``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்!'' | Interview With Actor Sangili Murugan - Timepass | டைம்பாஸ்

``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்!''

‘`1956-ல நான் சென்னைக்கு வந்தேன். ரொம்பச் சின்ன வயசுல வீட்டைவிட்டு ஓடி வந்திட்டேன். நடிகர் எஸ்.எம்.குமரேசன் சார்கிட்ட வந்து சேர்ந்தேன். எங்க வீட்டுலேயும் அவரு பொறுப்புல என்னைய விட்டுட்டாங்க. அவருடைய நாடகக் குழு மூலமா துவங்குச்சு என்னோட பயணம். இது நான் முதல் முதல்ல நடிச்சு சம்பாதிச்ச பணத்தில் வாங்கின வீடு... அதுக்குப் பிறகு வேற வீடு வாங்கிட்டதால இதை இப்போ ஆபீஸ் ஆக்கிட்டேன்!’’ என்று வரலாறு சொன்ன சங்கிலி முருகனிடம், ‘`சட்டை பட்டன் போட்டுக்கலாமே சார்’' என்றால், ‘`இது என்னோட ஸ்டைலு தம்பி’’ எனச் சிரிக்கிறார். ஆரம்ப காலங்களில் வில்லனாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சண்டை பிடித்தவர், இப்போது குணச்சித்திர வேடங்களில் பிஸி. ‘ஜிகர்தண்டா’, ‘மனிதன்’, ‘பலே வெள்ளயத் தேவா’ படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் ‘எமன்’, பாபி சிம்ஹா நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படங்களில் நடித்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினேன்.

‘`நாடகக் குழுவுல இருந்த சமயத்திலதான் பாக்யராஜ் எனக்கு அறிமுகமானார். அந்தச் சமயத்தில் என்கூட சினிமா ஆர்வம் இருந்த எல்லாரும் சினிமாக்குள்ளே போயிட்டாங்க. நான்தான் அந்த செட்டுல கடைசி. அப்போ பாக்யராஜ், பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டன்ட். ‘அண்ணே, நான் இயக்குநர் ஆனா உங்களை நடிக்க வைப்பேன்’னு சொல்லிட்டே இருப்பார். அதேமாதிரி அவர் இயக்குநர் ஆகித்தான் எனக்கு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ல முதல் வாய்ப்பு கொடுத்தார்.'' 

‘`டெரர் வில்லன் டு குணச்சித்திர நடிகர்... இந்தப் பயணம் எப்படி இருக்கு?’’


‘`ரொம்ப அமைதியைக் கொடுத்திருக்கு. நான் நடிக்கறேன்னா ஃப்ரேம் எவ்வளவு இருக்குன்னு கேட்டுட்டு நான்பாட்டுக்கு நடிக்க ஆரம்பிச்சிடுவேன். வில்லனா நடிச்சப்ப, எப்படியும் ஹீரோகிட்ட அடி வாங்கணும். வில்லன் தோப்பான். சண்டை போடும்போது பல நேரம் அடிகள், காயங்கள்னு பயங்கரமான நாட்கள் அவை. சில நேரங்கள்ல ஷூ காலோட நெஞ்சுலயே மிதிக்கிற மாதிரி சீன் எல்லாம் வரும். அதை எடுத்து முடிச்சுட்டு மாஸ்டர் சொல்லுவார், ‘ஐயோ அண்ணே... நல்லா அடி வாங்குங்கண்ணே’னு. நான் சைவம்ங்கிறதால லன்ச்சுக்கு தயிர் சாதம் சாப்பிட்டுட்டு வந்து மறுபடி அதே சீன்ல உதை வாங்குவேன். கழுத்தைப் பிடிச்சு நெரிச்சு எச்சில்கூட விழுங்க முடியாம, நாய்கூட சண்டை போட்டு, முதுகெல்லாம் கீறலோட, மோதிரக் கையால் குத்துவாங்கி, உதடு கிழிஞ்சுனு... பல முறை டாக்டர்கிட்ட போவேன். அவரு, ‘ஏங்க இப்பிடி எல்லாம்  நடிக்கிரது அவசியமா?’னு கேட்பார். நமக்கு இது தொழிலாச்சே... இப்போ டி.வி-யில அந்தப் படங்களைப் பார்க்கும்போதுகூட, வாங்குன அடிகள்தான் ஞாபகம் வரும். ஆனா, இப்போ நினைக்கும்போது இந்த நினைவுகள்தான் எனக்கான சேமிப்புனு தோணுது. எல்லாருடைய கஷ்டத்துக்கும் ஒரு பலன் இருக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick