Banner 1
இயக்குனர்

ஏ.ஆர்.முருகதாஸ்

1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் முருகதாஸ் பிறந்தார்.அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்தார்..பள்ளிப்பருவத்திலேயே நகைச்சுவை வாசகங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டார்.கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி மற்றும் சித்திரங்கள் வரைவதில் பங்குகொண்டு சிறந்து விளங்கினார்.

சினிமாவால் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே.அவ்வாறு மனதில் எண்ணிய அந்த எண்ணத்தை கேமரா லென்ஸில் செலுத்தி அதை மக்களின் மனதில் வெள்ளித்திரை மூலம் கொண்டு சென்று பதிய வைத்து  வெற்றி பெறுபவர்கள் இன்னும் சிலரே.  இந்த இரண்டையும் சர்வ சாதாரணமாக  நிகழ்த்தி  தமிழ் சினிமாவை  மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் கள்ளக்குறிச்சியின் 'கலை-அரசர்'  ஏ ஆர் முருகதாஸ். 
 
1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் முருகதாஸ் பிறந்தார்.அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்தார்..பள்ளிப்பருவத்திலேயே நகைச்சுவை  வாசகங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டார்.தனது நகைச்சுவைகள்  ஆனந்த விகடனில் பிரசுரம் ஆனதைக்  கண்டு வியந்தார்.இதன் வெளிப்பாடாக 'தான் ஒரு கதாசிரியர் ஆகவேண்டும்' என்ற எண்ணம் அவரைத்  தீண்டியது.

திருச்சியில்  உள்ள  பிஷப்  ஹீபர் கல்லூரியில் பி.எ.படித்தார். சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் காட்டிய முகுதாஸ்,தனது கல்லூரி காலங்களில் தேசிய சேவைத் திட்டத்தில் (NSS )சேர்ந்து அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை,அவர்களுக்கு உரிய  சிகிச்சை பிரிவிற்கு (வார்டு)  அழைத்துச் செல்வதற்கு உதவிகள் பல செய்துவந்தார்.

கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி மற்றும் சித்திரங்கள் வரைவதில் பங்குகொண்டு சிறந்து விளங்கினார்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  ஸ்கெட்ச் காமெடிகள் எழுதியும் அதில் நடித்தும் வந்தார்.

தீவிர சினிமாப்பிரியரான இவர்,வாரத்திற்கு ஏழு படங்கள் வரை பார்த்து வந்தார்.தனது சொந்த ஊரில் உள்ள 'ராஜா' மற்றும் 'கோவிந்தராஜன்' திரையரங்கு தான் சினிமாவை அவரது கண்முன் நிறுத்தியது.
பின்னர் மெட்ராஸ் பிலிம் நிறுவனத்தில் சேர முயற்சி செய்தும் செய்தார்.ஆனால் அதை அந்நிறுவனம் நிராகரித்தது.இருந்தும் தனது கனவை அடைய மேலும் தீவிர முயற்ச்சிகள் மேற்கொண்டுவந்தார்.இதற்கு தனது முழு ஆதரவை அவரது தந்தை அருணாச்சலம் அளித்தார்.சினிமாவில் முருகதாஸ் வாய்ப்பு தேடி சென்ற காலத்தில் தனது சிறுதொழிலில் ஈட்டிய பணத்தை முருகதாசிற்கு அனுப்பி வைத்து பக்கபலமாக இருந்தார்.
 
தொடர்ந்து  தனது முயற்சியால்  'மதுரை மீனாட்சி' என்ற படத்தின் மூலம் இயக்குனர் கலைமணியிடம் துணை எழுத்தாளராக  சினிமாத் துறையில் நுழைந்தார். 'ரட்சகன்' திரைப்படத்திற்கும்  மற்றும் 'கலுசுக்குண்டம் ரா' என்ற தெலுங்கு படத்திற்கும் துணை எழுத்தாளராக பணிபுரிந்தார். 'குஷி' படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த இவரை இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடிகர் அஜித்திற்கு சிபாரிசு செய்தார். இதன் மூலம் 2001 ஆம் ஆண்டு  தனது முதல் திரைப்படமான 'தீனா'வை அஜித்தை வைத்து இயக்கி திரைத்துறையில் தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்தார். தனது முதல் வெற்றியைக் காண தனது தந்தை இல்லை என்ற துயரம் முருகதாஸ் மனதில் இருந்தது.
 
அடுத்து விஜயகாந்தை 2002ஆம் ஆண்டு  அவர் இயக்கிய 'ரமணா' ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.தனது வாழ்க்கையில் நடைபெற்ற தான் கண்டசம்பவங்களை வைத்து கதைக்களம் அமைத்தார். தனது தந்தையின் மறைவிற்கு பிறகு இறப்பு சான்றிதழ் வாங்க சென்றார். அச்சான்றிதழ் வழங்கும் அதிகாரி அதற்கு லஞ்சம் கேட்டுள்ளார்.இச்சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஒரு மனிதனின் இறுதிப் பதிவை கூட லஞ்சம் பெற்று தான் வழங்குவேன் என்றிருந்த அந்த ஊழியரை எண்ணி மிகவும் வருத்தமடைந்தார். 'அடுத்து ஒரு மாதம் தனது வீட்டிலே தான் இருக்கவுள்ளோம்.எப்படியாவது அதை எந்த பிரச்னையும் இல்லாமல் இலவசமாக  வாங்கிவிடவேண்டும்'என்று எண்ணினார்.ஆனால் இவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அந்த யோசனை பளிக்கவில்லை. தனது கல்லூரி காலத்தில் கூட்ட நெரிசலான நேரங்களில் சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய தனது நண்பர்களுடன்  உதவி செய்தார்.இவ்வாறான சிறிய செயல்கள் மூலம், மாணவர்கள் இணைந்தால், எவ்வாறான செயல்களையும் செய்து முடிக்கலாம்.மாணவர்கள் இணைந்தால் ஒருநாட்டின் தலையெழுத்தை மாற்றவும் நாட்டை திருத்தவும் முடியும் என்று அவரது செயல்கள் அவரை உணரச்செய்தது. இதன் வெளிப்பாடாகவே தான் 'ரமணா'வை இயக்கியதாக முருகதாஸ் கூறினார்.மேலும் இப்படத்தை பற்றி ஒருமுறை பேசிய முருகதாஸ்,"ஒரு ஒரு மாணவனும் நெருப்பு போல.நெருப்புக்கு  மட்டும் தான் தன்னுடன் சேரும் அனைத்தையும் நெருப்பாக்கும்  சக்தி உள்ளது என்பதை இப்படத்தின் மூலம் விளக்க விரும்பினேன்"என்று தெரிவித்தார்.இப்படத்திற்க்காக "தமிழக அரசின் சிறந்த வசன எழுத்தாளர்"விருதைப் பெற்றார்.
 
2005  ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய "கஜினி" பெரும் வெற்றி பெற்றது.இத்திரைப்படம் அவருக்கும் சூர்யாவுக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

2005  ஆம்  ஆண்டு ரம்யா என்பவரை  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
 
2006 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து அவர் இயக்கிய 'ஸ்டாலின்' நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படத்தின் கதைக்களம் "பே இட் பார்வேர்ட்" என்ற  ஆங்கிலப்படத்தின் தழுவலானாலும் தனக்கே உரிய பாணியில் இப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

தமிழில் இவர் இயக்கிய "கஜினி" திரைப்படத்தை,அமீர் கானை வைத்து இயக்கி ஹிந்தியில் தனது காலடியை பதித்தார். இந்திய சினிமாவிற்கே "100 கோடி வசூல்" என்ற வார்த்தையை இப்படத்தின் மூலம் முருகதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
 
2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய "7ஆம் அறிவு" திரைப்படம் கலந்த விமர்சனத்துக்கு உள்ளானாலும்,'உலக மக்களுக்கே நம் முன்னோர்கள்  முன்னோடியாக திகழ்ந்தனர்' என்பதை இப்படம் மூலம் இவர் உணர்த்த எண்ணியதை அனைவரும் பாராட்டினார்.

2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இவர் இயக்கிய "துப்பாக்கி" மெகா ஹிட்டாகி விஜய்க்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது."ஸ்லீப்பர் செல்ஸ்" என்று அழைக்கப்படும் தீவிர வாதிகளை இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்டுபிடித்து அழிப்பதை கதைக்களமாக கொண்ட இப்படம் அணைத்து தரப்பு மக்களிடமும்  அமோக வரவேற்பு பெற்றது.விஜய் திரைப்படங்களில் அதிக வசூல் செய்தத் திரைப்படம் என்ற புகழை முருகதாஸ் இயக்கிய இப்படம் பெற்றுத் தந்தது. இப்படத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக முருகதாஸ் செயல்படுகிறார் என்று ஒருசில அமைப்பினர் புரளியை கிளப்பினார். இதை முற்றிலுமாக மறுத்த முருகதாஸ்,சினிமாவில்  தனது நெருங்கிய நண்பர்கள் முஸ்லீம் தான் என்றும் அவ்வாறான எண்ணங்கள் தோன்றினால் தான் அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார். மேலும் இப்படத்தை 2014 ஆம் ஆண்டு ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து " ஹாலிடே" என்று ரீமேக் செய்தார்.

அதே ஆண்டு மீண்டும் நடிகர் விஜய்யுடன் கை கோர்த்த முருகதாஸ் "கத்தி" என்னும் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை அளித்தார். படத்தின் தலைப்பை போலவே இப்படத்தின் வசங்களும் கத்தி போல கடும் கூர்மையாக இருந்தது.  பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்,விவசாயிகள் தற்கொலை,மீத்தேன் எரிவாயு பிரச்னை,தண்ணீர் பிரச்சனை போன்ற சமூக பிரச்சனைகளை எடுத்துக்கூறிய இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பின், பலர் தாமாக முன்வந்து,பன்னாட்டு நிறுவனத்தின் குளிர் பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.இ[[இடத்தில் வரும் வசனமான,"செல் போன் ஆடம்பரம்.. தண்ணி அத்தியாவசியம்" அனைவரது சிந்தனையையும்  தூண்டியது.

இப்படம் வெளியாவதற்கு அவர் பெரும் சவால்களை சந்தித்தார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தனர்.படத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை நீக்கினால் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அந்த அமைப்பினர்கள் கூறியதால்,அந்நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டு இப்படம் வெளியானது.இதனால் அவர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளானார்.ஆனால் இப்படத்தின் மாபெரும்  வெற்றி அப்படத்தை எதிர்த்தவர்களுக்கு தக்க பதில் அளிக்கும் வகையில் அமைந்தது.இப்படத்திற்காக "பிலிம் பேர் சிறந்த இயக்குனர்" விருதைப் பெற்றார்.
 
2016 ஆம் ஆண்டு சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் "அகிரா" என்னும் ஹிந்தி படத்தை இயக்கினார்.தமிழில் வெளியான "மௌனகுரு" படத்தின் தழுவலான இப்படத்தில்  பெண்களின் தற்காப்பை மையமாக  கொண்டு கதைக்களம் அமைத்தார்.
 
தற்போது தெலுங்கு நட்சத்திர நடிகர் மகேஷ் பாபுவை  வைத்து தமிழ் மற்றும்  தெலுங்கில் 'ஸ்பைடர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.'மனித நேயம்' பற்றி இப்படத்தில் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இப்படம் வரும் செப்டெம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறை கூட்டணி அமைக்கிறார் முருகதாஸ்.
 
இயக்குனராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் முருகதாஸ்  திகழ்கிறார். தனது தயாரிப்பு நிறுவனமான 'ARM ப்ரோடுக்ஷன்ஸ்' சார்பாக தனது துணை இயக்குனர்களின் படங்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும்  தானே முன் வந்து தயாரித்து வருகிறார். "எங்கேயும் எப்போதும்", 'வத்திக்குச்சி', 'ராஜா ராணி', 'மான் கராத்தே',  '10 என்றதுக்குள்ள', 'ரங்கூன்'  போன்ற படங்களை தயாரித்தார்.

தொகுப்பு : ச.அ.ராஜ்குமார்