களமாடிய டெக்னாலஜி! | youngsters make revolution for Jallikattu - Timepass | டைம்பாஸ்

களமாடிய டெக்னாலஜி!

ல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம், தமிழக அரசால் அவசரச் சட்டம் கொண்டுவரும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. எந்தவிதத் தலைமையும் இல்லாமல் இளைஞர்களும், பொதுமக்களும் தாமாகவே முன்வந்து போராடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் கூட்டம் தாமாகவே கலைந்துவிடும் என ஆரம்பத்தில் நினைத்தவர்களுக்கு, வந்துகொண்டே இருந்த ஆதரவு வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது. கூட்டத்தைக் கலைப்பதற்காக முதல்நாள் காவல் துறை விளக்கை அணைத்ததும், மெரினாவே இருளில் மூழ்கியது. சில நிமிடங்களில் சமயோஜிதமாக யோசித்த இளைஞர்கள், தங்களது மொபைலில் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து மெரினா முழுவதிற்கும் தற்காலிகமாக வெளிச்சமூட்டினர். போராட்டத்தின் வெற்றி அடையாளமாகவே இந்த ஃப்ளாஷ் லைட் வெளிச்சம் மாறிப்போனது. அடுத்தடுத்த நாட்களில், முதல்நாள் விளக்கை அணைத்த அதே நேரத்தில் மொபைலில் இருந்து வெளிச்சத்தைப் பாய்ச்சி கூக்குரலிட்டனர் இளைஞர்கள்.

மற்ற போராட்டங்களைப்போல இல்லாமல், சோஷியல் மீடியா வழியாக ஆதரவு பெருகியதும், அதிகமாக டெக்னாலஜி விஷயங்களைப் பயன்படுத்தியதும் இப்போராட்டமாகத்தான் இருக்கும். யாருக்காவது தண்ணீரோ, உணவோ தேவைப்பட்டால் அதைத் தெரிவிக்கும்விதமாக `ஷோ இட்' என்ற அப்ளிகேஷனில் டைப் செய்து காண்பித்தால் மொபைல் திரையில் அந்த வாசகம் மின்னியது. இதைப் பார்த்த தன்னார்வலர்கள் உடனடியாகத் தண்ணீரையும், உணவையும் கொண்டு வந்து சேர்த்தனர். போராட்டத்துக்கு ஆதரவான வாசகங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக டைப் செய்து காண்பித்து மற்றவர்களும் கோஷமிடும்படி செய்தனர். மொபைலில் சார்ஜ் தீரும் நிலையிலிருந்தால் சிலர் உடனடியாக பவர் பேங்க் மூலம் சார்ஜ் ஏற்றித்தந்தனர்.

உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்ற தேவைகளைத் தீர்க்கும்பொருட்டு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் உடனடியாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. உதவ வருபவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களையும், தேவைப்படுவோர் இடத்தைப் பற்றியும் சோஷியல் மீடியா வழியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். தன்னார்வலர்கள் பாலமாகச் செயல்பட்டு உடனுக்குடன் தேவைகள் தீர்க்கப்பட்டன.

காரில் வந்தவர்கள் உற்சாகமூட்டும் பாடல்களைப் போட்டு காரின் மேலேயே ஆட்டம் போட்டு போராடினார்கள். பறை, ட்டிரம்ஸ் கருவிகள் விண்ணதிர ஒலி எழுப்பின. இவ்வளவு உற்சாகமாக கொண்டாட்ட மனநிலையில் வேறெந்தப் போராட்டமும் நிகழ்ந்திருக்காது. குழந்தைகளுடன் பெண்களும், கல்லூரி மாணவிகளும் எந்தவிதப் பயமுமின்றி மெரினாவில் இரவில் உறங்கியது தேசிய அளவில் தமிழகத்தின் மரியாதையை உயர்த்தியது.

மாலையில் வேலை முடிந்தவர்கள் இரவிலும், நைட் ஷிஃப்டில் பணிபுரிந்தவர்கள் அடுத்த நாள் காலையிலும் மெரினாவை நோக்கிப் பயணித்தனர். ஒருபக்கம் கூட்டம் குறைவதற்கு ஏற்ப, மறுபக்கம் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. சோஷியல் மீடியாவும், டெக்னாலஜியும் போராட்டத்துக்குப் பேருதவியாக அமைந்தன என்றால் அது மிகையல்ல!

- கருப்பு,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick