``தங்கத்துல செயினே கிடைச்சது ப்ரோ!''

சில பேரை நாள் தோறும் டிவியில் பார்ப்போம். ஆனால், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மெனக்கெட மாட்டோம். காரணம் அவர்கள் சீரியஸான முகத்தோடு செய்தி வாசிப்பவர்கள். ரஞ்சித் அதில் முக்கியமானவர். அவரின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்வோமா?

``உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க?''

`‘பிறந்தது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி... ஆ! வயசு தெரிஞ்சிருமே. நீங்களே கொஞ்சம் ‘கம்மியா’ போட்டுக்கோங்க. ஸ்கூல் படிக்கும்போது அசெம்ப்ளில செய்தி வாசிக்க சொல்லுவாங்க. அப்படி நான் வாசிக்கும்போதே, ‘உனக்கு நல்ல குரல்வளம் இருக்கு. செய்தியும் நல்லா வாசிக்கிற’ அப்படின்னு நிறையப்பேர் பாராட்டுவாங்க. வேற மீடியம்ல படிச்சதால தமிழைத் தேடித் தேடி வாசிச்சேன். செய்திகளைப் பார்த்து எனது உச்சரிப்பை மேலும் வளர்த்துக்கிட்டேன். படிப்பு முடிஞ்சதும் உனக்குதான் வாய்ஸ் நல்லாருக்கேன்னு பலரும் சொன்னதால, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு செய்தி வாசிப்பாள ராகவும் ஆகிட்டேன்.''

``செய்தி வாசிப்பாளர் வேலை எப்படிக் கிடைத்தது?''

``அப்போ செய்தி சேனல்கள் ரொம்பக் குறைவு. 2001-ல ஆரம்பிச்சு 2008-ம் ஆண்டு வரைக்கும் சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கிட்டே செய்தி வாசிப்பாளர் வேலைக்காக முயற்சி பண்ணேன். 2008-ல தான் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா சன் டிவில வேலை கிடைச்சது. ஒரு வருஷம் பின்னணிக் குரல் மட்டும் கொடுத்தேன். அங்கேயே செய்தி வாசிப்பாளருக்கான வேலை காலியாக இருந்ததால் ஆடிசன் போய் தேர்வானேன். 3 வருசம் நியூஸ் ரீடரா வேலை பண்ணிட்டு, அதுக்கப்புறம் பாலிமர் சேனல்ல வாசிச்சிக்கிட்ருக்கேன்.''

``உங்க வேலை சார்ந்து நடந்த ஜாலியான அனுபவம்?''

``நிறையபேர், `நியூஸ் ரீடர் வேலையாவது வாங்கித்தாங்களேன்’ கூலா கேட்பாங்க. செய்தி வாசிக்கறதுன்னா அவ்வளவு ஈஸியான்னு நினைச்சிக்குவேன் ப்ரோ. அதேமாதிரி பல விருது நிகழ்ச்சிகள்ல விருதுகள் கொடுத்து கௌரவிக்கிறாங்க. இதுல சிறந்த செய்தி வாசிப்பாளர், சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விருதுகளும் கொடுத்தா ரொம்பவே சந்தோசப்படுவேன். நான் வாங்குறேனோ இல்லையோ... இந்த விருது கொடுத்தாலே அதுக்கு நானும் சந்தோசப்படுவேன்.''

``செய்தி வாசிப்பாளராக என்ன அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?''

``நிறையப்பேர் மனப்பாடம் பண்ணி செய்தி வாசிக்கிறதா நினைக்கிறாங்க. பார்த்துப் படிக்கிறதுதான். தமிழில் உள்ள ழகரம், லகரம், ளகரம், னகரம், ணகரம் ஆகியவற்றை உச்சரிக்கத் தெரியணும். எந்த இடத்தில் நிறுத்திப் படிக்கணும், எந்த இடத்தில் ஏற்ற இறக்கத்தோட படிக்கணும், முகபாவம், தெளிவு, பாடிலாங்குவேஜ் இதெல்லாம் ரொம்பவே அவசியம். சோகமான செய்தியை வாசிக்கும்போது குரலிலேயே சோகத்தைக் கொண்டு வரணும்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick