கிரிக்கெட் 10000 வாலா!

வர் நைட்டில் பிரபலமாகி விட்டார் கருண் நாயர். சென்னை கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து பெளலிங்கை பிரித்து மேய்ந்து அவர் அடித்த முச்சதம்தான், கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாபிக். சேவாக், கருண் நாயர் மட்டுமே முச்சதம் அடித்த இந்தியர்கள். ரன்களை சிதறடித்து வெடித்த விதத்தில், கருண் நாயர் 10,000 வாலா பட்டாசு!

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட கலாதரன் - பிரேமா தம்பதிக்கு, எட்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்தவர் கருண் நாயர். நுரையீரல் பலவீனமாக இருந்ததால், பிள்ளையைப் பொத்தி பொத்தி வளர்த்தனர். தடுக்கிக் கீழே விழுந்தால்கூட கண்ணைக் கசக்கிக்கொண்டே வீட்டுக்கு வரும் அப்பாவி. `இந்த ஆட்டிட்யூட் ஆகாது. எதாவது ஸ்போர்ட்ஸ்ல சேத்து விடுங்க...’ என டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். கருண்  நாயரை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார் கலாதரன்.

பூர்விகம் கேரளா, பிறந்தது ராஜஸ்தான் (கலாதரன் அப்போது அங்கு பணிபுரிந்தார்) என்றாலும், கர்நாடகாதான் கருண் நாயருக்கு எல்லாமே. பத்து வயதில் அண்டர் - 13  அணியில் இடம். படிப்படியாக ரஞ்சி அணியில் தவிர்க்க முடியாத நபர். கடந்த ரஞ்சி சீசனில் கர்நாடக அணிக்கு கேப்டன் என, அவரது கேரியரில் சீரான வளர்ச்சி. தமிழகத்துக்கு எதிராக, 2015 ரஞ்சி ஃபைனலில் 328 ரன்கள் அடித்தபோதே, இந்த 25 வயது இளைஞன்மீது ஒரு கண் வைத்தது கிரிக்கெட் உலகம். அதற்கு முன்பே, `இவன் ஒரு ரவுண்ட் வருவான்’ என கணித்தார்  டிராவிட்.

ட்ரைவ், ஸ்வீப் ஷாட் களை அசால்ட்டாக ஆடுவதோடு, பெரிதும் அலட்டிக் கொள்ளாத நாயரின் ஆட்டிட்யூட் டிராவிட்டுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கருண் நாயரை ஏலத்தில் எடுத்தார். ராஜஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் கடந்த முறை டெல்லி அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. கொடுத்த காசுக்கு உருப்படியாக ஆடி, டெல்லியின் இரண்டாவது டாப் ஸ்கோரர் எனப் பெயரெடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick