ஓ... இது இப்பிடிப் போகுதா?

சில விஷயங்களை நாம ஒரு ஆங்கிள்ல பார்த்துக்கிட்டு இருப்போம். ஆனா, ரியாலிட்டி என்னவோ வேறயா இருக்கும். அட ஆமாங்க... நீங்களே பாருங்களேன்!

பஸ்ஸுல அல்லது ட்ரெயின்ல ஜன்னல் ஓர சீட்டுதான் வேணும்னு அடம்பிடிக்கிற ஆட்களைப் பார்த்திருப்போம். பயணத்தை ரசிக்கிறவங்க, இயற்கையை நேசிக்கிறவங்க அணுஅணுவா ரசிச்சுக்கிட்டே போறதுக்குத்தான் அப்படி உட்கார ஆசைப்படுறாங்கனு தப்புக்கணக்கு போட்டுடக்கூடாது. பஸ்ஸோ, டிரெயினோ ஒத்துக்காத, வாந்தி எடுக்குறதுக்கு வசதியா இருக்கும்னுகூட, ஜன்னல் சீட்டுக்குத் துண்டைப் போட்டிருக்கலாம்!

ஆபீஸ், டிராவல், பீச்னு எங்கே போனாலும், எந்நேரமும் சிலர் காதுல ஹெட்செட்டை மாட்டிக்கிட்டே இருக்கிறாங்கன்னா, அவங்க பெரிய இசைப் பிரியராகவோ, ஆபீஸ்ல வேலை பார்க்கிற `உயர் அதிகாரி'யா இருப்பாங்களோனு தப்புத்தப்பா யோசிக்கக்கூடாது. குளிருக்கு ஒரு சப்போர்ட்டா இருக்கட்டும்னுகூட ஹெட்செட்டை மாட்டிக்கிட்டுத் திரியலாம். #அட, அந்த ஏ.சி-யைக் கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா!

`வீக் எண்ட் ஆச்சுனா, எங்க வீட்டுக்காரர் கட்டாயம் ஃபேமிலியோட ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாரு. சமத்து'னு உங்க கணவரைத் தலையில் தூக்கி வெச்சிக்கிட்டுச் சுத்துற வெகுளிப் பெண்ணா நீங்க? உங்க நினைப்புல இடி விழ... வாரத்தில் ஒருநாளாச்சும் நல்ல சாப்பாடு வாங்கிக்கொடுத்து, `இதுக்குப் பேருதான் சமையல். இதுக்குப் பேருதான் சாப்பாடு. கழனித் தண்ணி மாதிரி வைக்கிறதுக்குப் பேரெல்லாம் சாம்பார் இல்லை'னு சொல்லாம சொல்லிப் புரியவைக்கிறதுக்குக்கூட கூட்டிக்கிட்டுப் போகலாம் இல்லையா? #அய்யய்யோ... உண்மையைச்  சொல்லிட்டேனே? ஸாரி குடும்பத்தலைவர்ஸ்!

`அந்த டீக்கடையில மட்டும் ஏன் பசங்க கூட்டம் அள்ளுது? ஒருவேளை ஒட்டகப் பால்ல டீ போடுறாரா, ஊட்டித் தேயிலையில டீ போடுறாரா?' சட்டியை எட்டுப் பார்த்து சந்தேகப்படுவோம். ஆனா, டீக்கடைக்கு எதிரே லேடீஸ் ஹாஸ்டல் இருக்கிறதும், கடையில நின்னு பார்த்தா, அந்த ஹாஸ்டலோட பால்கனி தெரியிற அமைப்புல இருக்கிறதும் ஒரு காரணமா இருக்கலாம். இல்லைன்னா, அந்தக் கடையிலதான் எல்லோருக்கும் `அக்கவுன்ட்' இருக்கலாம்! #என்ன நான் சொல்றது?

`கொடுக்கிறது மிஸ்டுகால்... ஆனா காலர் டியூன் வைக்கிறதுல மட்டும் குறைச்சல் இல்லை'னு உங்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தவங்களைப் பார்த்து நொந்துக்குறீங்களா? அப்படியெல்லாம் நினைக்காதீங்க பாஸ். கம்பெனிக்காரன் தானாகவே முன்வந்து காலர் டியூனை ஆக்டிவேட் செஞ்சு, காசு புடுங்குறதுக்காகப் பண்ண அலப்பறையாக்கூட இருக்கலாம். #ப்ளீஸ் மக்களே, அவங்களைத் திட்டாதீங்க!

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick