ஜில் ஜில் நாகினி!

மௌனி ராய்... சன் டி.வி ‘நாகினி' சிரீயலின் பாம்புப் பெண்ணாக கிளாமரில் கலக்கும் நாயகி. சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆண்கள் பலரும்கூட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். காரணம் பெண் நாகமாக வரும் இந்த மௌனி ராய் தான். ‘அட...யாருப்பா இந்தப் பொண்ணு!’ என்று ஆராய்ந்ததில்...

மெளனி ராய்க்கு நடிப்பு, மாடலிங் இரண்டும் பிரதான வேலைகள். மேற்கு வங்காளத்தில் 28 செப்டம்பர் 1985-ல் பிறந்தவர். உயரம் ஐந்து அடி ஆறு அங்குலம். ஆங்கில இலக்கியமும், மாஸ் கம்யூனிகேஷனும் படித்த செம ப(டி)ப்பாளி! இப்போது இருப்பது மும்பை. அப்பா சூப்பரின்டென்ட், அம்மா டீச்சர். ஒரு செல்லத் தம்பி.

2007-ல் ‘கியூன்கி சாஸ் பி கபி பஹு ஹி’ இந்தி சீரியல் மூலம் அறிமுகம். கலர்ஸ் சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியான ‘ஜலக் திக்லா ஜா’ சீசன்7-ல் போட்டியாளராக நடனத்திலும் மாஸ் காட்டியவர்.

இப்போது தமிழில் டப்பாகியிருக்கும் நாகினி சீரியலான இரண்டாவது சீசன் மட்டுமல்லாமல் நாகினியின் முதல் பாகத்திலும் மௌனிதான் நாயகி. ‘பதி பத்னி அவுர் வோஹ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் சக போட்டியாளர் தெபினா பானர்ஜியுடன் சண்டையிட்டு டி.வி-யின் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு உதவியவர்.

அது ஒரு வினோதமான நிகழ்ச்சி. ஜோடி ஜோடியாக இருக்கும் போட்டியாளர்களுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களுக்கான வேலைகள்தான் போட்டியே. ‘சிறந்த பெற்றோர்’ எனப் பெயர் வாங்க வேண்டும். அப்புறம் சண்டை வராமல் எப்படி இருக்கும்?

ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என மௌனி ராய் ஒரு ரவுண்டு வந்துவிட்டதால் இடையில் ‘ஸோ யூ திங்க் யூ கேன் டான்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகும் வாய்ப்பு வந்ததும் யோசிப்பதாகக் கூறியுள்ளார். காரணம் ‘நாகினி’ சீரியலின் புகழும், அதற்காக ஒதுக்கியுள்ள கால்ஷீட்டும்தான்! சம்பளமும்தான் பாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick