கொக்கிபீடியா - வைகோ

பெயர்: வை.கோபால்சாமி ( எ) வைகோ

பிறப்பு: 22 மே, 1944

வயது: 72

இருப்பிடம்: சென்னை

வைகோ என்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

வகித்த பதவிகள்:

மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

சாதனைகள்:

வைகோ இதுவரை பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். பாலில் விழ வேண்டிய பழத்தை உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கியது இவரது சமீபத்திய சாதனை. ‘சின்னக்கவுண்டர்’ படத்தில் வரும் விஜயகாந்தைவிட துண்டை வைத்து சாவடி சாகசங்கள் செய்வார். `எல்லாச் சாலைகளும் ரோமைச் சென்றடைகின்றன' எனும் பழமொழி உண்மையெனில் இவர் நடந்த நடைக்கு குறைந்தது இருபது, இருபத்தைந்து முறையாவது ரோம் நகருக்குச் சென்று வந்திருப்பார். ஏப்பம்பட்டியில் ஒரு பிரச்னை என்றாலும் ஏதென்ஸ் நகரம் வரை உதாரணம் சொல்வார். வரலாறு, குடிமையியல், புவியியல் எனச் சமூகஅறிவியல் புத்தகத்தின் மொத்த வடிவம் இவர் எனலாம். இவர் உரை நம் கணக்கு வாத்தியாரை ஞாபகப்படுத்தும். உரையைக் கேட்கும்போதெல்லாம் கண்கள் சொக்கி, கபாலம் தொங்கிவிடும். சிகரெட் குடிப்பது சமூகத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இவர் கூறியது பலர் நெஞ்சில் புகையிலை பாய்ச்சியது. ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’ என்ற ஒரே டயலாக் மூலம் உலகப்புகழ் அடைந்த நாஞ்சில் சம்பத், இதற்கு முன்னர் இவர் கட்சியில்தான் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். வைகோ எனும் பெயரைத் திருப்பிப்போட்டால் கோவை என வரும். கோவை என்பது கோயம்புத்தூரைக் குறிக்கும், அது ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ எனவும் அழைக்கப்படுகிறது. வைகோ தன் வாழ்நாளில் பல ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறார் என அவரே ஒருமுறை சொல்லியிருக்கிறார். சட்டமன்றத்தில் தி.மு.க. தோற்றது இவர் ராஜதந்திரத்தால்தான் என்பதுபோல் ஐ.பி.எல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றது, கலக்கப்போவது யாரு போட்டியில் குரேஷி வென்றதுகூட இவரது ராஜதந்திரமாக இருக்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick