன் வித்தியாசங்களைத் தவிர, மேலே சொன்ன கதையின் திரைக்கதை! இந்தக் கதையிலும் சிறுவன் சில நாட்களிலேயே இறந்துவிட, சிறுமி சில ஆண்டுகள் வாழ்ந்து ஸ்பானிஷ்மொழி கற்றுக்கொண்டு, கதையைச் சொல்லியிருக்கிறாராம்! சரி, இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்னன்னா... ஏலியன்கள் என்றாலே, ‘பச்சை நிறத்தில் இருப்பார்கள்!’ என்ற கற்பனை, இந்தக் கதைக்குப் பிறகுதான் வந்திருக்கும்!       

அடங்கொக்கமக்கா... எவ்ளோ பச்சையா பொய் சொல்லியிருக்கீங்க?

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்