Banner 1
தமிழக முதல்வர்

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் 13 வது முதல்வரான எடப்பாடி பழனிசாமி, நான்குமுறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011-ல் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரானார். 2016- தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 16-02-17 அன்று முதல் தமிழக முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.   

பிறப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கருப்ப கவுண்டரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர்.

இளமைப் பருவம், கல்வி 

ஈரோடு வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் படித்தார். 

குடும்பம்

மனைவி பெயர் ராதா. மகன் மிதுன். எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ்.

தனிப்பட்ட வாழ்க்கை 

கல்லூரியில் படிப்பு முடித்த பின்னர், எடப்பாடியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வெல்ல உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்ல மூட்டைகளை வாங்கி சந்தைக்குக் கொண்டு சென்று கமிஷனுக்கு விற்பனை செய்து வந்தார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர். காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் 'வெல்ல மூட்டை’, 'சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழி வைத்தார்கள்.

அரசியல் வாழ்க்கை

1974-ல் அமைச்சர் செங்கோட்டையன்தான் எடப்பாடி பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வந்தார்.  கோணேரிபட்டி கிளைச்செயலாளர் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். 1989-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எடப்பாடிக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டு வந்தது. அதிலும், 89 மற்றும் 91  ஆகிய இரண்டு தேர்தல்களில் மட்டுமே வென்றார். 1996, 2006-ல் நடந்த எடப்பாடி சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி அடைந்தார். 2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராக இருந்தார். பின்னர் அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். 1998ல் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார். 1999, 2004ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டிலும் வெற்றி பெற்றார்.  சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்திய மன்னார்குடி குடும்பத்தினரே எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர். பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடு ஆகியவை மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து கட்சியின் உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிச்சாமியே கவனித்து வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை அடுத்து அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

துறை ரீதியான அனுபவம்

2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபிறகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியைப் பெற்றார். நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது 2016 தேர்தலில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுக்க 62,294 கி.மீட்டருக்கு நீளும் சாலையைப் பராமரித்துவருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 11,752 கி.மீ. அந்தச் சாலைகளின் அவலங்களை வாகன ஓட்டிகளிடம் கேட்டால், கதைகதையாகச் சொல்வார்கள். பல்லாங்குழிகளாக அல்ல.... நவீன மழைநீர் சேகரிப்புக் குட்டைகளாக அவை பல் இளிக்கின்றன. அமைச்சராக இருந்தவர் எதையெல்லாம் சாதித்தார் என்றுதானே ஒரு பட்டியல் இருக்க வேண்டும். ஆனால், எதையெல்லாம் சாதிக்கவில்லை என்ற பட்டியல்தான் நீளம்.  

விமர்சனங்கள் 

எடப்பாடி பழனிசாமியின் பிறந்த ஊரான சிலுவம்பாளையத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நில விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அந்த வழக்கில் தொடர்புடையவர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர்.  அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் . வழக்கை வாபஸ் பெற வைத்தார் எடப்பாடி பழனிசாமி.  

வகைதொகை இல்லாமல் பழனிசாமி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதையும் எதிர்க்கட்சிகளே வாசிக்கின்றன. 'அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி  கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநரிடம் மனு கொடுத்தது பா.ம.க. ராமதாஸ் அளித்த அந்தப் புகார் பட்டியலில் பழனிசாமியைப் பற்றி விரிவான அத்தியாயங்கள் இருந்தன. 'கோகோ கோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு. அதில்  அமைச்சர் பழனிசாமியுடன் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார்வாசித்தது அந்த மனு.

2011 ஆட்சி காலத்தின்போது  காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், 'அமைச்சர் பழனிசாமி வீட்டில் 1,000 கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள்’ எனத் திரி கொளுத்தினார். 'தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைக்கும் தொகையை அமைச்சர் பழனிசாமி வீட்டில், சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகப் பதுக்கிவைத்திருப்பதாக, சேலம் ஏரியாவில் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.  வருமான வரித் துறையும் தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லாம் கொந்தளித்தார் இளங்கோவன். உடனே அவர் மீது வழக்கு போட்டார் பழனிசாமி. ஆனாலும் சளைக்காத ஈ.வி.கே.எஸ்., 'அமைச்சர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, குறுக்குவிசாரணை நடத்துவேன்’ என அதிரடித்தார்.

அமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. 'வெகுளி’ என்ற பட்டத்தோடு  உலாவருகிறார். ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அவரது  பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது  கரூர் அன்புநாதன் சிக்கினார். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்புநாதனுக்கும் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது. அதே போல 500 ரூபாய் நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டபோது, பெங்களூரில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.  இதற்கும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருந்ததாக சர்ச்சை எழுந்தது.  

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் எடப்பாடி பழனிசாமி ஊரில் இல்லாத  நாட்களில், மாவட்டத்தின் நிழல் தலைவராக வலம் வருவார். உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக இளங்கோவன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதில் இருந்தே ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் அடிக்கடி மோதல் வெடித்த து. அதன் ஒரு கட்டமாக தமிழக நெடுஞ்சாலைத்துறையின் மூத்த அதிகாரியின் வீட்டில் 2016 நவம்பர் 15ல்  லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ரெய்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. ‘ முதல்வர் துறையை கையில் வைத்திருந்த ஓ.பி.எஸ் அனுமதியின் பேரிலேயே ரெய்டு நடவடிக்கைகள் நடந்தன’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடிக்கு ஆளானவர், நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளராக இருந்த கே.ஜெயராமன். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதை ஓ.பி.எஸ் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு : கே.பாலசுப்பிரமணி