புகுந்து விளையாடலாமா?

ம்மாத்தூண்டு கம்ப்யூட்டருக்குள் ஆயிரத்தெட்டு தகவல்களைத் தட்டி வைக்கிறோம். கம்ப்யூட்டரும் நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறது. எனில், அந்தக் கம்யூட்டருக்குள் புகுந்து `எப்படிச் செயல்படுகிறது?' என எட்டிப்பார்த்துவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் எடக்கு மடக்கான கற்பனையா தோணுதா? இதைத்தான் வெற்றிகரமாக சாதித்துக் காட்டியிருக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர் ஜேம்ஸ் நியூமன்!

விஷயம் இதுதான். கணினிக்கான ஒரு புரோகிராமில் நடக்கும் முழு ப்ராசஸிங்க்கையும் டிவி-யில் ஸ்லோமோஷனில் ஓடவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஜேம்ஸ் நியூமன் உருவாக்கியிருக்கும் பிரம்மாண்டமான `சூப்பர் கம்ப்யூட்டர்' இதைத்தான் செய்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன் எனக் கேட்பவர்களுக்கு, ஜேம்ஸ் சொல்லும் பதில், ``எல்லோரும் விதவிதமான கம்ப்யூட்டர் வெச்சிருக்காங்க. ஆனா, அதெல்லாம் எப்படி இயங்குதுனு பலருக்கும் தெரியாது. அதோட அருமை, பெருமைகளைச் சொல்லத்தான் இந்த முயற்சி! இந்த `சூப்பர் கம்ப்யூட்டர்' வழக்கமாக நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களைவிட மில்லியன் மடங்கு மெதுவாக இயங்கும்!'' என்பதுதான்!. அதாவது, இந்தக் கம்ப்யூட்டரில் நீங்கள் எண்டர் தட்டிவிட்டு எழுந்துபோனால், பல்விளக்கி, சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டுவரும் வரைகூட மெதுவாக `எண்டர்' ஆகிக்கொண்டிருக்கலாம்!

40,000 டிரான்ஸிஸ்டர்கள், 10000 எல்.இ.டி பல்புகள் என ஜொலிக்கும் இந்தக் கம்ப்யூட்டர் 500 கிலோ எடை கொண்டது. 10 மீட்டர் நீளமும், இரண்டு மீட்டர் உயரமும் கொண்ட இதை உருவாக்க ஐந்தாண்டு காலமும், 53,000 டாலர்கள் பணமும் செலவு செய்திருக்கிறார் ஜேம்ஸ். இதை உருவாக்கிய நோக்கம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதால், சூப்பர் கம்ப்யூட்டரை கல்வி நிறுவனங்களுக்கோ, மியூஸியத்திற்கோ கொடுக்க இருக்கிறாராம் ஜேம்ஸ்!

- ஜெ.வி.பிரவீன்குமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick