``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது!'' | Story Of folk artist - Madurai - Timepass | டைம்பாஸ்

``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது!''

``எங்கள் வாழ்வு கலைகளுக்கானது... பிடிச்சுப்போய்தான் இதுல வந்தோம். இப்போ நிலைமை முன்ன மாதிரி இல்லை. எல்லாமே காலப்போக்குல வெரசா ஓடிருது தம்பி. இருக்கிற வரைக்குமாச்சும் எங்க புள்ளைகுட்டிகளுக்கு இந்தக் கலையைக் கை மாத்திவிடணும் தம்பி'' - இது ஒட்டு மொத்த நாட்டுப்புறக் கலைஞர்களின் சார்பாக வந்து விழும் சாம்பிள் குரல்.

ஒருபக்கம் பேராசிரியர் பணி, மறுபக்கம் கரகாட்டக் கலைஞர் என இருமுகம் காட்டும் மலைச்சாமி மற்றும் தன் ஐந்து அக்கா தங்கைகளுடன் கரகம் ஆடிவரும், ஞானாம்பாள்... என மதுரையை அசரடிக்கும் இரு கரகாட்டக் கலைஞர்களிடம் பேசினேன்.

மலைச்சாமி : ``இன்ஜினீயரிங் படிச்சேன் தம்பி, இப்போ இன்ஜினீயரிங் காலேஜ்ல 13 வருடமா பேராசிரியரா இருக்கேன். என்னைய ஒரு புரொபசர்னு கூப்பிடுறதைவிட, கரகாட்டக் கலைஞரா யாராவது அறிமுகப்படுத்தும்போதுதான் சந்தோஷமா இருக்கும். 'கரகாட்டக்காரன்' படத்துல ராமராஜனுக்கு டூப் போட்டவர் லூர்துசாமி. அவர்தான், சின்ன வயசுல நான் படிச்ச ஸ்கூலுக்கு நாட்டுப்புறக் கலைகள் சொல்லிக்கொடுக்க வந்தார். அப்போ இருந்தே அவர் வெச்சிருந்த கரகம், காவடி, டோப்புக்கிளி இதையெல்லாம் பார்த்து எனக்கும் கரகாட்டம் மேல ஆசை வந்துச்சு.  பிறகு, கரகாட்டக் கலைஞர் வேலு ஆசான்கிட்ட முறைப்படி கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல கோயில் திருவிழாக்களுக்காக கரகம் ஆட ட்ரூப்பா கெளம்பிப் போவோம். நைட்டு பத்து மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிச்சா, விடியற்காலை அஞ்சு மணி வரைக்கும் ஆட்டம் போய்க்கிட்டு இருக்கும். ஒருபக்கம் கரகமும், இன்னொரு பக்கம் பேராசிரியர் வேலையுமா வாழ்க்கை போக ஆரம்பிச்சது. ஒருதடவை கச்சேரினு கடமலைக்குண்டு பக்கம் கூட்டிட்டுப் போனாங்க. மேளக்காரங்க எல்லாம் சேர்ந்து பதினஞ்சு பேர் போனோம். `கரன்ட் இல்லை; ஜெனரேட்டர் பிரச்னை'னு  சொல்லி ஒரு இடத்துல தங்க வெச்சாங்க. நாங்க இருந்த இடத்துல ஒரு மாதிரி வாடை வந்துகிட்டு இருந்துச்சு. கரன்ட் வந்த பிறகுதான் கவனிக்கிறோம்... நாங்க தங்கி இருந்தது மாட்டுக் கொட்டகை. நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டவர், `சீக்கிரம் மேக்கப் பண்ணிக்கிட்டு வாங்க'னு அவசரப்படுத்திட்டுப் போயிட்டார். மொத்த டீமும் மாட்டுக் கொட்டகையிலதான் மேக்கப் போட்டுக்கிட்டோம். வாழ்க்கையில மறக்கவே முடியாத சம்பவம் அது. கரகாட்டம் ஆடப்போற சந்தோஷத்துல மாட்டுக் கொட்டகை கண்ணுக்குத் தெரியலைன்னாலும், கரக்காட்டக் கலைஞர்களோட இந்தமாதிரி நிலைமையை நினைக்கும்போதுதான் தம்பி வலிக்குது.  இன்னிக்கும்     ஏதாவது ஒரு கரக்காட்டக் குழு, மாட்டுக் கொட்டகையில மேக்கப் போட்டுக்கிட்டுதான் இருக்கு!''- உருக்க மாக முடித்தார் மலைச்சாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick