ஏ.பி.ஜெ அப்துல்கலாம்

ஏ.பி.ஜெ அப்துல்கலாம்

ஏ.பி.ஜெ அப்துல்கலாம்

பிறப்பு:

15-10-1931

இளமைப்பருவம் / கல்வி:

அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

குடும்பம்:

ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக  பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

சிறுவயது சாதனை:

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!'' - அப்துல் கலாம் விகடன் மேடையில் மாணவர்களுக்கு அளித்த பதில் இது.

தனிப்பட்ட வாழ்க்கை:

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர். பின்னர் இந்தியாவின் 11 வது ஜனதிதிபதியாக பொருப்பேற்றவர். இந்தியாவை பொறுத்த வரை மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வார்.  கோவையில் ஒரே நாளில் 8 க்கும் மேற்பட்ட விழாக்களில் கலந்து கொண்டவர் அவர். அப்படி ஒரு வேகம், சுறுசுறுப்பு அவரிடம் இருக்கும். நாடு முழுக்கவுள்ள  பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் நாட்டை வல்லரசாக்கவுள்ள வலுவான இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை. 

இளைஞர்களுக்கு வைத்த கோரிக்கைகள்:

1.கிராமம் - நகரம் இடையே இடைவெளி அனைத்தும் அகலப் பட வேண்டும்.

2.குடிநீர்,எரிசக்தி சமனடையப் பட வேண்டும்.

3.விவசாயம்,தொழில் ,சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம்.

4.சமூகம் ,பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைத்தல்.

5.விஞ்ஞானம் ,அறிவார்ந்த வல்லமை ,தொழில் முதலீடு ஏற்புடைய நாடாக மாற்ற வேண்டும்.

6.குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி.

7.ஊழலற்ற ,வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி முறை.

8.எவரும் தனிமைப் படுத்தப்படாமல் வறுமை ஒழிக்கப்பட்டு கல்லாமை இன்றி, பெண்கள், குழந்தைகள் பேணப்படுதல் .

9.அனைத்து வகைகளிலும், ஓர் ஏகோபித்த நாடாக இந்தியா மாற வேண்டும்.

10.சிறந்த தலைமை, வளமான, அருமையான நிலையை இந்திய மக்கள் அனுபவிக்க வேண்டும்.

துறை சார்ந்த அனுபவம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருதை” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர்,  “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

அரசியல் / சினிமா பங்களிப்புகள்:

விகடன் மேடையில் ''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?'' என மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அப்துல்கலாம் அளித்த பதில் இது.

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

சாதனைகள்:

பிரமோஸ் ஏவுகணை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றினார்.

1960 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு தேவையான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்.

SLV, SLV-3, ரோகினி-1, செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் அப்துல்கலாம் திட்ட இயக்குனராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் உருவாக்கிக்கொடுத்துள்ளார்.

அனைத்துக்கும் மேலாக இளைஞர்களை 'கனவு காணுங்கள்' என்று கூறினார். இதனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நீங்கா புகழோடு இடம்பிடித்தவர்.

விருதுகள்:

1981 - பத்ம பூஷன்

1990 - பத்ம விபூஷன்

1997 - பாரத ரத்னா

1997 - தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 - வீர் சவர்கார் விருது

2000 - ராமானுஜன் விருது

2007 - அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 - கிங் சார்லஸ்-II பட்டம்

2008 - பொறியியல் டாக்டர் பட்டம்

2009 - சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 - ஹூவர் மெடல்

2010 - பொறியியல் டாக்டர் பட்டம்

2012 - சட்டங்களின் டாக்டர்

2012 - சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

சேவைகள்:

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகியவுடன் 'தன்னை ஒரு நல்ல ஆசிரியராக மாற்றிக்கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் என சென்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்தார்.'

விமர்சனங்கள்:

இந்தியாவில் எதிர்மறையான விமர்சனங்கள் இல்லாத தலைவர்களில் இவரும் ஒருவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம்,  தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்பட்டவர். இப்படியான நல்விமர்சனங்கள் மட்டுமே இந்திய மக்கள் அனைவராலும் இவரைப்பற்றி முன்வைக்கப்படுகிறது.

பிறசிறப்புகள்:

இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். ஒருமுறை ''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?'' என மாணவர்கள் கேள்வி கேட்டபோது, இப்படி பதில் தருகிறார்.

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!'' என்று பதிலுரைத்தார். அந்த அளவுக்கு இவர் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஊக்கம் தந்தார்.

அனைத்துக்கும் மேலாக தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்றும், கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இவர் மிகசிறந்த வீணை கலைஞராகவும் இருந்தார்.

மறைவு:

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள், தனது 84 வது வயதில் மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

24 ஆண்டுகளாக அவருக்கு உதவியாளராக இருந்து வரும் ஹரி செரின்டன் கூறியதாவது "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று ஷில்லாங்கில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அப்துல் கலாமின் மரணத்தை அவரது உதவியாளர் ஹரி செரின்டனால் நம்ப முடியவில்லை. அப்துல் கலாமின் கடைசி நேரங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், '' திங்கட் கிழமை 12.20 மணியளவில் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். செவ்வாய்க்கிழமை வருவதாக சொன்னார். புறப்படும் போது அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. மாலை 7 மணியளவில் ஷில்லாங்கில் எனது உதவியாளர்  ஒருவர்,  என்னை போனில் தொடர்பு கொண்டார். 'சார்... பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்று தெரிவித்தார். உடனே நான் பதறிப் போனேன். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் வந்தது. 'சார் இறந்து விட்டார்!'என்று சொன்னார். என்னால் அந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. இப்போதும் அப்துல் கலாம் இறந்து விட்டதாகவே நான் உணரவில்லை. 

மேற்கோள்கள்:

எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் மிகப்பெரிய கனவே 'இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, வல்லரசாக வேண்டும் என்பதே.'. அதற்காக, மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் போற்றும் வகையில், அவரது எழுச்சி வரிகளில் சில...

நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்விக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியை கொழுந்துவிட வைத்து, அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை.

விவேகம் தராத கல்வி பயனற்றது. எனவே, உங்களை நீங்கள் அறிந்து, அதற்கேற்ப உங்களுக்கு நீங்களே வழிகாட்டுங்கள்.

வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றம் ஆகும். அறிவைத் தேடித் தேடிப் பெற வேண்டும். தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற வேண்டும்.

கற்றல், கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி, சிந்திக்கும் திறனைத் தூண்டுகிறது. சிந்தனை, அறிவை வளர்க்கிறது. அறிவு, உன்னை மகான் ஆக்குகிறது.

உங்களுடைய குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமெனில், உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து, அதே சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

நீங்கள் எதைக் கற்பனை செய்கிறீர்களோ அதுதான் செயல் வடிவம் பெறும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதைத்தான் சாதிக்க முடியும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்னை. பிரச்னைகள்தான் ஒருவனின் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

அறிவாற்றல்தான் நிதர்சனமான, நிலையான சொத்து. உங்களுடைய வேலையில் பயன்படும் மிக முக்கியமான சாதனமும் இதுதான். எந்த அளவுக்கு உங்களுடைய அறிவுத்திறனால் இப்போதைய நிலவரம் வரை தெரிந்துவைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் சுதந்திரமான மனிதர். கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க முடியாது.

இணைப்பு : கலாம் சிந்தனைகள்!

புத்தகங்கள்:

"அக்னி சிறகுகள், இந்தியா 2020, வெளிச்ச பொறிகள், மிஷன் இந்தியா, இன்ஸ்பயரிங் தாட்ஸ், இக்னைடெட் மைண்ட்ஸ், இலக்கு 3 பில்லியன், திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம், எனது பயணம், " போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அவரும் விகடனும்:

மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விகடன் மேடையில் பதில் தந்தார். அந்த இணைப்புகள்

விகடன் மேடை - 1

விகடன் மேடை - 2

தொகுப்பு : ஜெ.அன்பரசன்

Why Radha Ravi Came for Nayanthara Audio launch? - Kolayuthir Kalam Producer Opens up
Vikatan Correspondent

Why Radha Ravi Came for Nayanthara Audio launch? - Kolayuthir Kalam Producer Opens up

Radha Ravi Controversial Speech on Nayanthara at Kolayuthir Kalam
Vikatan Correspondent

Radha Ravi Controversial Speech on Nayanthara at Kolayuthir Kalam

ராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை கலாம் கடந்துவந்த பாதை! #Kalam #VikatanInteractive
பெ.மதலை ஆரோன்

ராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை கலாம் கடந்துவந்த பாதை! #Kalam #VikatanInteractive

48 ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டம் வாங்கிய கலாம்! #InterestingFacts #VikatanPhotoCards #Kalam
பெ.மதலை ஆரோன்

48 ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டம் வாங்கிய கலாம்! #InterestingFacts #VikatanPhotoCards #Kalam

`மிகச்சிறந்த பலசாலி நீங்கள்தான்! - உற்சாகமூட்டும் 10 பொன்மொழிகள்
சு.சூர்யா கோமதி

`மிகச்சிறந்த பலசாலி நீங்கள்தான்! - உற்சாகமூட்டும் 10 பொன்மொழிகள்

தங்கத்தை கடத்த கரீம் செய்த டெக்னிக்! | ABDUL KAREEM
Vikatan Correspondent

தங்கத்தை கடத்த கரீம் செய்த டெக்னிக்! | ABDUL KAREEM

குடியரசுத் தலைவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த அப்துல் கலாம்! #APJ
எம்.குமரேசன்

குடியரசுத் தலைவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த அப்துல் கலாம்! #APJ

அறிவியல் மனிதனுக்கு மிகச் சிறந்த பரிசு... அதை சிதைத்து விடக்கூடாது! - அப்துல் கலாம் #VikatanPhotoCards
கார்க்கிபவா

அறிவியல் மனிதனுக்கு மிகச் சிறந்த பரிசு... அதை சிதைத்து விடக்கூடாது! - அப்துல் கலாம் #VikatanPhotoCards