ஷங்கர் காப்பி அடிச்சிட்டார் மக்கழே!

வ்வொருமுறை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படும்போதும் அவருக்குக் கிடைக்குமா, இவருக்குக் கிடைக்குமா என்று வெளிநாட்டில் விவாதங்கள் நடக்க, நம் ஊரிலோ ‘ஆஸ்கர்னா என்ன’ என்ற ரேஞ்சில்தான் இருப்பார்கள். ஏன் நம் தமிழ்ப்படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கலை? கொஞ்சம் வித்தியாசமா யோசிப்போமா?

‘இந்தியன்’ படத்துக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கலை தெரியுமா? ‘பச்சைக்கிளிகள் தோளோடு’ பாட்டுல கமல் 500 ரூபாய் நோட்டுல கப்பல் செஞ்சு விடுவார். ரூபாய்க்கும் ஆஸ்காருக்கும் என்ன சம்பந்தம்? அவர் டாலர் நோட்டிலேயா கப்பல் விட்டார்னு யாரும் கேட்க வேணாம். கொஞ்சம் முன்னப் பின்னே இருந்தாலும், நம்ம பணத்துக்குனு ஒரு மதிப்பு இருக்குதானே?! இதே மாதிரி, ‘நாயகன்’ல வேலுநாயக்கர் செத்தப்போ தொப்பியைக் கழட்டாத கான்ஸ்டபிள்னால ஒரு ஆஸ்கார் போச்சு!

நம்ம ‘சின்னக் கவுண்டர்’ல எந்தப் பிரச்னையும் இல்லை. ஆஸ்கார் கிடைச்சுருக்கணும். ஆனா, அதில் கேப்டன் துண்டை வெச்சு பண்ணின சாகஸம் வெள்ளைக்காரனுக்குப் புரியலை. `ஒரு துண்டு விழுந்ததுக்கு எதுக்கு இவ்ளோ ஃபீல்? கண்ணையெல்லாம் வேற ரோல் பண்றாரு. குனிஞ்சு எடுத்துக்க வேண்டியதுதானேனு நாக்கு மேல பல்லைப் போட்டானுக. ஆஸ்கரும் போச்சு!

சரி அத விடுங்க. விஷயம் அது இல்லை, டைரக்டர் ஷங்கரைப் பற்றியது. அவரோட ‘முதல்வன்’ படத்தோட கதை காப்பி. ஏன்னா அந்தக் கதையை எழுதியது நான். அதுக்காக முழுசாவே காப்பினு சொல்ல முடியாது. உதாரணமா, நான் எழுதுன ஒரிஜினல்ல ஹீரோயின், வில்லன் கேரக்டர்லாம் இல்லை. அதெல்லாம் கமர்ஷியல் வேல்யூவுக்காக ஷங்கரே சேர்த்துக்கிட்டார். ஆனா மூலக்கதைதான் முக்கியம்ங்கிறது எல்லாத்துக்கும் தெரியும். அதை எடுத்துக்கிட்டு இயக்குநர்கள் புகுந்து விளையாடுறாங்க. ஒரு 2000 ஃபாலோயர்ஸ் உள்ள ஒருத்தரைப் பிடிச்சு மூலக்கதையை மட்டும் காப்பியடிக்கிற மட்டமான இயக்குநர்களைப் போட்டுப் பொளக்கலாம். பாதிக்கப்பட்ட யாரா இருந்தாலும் சரி. சங்கமே அவருக்கு பட ரிலீஸைத் தடுத்து நிறுத்த இலவச சட்ட ஆலோசனையும் வழங்கி, படத்தின் ஹீரோகிட்ட இருந்து பேட்டா வாங்கிக் கொடுக்கணும். 50 சதவிகிதம் கம்பெனிக்கு. சங்க விதிகளை நிர்ணயிக்க பொதுக்குழு கூடி முடிவெடுத்துக்கலாம். என்ன சொல்றீங்க?

அது சரி என்னோட ‘மூலக்கதை’ என்னனு கேளுங்க (இதுதான்பா நான் லீனியர் ரைட்டிங்). நான் அந்தக் கதையை எழுதும்போது எனக்கு வயசு 14. ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். ‘நான் முதல்வரானால்...’னு தலைப்பு வெச்சு நான் எழுதுன ஒரு கட்டுரைதான் (கட்டுரையைத் திருடியெல்லாம் படம் எடுக்கிறாய்ங்க, என்னத்த சொல்ல?) அது! 

‘முதல்வராகி சாதியை ஒழிச்சேன், தமிழ்நாட்டை ஜப்பானா மாத்தினேன். (நெறைய ஜப்பான்காரனுகளாப் பாத்து இங்கே வர வெச்சுக் குடி வெச்சுட்டோம்னா தமிழ்நாடு ஜப்பானா மாறிடும், நம்ம பயலுவ எத்தன நாளக்கிதான் உள்ளூர் ஃபிகருகளை சைட் அடிப்பாய்ங்க? அப்படியே, நூடுல்ஸைத் திராவிட உணவா மாத்திடுவேன்!) ஊழலை ஒழிச்சேன், ரவுடிகளைத் திருத்தினேன். எல்லாத்தையும் விட எங்க ஸ்கூலை உடனே கோ-எஜுகேஷனா மாத்தணும்னு ரூல்ஸ் போட்டேன், ஸ்கூல் மெஸ்ஸுல பொங்கல்போட உடனே பரிசீலனை பண்ணனும்னு உத்தரவு போட்டேன்.

இப்போ பாத்தீங்கனா என்னோட கதையாய் மாறிய கட்டுரைக்கும், ‘முதல்வன்’ படத்துக்கும் வித்தியாசமே இல்லை... எனக்கு நஷ்டஈடு மாதிரி ஏதாவது கிடைக்குமா பாஸ்?

- சிவகுமார் கனகராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick