``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்!'' | Interview With Director diwakaran - Timepass | டைம்பாஸ்

``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்!''

‘`என் தலைமுறை பார்த்த மிகப்பெரிய இழப்பு ஈழத்துயரம். நம்மால் எதுவும் செய்ய முடியலைங்கிற ஒரு இயலாமை, கோபம்தான் என்னோட படமா இருக்கும்னு நம்புறேன். முதல் படம் ‘செங்குருதி’ பண்ணும்போது ஈழத்து அரசியலைப் பதிவு பண்ணணும்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இங்கே சந்தோஷமான மனநிலையைப் பதிவு பண்ண நிறைய படைப்புகள் இருக்கு. வலி இல்லாம என்னால படம் பண்ண முடியாது!’’ - தீர்க்கமாகப் பேசுகிறார், திவாகரன். ‘செங்குருதி’, ‘அவன்’, ‘பாஞ்சாலி’ ஆகிய குறும்படங்களின் இயக்குநர். புனே திரைப்படக் கல்லூரியின் துணைப் பேராசிரியர். இவர் இயக்கிய மூன்று குறும்படங்களும் இவர் சொல்வதைப் போலவே பாதிப்புக்குள்ளான மக்களின் வலியைக்  குறியீட்டு அரசியலோடு பேசுகிறது.

‘`மூன்று குறும்படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மாதிரி இருக்கே?’’

‘` ‘செங்குருதி’ படத்துல ஈழத்துப் பிரச்னையில் நாம எதுவும் செய்ய முடியலைங்கிறதைத்தான் பதிவு பண்ணினேன். க்ளைமாக்ஸ்ல ஒரு பையனும் அவங்க அம்மாவும் தப்பிப்பாங்க. அது நிஜத்துல நடக்க வாய்ப்பு இல்லை. அதோட உளவியல் பிரச்னையைத்தான் ‘அவன்’ குறும்படத்துல பதிவு பண்ணிருப்பேன். மூணாவது படம் ஒரு வாழ்வியலும் போராட்டமும் கலந்து இருக்கும். அதை துரியோதனனாக உருவகப்படுத்திப் படமாக்கியிருப்பேன். அதனால உங்களுக்கு அப்படித் தோணியிருக்கலாம். ‘பாஞ்சாலி’ கதை 2002-ல எழுதியது. என்னோட சொந்த ஊர் மதுராந்தகம் பக்கத்துல செய்யூர் கிராமம். ‘பாஞ்சாலி’யில பார்க்குற மலை அங்க உள்ளதுதான். தலித் சமுதாயத்தை அந்த மலையில் ஏறவே விடமாட்டாங்க. அந்த மலையைத் தொடுவதையே தீட்டாதான் பார்த்தாங்க. என்னோட சின்ன வயசுல நான் நேரடியா பார்த்த விஷயங்கள்தான் அவை. இப்போ அங்க பறை அடிக்கிற அளவுக்கு மாறி இருக்கு. ஈழத்துப் பிரச்னையை முதல் இரண்டு படத்துலேயும் வெளிப்படையா பேசி இருந்தாலும், மூணாவது படம் ‘பாஞ்சாலி’ல கதாபாத்திரங்களோட பெயருக்கு இசைப்பிரியா, பாலச்சந்திரன்னு வெச்சு அந்த மலையை ஈழத்தின் குறியீடா வெச்சிருப்பேன். ஆனா, அதைத் தாண்டி இது ஒரு தலித் வாழ்வியல் பேசுகிற படமாகத்தான் இருக்கும்.’’

‘`சோகமான முடிவு, மெதுவா நகர்கிற கேமரா, இதுதான் யதார்த்த படங்களுக்கான எழுதப்படாத விதியா?’’

‘` ‘பாஞ்சாலி’யில ஏன் அந்தப் பையனை சாகடிச்சீங்க?'னு கேட்டாங்க. இனிமேலும் வேற எந்தச் சாவும் நடக்கக்கூடாதுனுதான், அந்தப் பையனைச் சாகடிச்சேன். ‘பாஞ்சாலி’யை நான் ரோஹித் வெமுலாவுக்குச் சமர்ப்பித்திருப்பேன். கதையில பாலச்சந்திரன் கேரக்டர் இருக்கும். இரண்டு துருவங்களுமே போராட்டத்தின் வடிவம். ஆனா, கடைசிவரை அவங்களால ஜெயிக்க முடியலை. அதுக்காக அந்தப் போராட்டத்தோட ஜோதி அணைஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அந்தத் தீயை எல்லோருக்கும் பரவவிட்டு நம்ம கையில கொடுத்துட்டு போயிருக்காங்க. அதேமாதிரிதான் பாஞ்சாலியும், அந்தப் பையன் விட்டுட்டுப்போன வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick