சென்னைக்கு அருகில் சினிமா!

பல நாடுகளில் இருந்தாலும், கன்னட சினிமாவான `லூசியா'தான் `கிரவுட் ஃபண்டிங்' எனப்படும் கூட்டாகப் படங்களைத் தயாரிக்கும் முயற்சிகளுக்கு இங்கே விதை போட்டது. தமிழிலும் சில முன்னெடுப்புகள் நடந்தாலும் பெரிய அளவிலான வரவேற்போ, கவனிப்போ `கிரவுட் ஃபண்டிங்' சினிமாக்களுக்கு இல்லை. இந்நிலையில், ரொம்பவும் வித்தியாசமாக ஒரு `கிரவுட் ஃபண்டிங்' முறையில் திரைப்படங்களைத் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் `ரீமேக்' படங்களின் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா. அவரிடம் பேசினேன்.

``கன்னடத்தில் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம்னு `கிரவுட் ஃபண்டிங்' முறையில் தயாரான படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனா, தமிழ் சினிமாவில் அந்த நிலைமை இல்லை. ஏன்னா, இங்கே எல்லோருக்கும் ஒரு தயக்கமும், பயமும் இருக்கு. அதையெல்லாம் உடைச்சு எறியணும்னுதான் ரியல் எஸ்டேட் தொழிலையும், சினிமா தயாரிப்பையும் இணைச்சு, `டிரினிட்டி ஃபிலிம் பேக்டரி'னு ஒரு நிறுவனம் தொடங்கியிருகேன். நான் மட்டுமில்ல, என்னுடைய நண்பர்களும் இந்த முயற்சியில் உள்ளார்கள்!'' என சுருக்கமான முன்னுரையுடன் தொடர்ந்தார்
ஏ.ஆர்.கே.ராஜராஜா.

 ``எல்லா சினிமாவும் ஜெயிக்கும்கிற நம்பிக்கையில்தான் தயாராகுது. ஆனாலும், சினிமாவில் 20 லட்சம் முதலீடு பண்ற ஒருத்தருக்கு கொடுத்த பணம் திரும்ப வரும்னு தயாரிப்பாளரோ, இயக்குநரோ உறுதியான உத்தரவாதம் கொடுக்க முடியாது. `கிரவுட் ஃபண்டிங்' முறையில் சினிமா தயாரிக்கணும்னு நினைக்கிற எல்லோருக்கும் இது பெரும் பிரச்னை. இந்த நிலைமையில்தான், ரியல் எஸ்டேட் பிசினஸையும், சினிமாவையும் இணைக்கிற ஐடியா தோணுச்சு. உதாரணத்துக்கு, நாங்க தயாரிக்கிற படத்துக்கு நீங்க 20 லட்சம் முதலீடு பண்றீங்கனு வெச்சுக்கோங்க. அந்தப் பணத்தோட மதிப்புக்கு வீட்டுமனையை உங்க பெயர்ல பதிவு பண்ணிக் கொடுத்துடுவோம். படத்தைத் தயாரிச்சு, அதில் வர்ற லாபமும் அவங்களுக்குக் கிடைக்கும். ஒருவேளை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலைனா நிலம் உங்களுக்கே சொந்தம். நஷ்டத்துக்கு வாய்ப்பு இருக்காது. படம் நல்லபடியா ஓடி வெற்றி பெற்றதுன்னா கிடைக்கிற முதலீட்டுடன், லாபத்தில் பங்கும் வேணும்னு நினைச்சாலும், நிலத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்கலாம். `எங்கேயோ பொட்டல்காட்டுல கிடக்குற நிலத்தைக் கொடுத்து ஏமாத்திடுவாங்க'னு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஏன்னா நிலங்களை கொடைக்கானல், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகள்ல முக்கியமான இடங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கோம். ஏற்கெனவே ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இருக்கிற என்னுடைய நண்பர்கள்தான், இந்த நிலத்துக்குச் சொந்தக்காரங்க. ஸோ, நாங்க தயாரிக்கிற படங்களுக்கான நஷ்டம் எங்களுக்குத்தானே தவிர, முதலீடு செஞ்சவங்களுக்கு இல்லை. முதலீடு பண்றவங்களோட திறமைக்குத் தகுந்த மாதிரி டெக்னீஷியனாகவும் வேலை பார்க்கலாம். நடிகராகவும் ஜொலிக்கலாம்!'' என்ற ராஜராஜாவிடம், `சரி, இதனால் உங்களுக்கு என்ன பயன்?' என்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick