அது ஒரு அரியர் காலம்!

ர்தா புயல், தானே புயல்னு வருசா வருசம் தவறாம டிசம்பர் மாசம் புயல் வந்தாலும் காலேஜ் ஸ்டூடன்ட்கு ஜனவரில வர்ற ‘ரிசல்ட் புயல்’தான் கொடூரமானது.    இந்த அரியர் புயலால் நடக்கும் பாதிப்புகள் ஓவரோ ஓவர். வாங்க சொல்றேன்...

ரமணன் சொன்னா எப்படிக் கண்டிப்பா மழை வருமோ, அப்படித்தான் செமஸ்டர் எக்ஸாம் எழுதினா கண்டிப்பா ரிசல்ட் வரும். பல பசங்களுக்கு காய்ச்சலே வந்திடும். காய்ச்சலால ஃபெயில் ஆகிடுவேன்னு சீன் காட்டினவன்தான் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருப்பான். (உனக்கே ஓவரா இல்லையாடா?)

‘போன தடவை மாதிரி இல்லடா... இந்தத் தடவை பேப்பர் வேல்யூஷன் ஸ்ட்ரிக்ட்டா பண்ணி இருக்காங்க. அரியர் அதிகம் வரும்’னு ரிசல்ட் வர்றதுக்கு  முன்னாடி ஆரூடம் சொல்லுவார் புரொஃபசர். சந்தோஷமா சார்?

ரிசல்ட் தேதி சொன்னதுல இருந்து சரியா சாப்பிடாம, தூங்காம பயந்து கெடந்த பயலுக எல்லாம் பார்டர்ல பாஸ் பண்ணிடுவானுக. ஆனா, ரிசல்ட் பத்திக் கவலைப்படாத எங்களை மாதிரிப் பசங்களுக்குத்தான் அரியர் வந்து விழும். தட் எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி மொமன்ட்!

கூடவே சுத்திக்கிட்டு இருந்தவன் எல்லாம் க்ளியர் பண்ணிட்டு நமக்கு அட்வைஸ் பண்ணுவான் பாருங்க. அதைத்தான் தாங்க முடியாது. (நீ பாஸ் பண்ணினது கூட வலிக்கலை. அட்வைஸ் பண்ணினதுதான்டா வலிக்குது.)

`கடைசி வரைக்கும் பிரியவே மாட்டேன்'னு சத்தியம் பண்ணினவன் தான், நமக்கு நாலு அரியர்னு தெரிஞ்சதும் பேசவே மாட்டானுக. இதுகூட பரவாயில்லை... `நான் இனிமேல் ஃபர்ஸ்ட் பென்ச்ல உட்காரப்போறேன்'னு அவனுக சொல்லும்போதுதான் வாழ்க்கைனா என்னன்னு புரியும் பாஸ்.

ஆல் க்ளியர் பசங்கதான் அசிங்கப்படுத்துறாங்கன்னா, சிங்கிள் பேப்பர் அரியர் இருக்குறவனும், அஞ்சு அரியர் வெச்சிருக்கிற நம்மளைப் பார்த்து மணிக்கு ஒரு தடவை எத்தனை அரியர்னு கேட்டுக் கொல்லுவான். அதுல ஒரு ஆனந்தம் உனக்கு!

கூட படிக்கறவன்தான் இன்சல்ட் பண்றான்னு நினைச்சா, நம்ம புரொஃபசரே ‘ஜூனியர் பசங்ககிட்ட மெட்டீரியல், மாடல் கொஸ்டின் பேப்பர் வாங்கிப் படி’னு கிளாஸ்ல இருக்குற அத்தனை ஏலியன்ஸ் முன்னாடியும் நம்மளை அவமானப்படுத்துவார். அதுக்கு நான் சும்மா இருப்பேனே!

`ரீ-வேல்யூசன் பண்ணுடா... பாஸ் ஆகிடலாம்'னு ஐடியா தந்தவனே, அடுத்தநாள் வந்து, ‘ஐந்நூறு ரூபாய் செலவு பண்ணியும் அரியர் வாங்குறதுக்கு, நூறு ரூபாய் கட்டி அடுத்த செமஸ்டர்ல கிளியர் பண்ணலாமே?’னு மாத்திப் பேசுவான். நல்ல வழி காட்டினவனே இப்படி ரிவர்ஸ் கியர் போடும் போதுதான்,  பயப்பந்து வயிற்றுக்குள் உருளும்!

ஃபேஸ்புக்குல, ‘என் மச்சான் எல்லா அரியரையும் க்ளியர் பண்ண பிரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ச்’னு ஸ்டேட்டஸ் போட்டு மானத்தை வாங்குறதோட, நம்மளையும் அதுல டேக் பண்ணிவிட்டு, கேக் வெட்டிக் கொண்டாடுவான்.

‘ஆல் கிளியர் பண்ணின நீங்க வேணா எங்களைக் கலாய்ச்சாலும், அரியர் பசங்களான நாங்க உங்களை என்னைக்குமே கலாய்க்க மாட்டோம்’ங்கிறது எங்க கொள்கை.

ஆகமொத்தத்துல, என்ன சொல்றேன்னா... காலேஜ்ல அரியர் வைக்காத ஸ்டூடன்ட் இல்லை. அரியர் வைக்காதவன், ஸ்டூடன்ட்டே இல்லை!

- லோ.பிரபுகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick