தண்ணிமேல ஒரு நாடு!

ம் ஊரில் வாய்க்கால் தகராறுக்காகப் பல வருஷமா நடக்கிற பஞ்சாயத்தெல்லாம் பார்த்திருப்போம். அதுமாதிரி ஒரு குட்டி நாட்டுக்காக பல வருஷமா நடந்துட்டு வர்ற சுவாரஸ்யமான பஞ்சாயத்தைப் பார்ப்போமா?

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஜெர்மனியோட நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், போர்க் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பறதுக்காகவும் கடலில் பல இடங்களில் இங்கிலாந்து, முறைகேடாக தளவாடங்களை அமைச்சது. அதுல ஒண்ணுதான், ரஃப் டவர். போர் எல்லாம் முடிஞ்சதும் வேலையே இல்லாம ரொம்பப் போர் அடிச்சதாலோ என்னவோ... அங்கிருந்து ராணுவமும் 1956-ம் ஆண்டு கிளம்பிருச்சு. பொறம்போக்கு இடத்துக்கு நாம் பட்டா போட்டுவைப்போமேனு பல வருடங்கள் கழிச்சு, முன்னாள் இங்கிலாந்து ராணுவ மேஜரான பேடி ராய் பேட்ஸ் இந்த இடத்தில் போய் குடியும் குடித்தனமுமா செட்டில் ஆகிட்டார். இங்கிலாந்து அதிகாரிகள் என்னென்னவோ பண்ணிப்பார்த்தும் பேட்ஸ் அசர்ற மாதிரி தெரியல. `ஓனர்னா ஓரமா போக வேண்டியதுதானே'ன்னு அங்கேயே பட்டா போட்டு உட்கார்ந்துட்டார்.

1967-ல் இந்த இடத்தை `ப்ராப்பர்ட்டி ஆஃப் சீலேண்ட்'னு பேர் வெச்சுத் தனிநாடா அறிவிச்சுத் தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டார் பேட்ஸ். பதறிப்போன இங்கிலாந்து அதிகாரிகள் இவருக்கு எதிராக வழக்குப் பதிவு பண்ண, அது நம்ம எல்லையிலேயே இல்லையே எப்படி விசாரிக்கிறதுனு நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. சர்வதேசக் கடல் எல்லையில் இந்த `ரஃப் டவர்' இருந்ததுதான் அதற்குக் காரணம். அதுக்கப்புறமா தன்னோட நாட்டுக்குனு ஒரு கொடி, நாணயம், ஸ்டாம்ப்லாம் வெளியிட்டு அலப்பரை பண்ணியிருக்கார் மனுசன். இத்துடன் நிற்காமல் பல பேருக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் கொடுத்திருக்கார்னா பார்த்துக்கோங்க! `தேவாவுக்கு ஒண்ணும் ஆகாது. யார் சொன்னா? தேவாவே சொன்னான்' மாதிரி... எந்த நாடும் சீலேண்டை ஒரு நாடாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், `உலகத்துலயே குட்டிநாடு நாங்கதான்'னு அந்த நாடே அறிவிச்சிருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick