டெக்மோரா

கூகுள் Daydream VR ஹெட்செட்

விர்ச்சுவல் ரியாலிட்டி... சில வருடங்களுக்கு முன்னர் ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சினிமா, கேமிங், இசை, செய்திகள் என இதனை மையப்படுத்திய சந்தை விரிவடைந்துகொண்டே செல்கிறது. அதனை குறிவைத்து புதிய கேட்ஜெட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். சாஃப்ட்வேர் துறையில், கோலோச்சி வரும் கூகுள், தற்போது ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கிவிட்டது. முதல் கட்டமாக கூகுள் பிராண்டில், பிக்ஸல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய கூகுள், அத்துடன் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டையும் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னரே பல VR கண்ணாடிகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதை மனதில் வைத்து, இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறது கூகுள். கண்களில் அணிந்துகொள்ளும் ஹெட்செட் மற்றும் அதனை இயக்கும் கன்ட்ரோலர் என இரு பாகங்கள் இதில் இருக்கின்றன. கண்களில் அணியும் ஹெட்செட் கண்களுக்கு உறுத்தாத வகையில், மென்மையான துணியால் செய்யப்பட்டுள்ளது. எடையும் குறைவு. இதனை போனுடன் இணைப்பது மிக சுலபம். ஹெட்செட்டை திறந்து, நமது போனை வைத்து லாக் செய்துவிட்டால் போதும். விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் ரெடி. கன்ட்ரோலர் மூலமாக, இதனை இயக்கலாம். இதன் ஒரே சிக்கல்... இப்போதைக்கு இதனை கூகுள் பிக்ஸல் போனில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் நிறைய போன்கள் Daydream வசதியுடன் வரும் என்பதால், நிறைய ஆப்ஷன்கள் கிடைக்கும் என்கிறது கூகுள்.

கன்ட்ரோலர் மிக சிறிய ரிமோட் போலத்தான் இருக்கிறது. இதனை தொலையாமல் பாதுகாக்க, ஹெட்செட்டுக்குள்ளேயே செருகி வைத்துக் கொள்ளலாம். நாம் யூ-டியூபில் இருக்கும் வீடியோக்களையே, இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி முறை மூலமாக பார்க்க முடியும். இதனால் சிறிய வீடியோக்கள்கூட, திரையரங்கத்தில் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இதற்கென இருக்கும் பிரத்யேக கேம்களை விளையாடலாம். விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தி நிறைய திரைப்படங்களும் வரவிருக்கின்றன. செய்திகள், இசை, படங்கள், டி.வி, மேப்ஸ் எனப் பல விஷயங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வரவிருக்கின்றன.

நவம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரவிருக்கிறது. விலை 79 டாலர்கள். மூன்று நிறங்களில் கிடைக்கும்.

- டெக்கி கய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick