ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ன்னதான் டெக்னாலஜி கண்டமேனிக்கு வளர்ந்து விட்டாலும், பழைய விஷயங்களை இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவதில்லை. அந்தக் காலத்துலன்னு ஆரம்பிச்சு, கொசுவத்தி சுத்துறதில் நம்மை அடிச்சிக்க ஆளே கிடையாது. அப்படிப்பட்ட ஒண்ணுதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடிய ‘தாயம்’ விளையாட்டும். சோழியைக் குலுக்கிப் போட்டு வர்ற எண்ணிக்கையை வெச்சு கட்டங்களுக்குள் காய் நகர்த்தி, பழம் சேர்க்கிற சுவாரசியமான விளையாட்டு அது. `இந்தக் காலத்தில் யார் சார் அதெல்லாம் விளையாடுறா?'னு பெருமூச்சு விடுபவர்களுக்காகவே வந்துள்ளது ‘ISTO’ கேம். அதாவது மொபைலிலேயே நீங்கள் தாயம் விளையாடலாம்.

தேஜஸ் உபதியாய் என்ற இந்தியர் வடிவமைத்துள்ள இந்த ஆண்ட்ராய்ட் கேமில், ஐந்துக்கு ஐந்து என 25 கட்டங்கள் இருக்கும்.  நான்கே நான்கு சோழிகள் இருக்கும்.  ப்ளேஸ்டோர் மூலமாக முதலில் நீங்கள் லாகின் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்; நாம் விளையாடுவதற்குத் தற்போது தயாராகிவிட்டோம். சுழலும் நான்கு சோழிகளை விரல்களால் கலைத்துவிடுவதற்கேற்ப எண் மதிப்பு வரும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் விருப்பப்பட்ட காய்களைக் கடிகாரத்துக்கு எதிர்த்திசையில் நகர்த்த வேண்டியதுதான். நாம் ஒருமுறை சோழியை சுழற்றினால், மொபைல் ஆட்டோமேட்டிக்காக எதிரணி வீரர்களுக்காக மூன்று முறை சுழற்றி காய்களை நகர்த்தும். நமது காயின்கள் பச்சை நிறத்திலும், எதிரணி காயின்கள் நீல நிறத்திலும் இருக்கும். எதிரணியின் காய்களை வெட்டுவது, நமது காய்களை வெட்டுப்படாமல் பாதுகாப்பது எனப் பொதுவாக தாயத்தில் பின்பற்றப்படும் அத்தனை ஆட்டவிதிகளும் இதிலும் உண்டு. பாதுகாப்பாகவும், விரைவாகவும் நமது காயின்களைக்கொண்டு பழம் சேர்ப்பது நமது சாமர்த்தியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick