"ஜெயலலிதா இடத்தைப் பிடிப்பேன்!"

டாலடி பேட்டி அளிப்பதில் விஜயதாரணி தனி ரகம்! சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவான இவரை தற்போதைய சட்டமன்ற  சலசலப்புகள், கிண்டல், கேலிகள் மற்றும் உள்கட்சிப்பூசல் என விரிவாகப் பேச சந்தித்தேன்.

‘‘தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுதான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்? கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்தான், இந்தச் சிக்கலுக்குக் காரணமா?”


``தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான நேர்காணலைக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராகுல்காந்தி நடத்தியுள்ளார். விரைவில் விபரங்கள் வரும்! மற்றபடி, கோஷ்டிப் பூசல் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிற ஒன்று. எங்கள் கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் இல்லை. சில கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருந்தாலும், கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. விரைவில் தலைவர் அறிவிக்கப்படுவார்!''

‘‘பெரும்பான்மையாக இருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களாலேயே சட்டமன்றத்தை சமாளிக்க முடியவில்லையே?”

``திமுக-காங்கிரஸ் கூட்டணி 98 உறுப்பினர்களுடன் பலம் பொருந்திய கட்சியாக சட்டமன்றத்திற்குள் இருக்கிறது. அவையில் பாதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மக்கள்நலன் சார்ந்த விஷயங்களில் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒரு விவாதம் நடைபெற்று, நிறைவேற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். காலி அவையைப் பார்த்துதான் 110 அறிக்கையும், விவாதமும் நடந்துக்கிட்டு இருக்கு. இதனால், மக்களுக்கு ஒரு பயனும் இல்லை!''

‘‘ஜெயலலிதாவை எதிர்த்துப்பேச முடியாது என்ற பிம்பத்தை சசிகலா புஷ்பா உடைத்திருக்கிறார். சக பெண் அரசியல்வாதி என்ற முறையில் உங்கள் கருத்து?”


``தி.மு.க எம்.பி சிவாவை அவர் அடித்தது தவறு. ஆனால், அதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அதோடு முடிந்தது. மீண்டும் மீண்டும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் அழுத்தத்தில்தான் இந்த எதிர்ப்பு மனநிலை அவருக்கு உருவாகியிருக்கிறது. சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெயலலிதாவின் பிம்பம் உடைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கான துன்புறுத்தல்களை அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் சசிகலா புஷ்பாவிற்கு தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதையும் அவர் எதிர்கொண்டுதான் வருகிறார். தவறு யார்மீது என்பது அவர்களுக்குப் புரியும். சசிகலா புஷ்பாவின் தைரியத்திற்கு சமூகம் துணை நிற்கும்!''

‘‘பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி?”

‘‘ `மதரீதியாக மக்களை அச்சுறுத்தும் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகளை உங்கள் கட்சியில் இருப்பவர்களே செய்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும் நெஞ்சுரம் உங்களுக்கு இல்லையா?' என மோடியிடம் கேட்கிறேன். ஜெயலலிதாவிடம், ‘சட்டப்பேரவையில் நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்களே? எனக்கும் வாய்ப்பு கொடுத்தால்தானே நீங்கள் உட்கார்ந்த இடத்தை நான் பிடிக்கமுடியும்?’ எனக் கேட்க விரும்புகிறேன்.''

‘‘காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விஷயமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?”

``நாங்கள்தான் இந்த நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அதை மக்களிடம் சொல்லத் தவறிவிட்டோம். அதாவது, எங்களை நாங்களே கொண்டாட மறந்துவிட்டோம்! இனி தொடர்ந்து அதைச்செய்து, கட்சியை அசுரவேகத்தில் வளர்த்தெடுப்போம்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick