வாழ்க்கையே குறியீடுதான்!

சினிமாவில் மட்டும் இல்லை. வாழ்க்கையிலேயும் பல விஷயங்களைக் குறியீடுகள் மூலமா புரிஞ்சுக்கலாம். புரிஞ்சிக்கலாமா?

 காலங்காத்தால தண்ணி வரலையா? ஓனர் இன்னும் மோட்டார் போடலையா? ஹவுஸ் ஓனர்கிட்ட கடும்கோபமா போய் சண்டை போடணும்ங்கிற எண்ணத்தை உடனடியா டிஸ்கார்ட் பண்ணிட்டு அப்படியே திரும்பித் தேதியைப் பாருங்க. வாடகை கொடுக்க வேண்டிய தேதியாகிருக்கும். மோட்டார் கண்டுபிடிச்ச உடனே இந்த ஐடியாவுக்கும் சேர்த்து ஹவுஸ் ஓனர்ஸ் பேடன்ட் வாங்கி வெச்சுருக்காங்க.

கடைக்காரர் நம்மகிட்ட வாங்கின 100 ரூபாயைக் கையில் வெச்சுக்கிட்டே கல்லாவைத் திறந்து காத்துலேயே கையை அசைச்சு அங்கிட்டும் இங்கிட்டும் ரொம்ப நேரமா தேடுறார்னா சில்லறை இல்லைனு சொல்லப்போறார்னு அர்த்தம்.

‘ஒரு டிக்கெட் எக்ஸ்ட்ரா இருக்கு. வர்றியா’னு ஃப்ரெண்ட்கிட்டேயிருந்து கால் வந்தா, ‘உனக்காக புக் பண்ணலை. வேற எவனும் வர மாட்டான். நீ வெட்டிதானே. வந்து தொல’ இப்படிப் பலவிதமான உள்ளர்த்தங்கள் இதில் பொதிஞ்சு கிடக்கு.

டெய்லி ஈவ்னிங் மட்டுமே கால் பண்ற அம்மாகிட்டேயிருந்து நட்டநடு ஆபீஸ் டைம்ல போன் வந்தா, சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா DTH ரீசார்ஜ் பண்ண மறந்துருப்பீங்க.

கெஞ்சிக் கூத்தாடி கொடுத்துட்டு வந்த வேலையை ஆபீஸ் ஃப்ரெண்ட் செம்மையா சொதப்பிட்டானா? சிம்பிள். பொய் சொல்லிட்டு தியேட்டர் போனதை ஃப்ரெண்ட் கண்டுபிடிச்சிட்டான். இதுக்கு ஒரே தீர்வு சரக்கு ட்ரீட்தான்.

ஜன்னலோரமா உட்கார்ந்துருக்கிறவர் இயர்போனை சரசரன்னு உருவி எட்டா மடிச்சு பேன்ட் பாக்கெட்ல திணிச்சா, வரப்போற ஸ்டாப்ல இறங்கப் போறார்னு நாமளா புரிஞ்சுக்கணும். பக்கத்து சீட் வரைக்கும் ஆக்கிரமிச்சிருக்கிற நம்ம தொடையை மடக்கி அவருக்கு வழிவிடத் தயாராகிக்கணும்.

என்னைக்கும் பாராட்டாத மேனேஜர், திடீர்னு பாராட்டுறார்னா அதுவும் பொண்ணுங்க முன்னாடி ஹெவியா பாராட்டுறார்னா, புதுசா ஏதோ பெரிய ஆப்புக்கு நம்மைப் பலிகடா ஆக்கப்போறார்னு அர்த்தம். அலெர்ட் ஆகிக்கடா ஆறுமுகம். அலெர்ட் ஆகிக்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick