பேட்டினாலே இதுதானே..!

காலங்காலமா கோலிவுட்ல நடிகர், நடிகைகள் பேட்டியில் புதுசா என்ன பாஸ் சொல்லிடப் போறாங்க? எல்லா டயலாக்ஸும் இப்படித்தானே இருக்கும்...

  ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ புதுசா கல்யாணம் ஆனதும் பேட்டி கொடுத்தாங்கனா கண்டிப்பா சில விஷயங்களைப் பேசுவாங்க. `என் வாழ்க்கைக்கு புது அர்த்தம் வந்திருக்கு, நல்ல வழிகாட்டி கிடைச்சு இருக்காங்க... முக்கியமா என்னோட வேலைக்கு என் மனைவி/கணவர் ரொம்ப உறுதுணையா இருக்காங்க'னு சொல் வாங்க. #உங்ககிட்ட அதைத்தானே சொன் னாங்க, எங்ககிட்டயும் அதையேதான் சொன்னாங்க!

  பேட்டியில் நிறையப் பேர் அவங்க எப்படி சினிமாவுக்கு வந்தாங்கனு கேட்டா மகாபாரதத்தைவிட பெரிய ஃப்ளாஷ்பேக் ஸ்டோரி ஓட்டுவாங்க. என்னதான் பெரிய பெரிய ஸ்டோரியா இருந்தாலும் அவங்களோட ஸ்டோரி எல்லாம் ஒரே மாதிரிதான் பாஸ் இருக்கும். #எங்கேயோ கேட்ட மயக்கம்!

வேற ஸ்டேட்டில் இருந்து வருகிற முக்கால்வாசி ஹீரோயின்கள் `சீக்கிரமே தமிழ் கத்துப்பேன்'னு ஒரு வசனத்தை மறக்காம சொல்வாங்க. என்னதான் தமிழ் கத்துக்கிறேன்னு டயலாக் விட்டாலும் முழுசா கத்துக்கிறதுக்குள்ள ஏனோ மொத்தமா கோலிவுட் இண்டஸ்ட்ரியைவிட்டே போயிடுவாங்க. #ஏங்க... ஏன்?

அறிமுக ஹீரோயின்கள் எல்லோரும் ஆரம்பத்துல, `நான் சவாலான ரோல்ல மட்டும்தான் நடிப்பேன்'னு சொல்வாங்க. `சும்மா வந்துட்டுப் போற ரோலில் நடிக்கிற ஐடியா இல்லை'னு சொல்வாங்க. நடக்கிறது என்னவோ அதுக்கு அப்படியே எதிராத்தான் இருக்கும். எல்லா படத்துலேயும் ஒரே மாதிரிதான் நடிச்சிருப்பாங்க. #வித்தியாசமான வித்தியாசம் ப்ரோ!

கோலிவுட்ல படம் எடுக்கிற டைரக்டர்கள் எல்லோரும் சொல்ற முக்கியமான ஒரு வரி இருக்கு. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லோருமே இந்த வசனத்தை யூஸ் பண்ணியிருப்பாங்க - `இது ஒரு வித்தியாசமான படம், இதுவரைக்கும் தமிழ்ல இந்த மாதிரி படம் வந்தது இல்லை'. பழைய படத்தோட ரீமேக்காதான் இருக்கும். #அதான் இது. இதான்_அது!

மியூஸிக் டைரக்டர் பேட்டி கொடுத்தா கண்டிப்பா `இந்தப் படத்துல உள்ள பாட்டு எல்லாமே மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது, நிச்சயமா ஹிட் ஆகும்’னு சொல்வாங்க. எப்படி பாஸ் எல்லா படத்துல உள்ள எல்லா பாட்டும் மனசுக்கு நெருக்கமா இருக்க முடியும்? பட், சில மியூஸிக் டைரக்டரோட பாட்டு இங்கிலீஷ் பாட்டோட நெருக்கமா இருக்கிறது என்னமோ உண்மைதான். #காப்பி கேட்!

இந்த டான்ஸ் மாஸ்டர்ஸ் இருக்காங்களே, அவங்க சொல்றதுதான் இருக்கிறதுலேயே ரொம்ப பழைய டயலாக்கா இருக்கும். `இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டமான வித்தியாசமான ஸ்டெப்ஸ்லாம் யூஸ் பண்ணி இருக்கோம்'னு எல்லா பேட்டியிலையும் சொல்லியிருப்பாங்க. பட், பாட்டுல என்னவோ அதே `அரைச்ச மாவை அரைப்போமா` ஸ்டெப்ஸ்தான் போட்டிருப்பாங்க. #ஆட்டமா... தேரோட்டமா?

இதெல்லாம் போக எல்லோரும் சொல்ற வழக்கமான ஒரு வசனம் இருக்கு. `ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோரும் ரொம்ப ஜாலியா இருந்தோம். எல்லோரும் ஃபேமிலி மாதிரி பழகினாங்க. நல்லா என்ஜாய் பண்ணோம்' அப்படின்னு கண்டிப்பா சொல்வாங்க. பட், படத்துல நடக்காத சண்டைலாம்கூட ஷூட்டிங் ஸ்பாட்லதான் நடக்கும். எந்த நேரமும் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் மட்டும்தானா பாஸ்?

- லோ.சியாம் சுந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்