வெயிட்டிங் விடிவெள்ளியே..! | People tolerance after demonatisation - Timepass | டைம்பாஸ்

வெயிட்டிங் விடிவெள்ளியே..!

க்களுக்குப் பரிசுகளையெல்லாம் அறிவிச்சு டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்வோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அளவுக்கு மத்திய அரசு தீவிரமாக இறங்கி விட்டது. அப்படியே இன்னும் என்னென்ன செய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என யோசித்தேன்!

*ஏ.டி.எம்-மிலேயே கால்கடுக்க இரண்டு நாட்களானாலும் நிற்பவர்களை எல்லாம் கணக்கெடுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்குத் தலைக்கு ஒரு குடை வீதம் பரிசாகக் கொடுத்துக் கௌரவிக்கலாம்.

*ஊருக்குள் டிஜிட்டல் ஃபிளக்ஸ் பேனர் கடைகள், டிஜிட்டல் ஸ்டுடியோ கடை வைத்திருப்பவர்களை எல்லாம் அள்ளிப்போட்டு மொட்டை ஜீப்பில் வைத்து ஊர்  ஊராக ட்ரிப் அடித்து `இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்'னு சொல்லி டிஜிட்டலின் முக்கியத்துவத்தை ஊரறிய, உலகறியச் செய்யலாம்.

*டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதரவளிக்கிறோம்' என வாய்மொழியாக ஒப்புக்கொள்வோருக்கு ஏ.டி.எம் க்யூவில் ஒரு இடம் முந்திச்செல்ல முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எழுத்து பூர்வமாக ஆதரவு அறிவிப்பவர்களுக்கு மூன்று இடங்கள் முன்னேறிச் செல்ல முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்துப்பார்க்கலாம்.

*`ஸ்வைப் மிசின் மூலமாக வெறும் பணம் மட்டும் தேய்க்கப்படுவதில்லை. மிகுந்த தொலைநோக்குப்பார்வையுடன்தான் இதைச் செயல்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதாவது காலப்போக்கில் அதிகமாக கார்டுகள் தேய்க்கப்படும்போது அதிலே இருந்து மின்சாரம் எடுக்கவும் ஆய்வில் உள்ளோம். தொடர்ந்து அந்தந்த கார்டுகளில் இருந்து தேய்த்துப் பெறப்படும் மின்சாரம் அந்தந்த வீடுகளுக்கே பிறகு சப்ளைக்காக வழங்கப்படும்' எனவும் திரியைக் கிழித்து தீயைப் பற்ற வைக்கலாம்.

*ஏ.டி.எம் வாசலில் நீண்ட நாள் நிற்பவர்களின் கால அளவுகளைக் கணக்கெடுத்து வரிசைப்படுத்தி, அவர்களுக்கு `சத்திய சோதனையின் சரித்திரமே', `சகிப்புத்தன்மையின் சந்திரனே',  `வெயிட்டிங் விடிவெள்ளியே', `காத்திருப்பின் காதலனே' என விதவிதமான பட்டங்களை அரசே அறிவித்துக் கௌரவப்படுத்தியும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான ஆதரவை அதிகரிக்கலாம்.

என்ன நான் சொல்றது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick