சினிமால்

விஷ்ணுவை வைத்து ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ என்ற படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் கண்ணன். ஆனால், விஷ்ணு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்ததால் கௌதம் கார்த்திக்குக்கு ஒரு கதை சொல்லி கால்ஷீட் வாங்கி விட்டார்.  தன் ஆஸ்தான கேமராமேன் முத்தையாவுக்குப் பதில் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் மோகன் என்பவரை இப்படத்தில் ஒளிப்பதிவாளராக்கி விட்டார். தவிர, ஒரே மாதத்தில் மொத்த ஷூட்டிங்கையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் கண்ணன்.

தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் சாவித்திரியை யாரும் மறந்துவிட முடியாது. குறுகிய காலத்தில் புகழின் உச்சியை எட்டி, பின் தயாரிப்பில் கால் வைத்து நஷ்டப்பட்டு 46 வயதில் இறந்தவர். இப்போது இவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். இதற்காக சாவித்திரி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற படக்குழு, சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை நித்யா மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

‘பிச்சைக்காரன்’ படத்திற்குச் தெலுங்கிலும் அமோக வரவேற்பு. 100 நாள் ஓடி பிரமாண்ட வெற்றி பெற்ற இப்படத்தை, இப்போது அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யும் முயற்சியை எடுத்திருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர். விஜய் ஆண்டனியே ஹீரோவாக நடிக்க ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பது, ஹிந்தியின் முன்னணி நாயகி தான்!

ஏ.ஆர்.முருகதாஸில் இருந்து வளர்ந்து வரும் அட்லீ வரை எல்லோருமே தங்கள் வழியில் தல அஜித் கால்ஷீட்டுக்கு காய் நகர்த்தி வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து விட்டார். நயன்தாரா மூலமாக அஜித்தை அணுகி கதை சொல்ல அப்பாயின்ட்மெண்ட் கேட்டு வருகிறாராம். மேலும் அஜித் ஓகே சொல்லும்பட்சத்தில் நயன்தாராவே இப்படத்தைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம். சிவா இயக்கும் படம் முடிந்தபிறகு பேசலாம் என்றிருக்கிறார் அஜித்.

அமிதாப் பச்சன் நடித்த ‘சர்க்கார்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார் ராம்கோபால் வர்மா. இரண்டாம் பாகத்தில் நடித்த அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. அமிதாப் பச்சனோடு நடிக்க வேறு நடிகர், நடிகையைத் தேடிக்கொண்டிருக்கிறாராம் ராம்கோபால். இந்த வருடத்தின் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் தயாராகும் கார்ட்டூன் படங்களுக்கு ஹீரோ, ஹீரோயின்களே விலங்குகளுக்கும், கார்ட்டூன் கேரக்டர்களுக்கும் குரல் கொடுப்பது வழக்கம். அதேபோல தமிழில் உருவாகி வரும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் ஒரு வாஸ்து மீன் நடிக்கிறது. படத்தில் இந்த மீன் ‘பேசும் மீனா’கவே நடிக்கிறது. இந்த மீன் கேரக்டருக்குப் பணமே வாங்காமல் டப்பிங் கொடுத்திருப்பவர், நம்ம விஜய் சேதுபதி.

‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்.ஜே.பாலாஜி காட்டில் அடைமழை. ‘தேவி’, ‘கவலை வேண்டாம்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘காற்று வெளியிடை’, ‘கீ’ என வரிசையாகப் பல படங்களில் நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து சிவகார்த்திகேயன் படத்திலும் காமெடியனாகத் தலை காட்டுகிறார்.

ஒரு கட்டத்தில் வில்லனாக பயமுறுத்திய மொட்டை ராஜேந்திரனுக்கு காமெடி பட வாய்ப்புகள் குவிய, குழந்தைகள் விரும்பும் நடிகராக மாறிப் போனார். குழந்தைகள் காமெடியை விரும்பியதால் வில்லன் ரோல்களை தவிர்த்து வந்தவர், தற்போது காமெடி ரோலுக்கு நடித்து போரடித்துவிட்டதால், மீண்டும் வில்லன் கேரக்டர்களை விரும்புகிறாராம். படப்பிடிப்பில் இருக்கும் ‘மோகனா’, ‘சைவ கோமாளி’ படங்களுக்கு வில்லன் இவர்தான்!

‘கேடிபில்லா கில்லாடிரங்கா’வுக்குப் பிறகு இப்போதான் ரெஜினாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் நிறைய நல்ல வாய்ப்புகள் வருவதால் எதையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார். தற்போது அமிதாப் நடிக்கும் ‘ஆங்கென் 2’ இந்தி படத்திலும் ரெஜினா தான் நாயகி. தமிழில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் எனக் கூறும் ரெஜினா, இப்படத்திற்குப் பிறகு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick