திராவிட முன்னேற்ற கழகம்

திராவிட முன்னேற்ற கழகம்

திராவிட முன்னேற்ற கழகம்

தொடக்கபுள்ளி:
டாக்டர் டி.எம்.நாயரும், சர். பிட்டி.தியாகராயரும் இணைந்து 20.1.1916 அன்று ஒரு கட்சியை நிறுவினர். அன்று அவர்கள் துவங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமை சங்கம்”.இது "நீதிக்கட்சி" என்றும் அழைக்கப்பட்டது.“தென்னிந்திய நல உரிமை சங்கம்” என்றும்,பின்னர்“நீதிக்கட்சி” என்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவைதான் திராவிட இயக்கத்தின் ஆணிவேராகும்!
திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி,ராபின்சன் பூங்காவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் திமுக உருவாகி, பொதுக்கூட்டம்,மாநாடு என பல்வேறு வடிவங்களில் மட்டுமில்லாமல்,தமிழ்நாடு,இந்தியா,உலக நாடுகள் அனைத்திலும் திமுக தமிழர்களின்  மனதில் இன்றளவும் நீங்காமல் வளர்ச்சி அடைந்துள்ளது.இன்றளவு வரை திமுகவின் பயணம்,வைரகல்லால் பட்டை தீட்டப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வருதல்:
பெரியார்,  1933 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணையான நாகம்மை இறந்தபின் 1949-இல் தன்னைவிட 49 வயது குறைந்த மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். அதேகாலகட்டத்தில் அப்போது கவர்னராக இருந்த ராஜாஜியை பெரியார் சந்தித்து பேசியதும் பெரும் சர்ச்சையைக்குள்ளாக்கியது. இது திராவிட கழகத்தில் பிளவை ஏற்படுத்தியது. அண்ணா மற்றும் அவரது ஆதரவாளர்கள்  மீதான பெரியாரின் நம்பிக்கையும் குறைந்தது.இதனால்,அண்ணா தலைமையில்,முன்னணி தலைவர்கள் வெளியேறி திமுகவை தோற்றுவித்தனர்.

திமுக தொடக்கம்:
1949ஆம் ஆண்டு,செப்டம்பர் 18ம் நாள்,சென்னை,ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது,திமுகவின் தொடக்க விழாவுக்கு லட்சோபலட்ச தொண்டர்கள் கூடினர்.அப்போது பேசிய அண்ணா,"எங்கள் கட்சிக்கு தலைவர் பெரியர்தான்,எனவே அவரது இடம் காலியாக வைக்கப்பட்டிருக்கும்" என்று அறிவித்தார். திமு கழகத்தின் பொது செயலாளராக அண்ணா(கா. ந. அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கபட்டார்.தொண்டர்கள் அனைவரையும் 'தம்பி' என்று பாசமாக அழைப்பார் அண்ணா,எனவே தான் தொண்டர்கள் 'அண்ணா' என்று அழைக்கின்றனர்.

திமுக-கொடி, சின்னம்:

  • நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமைந்துள்ளது.
  • கருப்பு: அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
  • சிவப்பு:அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையையை அழித்துக் கொண்டு வரவேண்டும்.
  • திமு கழகத்தின் சின்னமாக 'உதயசூரியன்' தேர்ந்தெடுக்கப்பட்டது. 2.3.1958 அன்று தேர்தல் ஆணையம் இதற்கான அங்கீகாரத்தை கொடுத்தது.


நோக்கம்:
கர்நாடகம்,ஆந்திரபிரதேசம், கேரள மாநிலங்களுக்கிடையே திராவிட கலாச்சாரத்தை பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்புக்குட்பட்டு பாதுகாப்பதும் முக்கிய நோக்கமாகும்.
கொள்கைகள்:

  1. மாநில மொழியை பிற மொழிகள் ஆதிக்கம் செலுத்த இடங்கொடுக்காமல் பாதுகாக்கவும் 
  2. வகுப்புவாதம், சுரண்டலற்ற அரசியலில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும்,
  3. மத்தியிலுள்ள அதிகாரத்தை பரவலாக்கவும், மாநில சுயாட்சிக்கு பாடுபடுவதும் ஆகும். 

தொண்டர்களின் பங்கு:
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் சுவரில் வரைவது,சுவரொட்டி ஓட்டுவது,காகித கொடிகளை கட்டுவது,ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்வது என அனைத்து செயல்களையும் தொண்டர்களே செய்து கட்சிப்பணி ஆற்றினர்.திமுகவில் அதிகளவில் சொற்பொழிவாளர்கள் இருந்தனர்.அவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கே ஊர் முழுவதும் கூடிவிடும். கருத்தரங்கம்,நாடகம்,கலைநிகழ்ச்சி,ஆர்ப்பாட்டம் என எல்லாவற்றிக்கும் தொண்டர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது."ஒரு டீயை சாப்பிட்டு கொண்டு,இரவும் பகலும் கட்சிப்பணி ஆற்றும் தொண்டர்கள் திமுகவில் மட்டுமே உண்டு " என்று அன்றைய முதல்வர் பக்தவத்சலம் கூறுவதே,இதற்கு சான்றாகும்.

தேர்தலில் போட்டியிடவில்லை:
1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் "திராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்களுக்கு, ஆதரவளிப்போம்" என்று அண்ணா அறிவித்தார்.தஞ்சாவூர் சுயம்பிரகாசம்,முகையூர் கோவிந்தசாமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.அவர்கள் "திராவிட நாடாளுமன்ற கட்சி" என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.பின்னாளில் இவ்வமைப்பு திமுகவில் இணைக்கப்பட்டது.

மும்முனை போராட்டம்:
ராஜாஜி அறிவித்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்தும்,ரயில்நிலையத்திற்கு 'டால்மியாபுரம்' என்று பெயர் சூட்டுவதை கண்டித்தும்,தமிழக மக்களை 'நான்சென்ஸ்' என்று கூறிய நேருவை கண்டித்தும் ஆகிய மூன்று போராட்டங்களை ஒன்றிணைத்து "மும்முனை போராட்டத்தை" திமுக நடத்தியது.இதில் 5000 பேர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.

திருப்புமுனை:
1956ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் திமுக மாநில மாநாடு 4 நாட்கள் நடைபெற்றது.மே 20ம் நாள் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார்.22ம் தேதி அதன் முடிவை அறிவித்தார் அண்ணா.அதாவது,வருகிற தேர்தலில் போட்டியிடலாம் என்று 56,942 பேரும், போட்டியிட வேண்டாம் என்று 4,203 பேரும் வாக்களித்தனர்.அதன்படி 1957 தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டி:
கோவிந்தசாமி அவர்கள் 1952 தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.அவர் தனது கட்சியை திமுகவில் இணைத்துக்கொண்டார்.இச்சின்னத்தை திமுக பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் அளித்தார்.இத்தேர்தலில் பல இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்களே கிடைத்தது. 1957 சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக.அண்ணா(காஞ்சிபுரம்),கருணாநிதி(குளித்தலை),க.அன்பழகன்(எழும்பூர்), ப.உ.சண்முகம்(திருவண்ணாமலை) இன்னும் பலர் வெற்றிபெற்றனர்.அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மலிங்கம்(திருவண்ணாமலை),ஈ. வி. கே.சம்பத்(நாமக்கல்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அண்ணா தோல்வி:
அடுத்து 1962ம் ஆண்டு வந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கிட்டத்தட்ட 50 இடங்களில் வெற்றி பெற்றது.காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட அண்ணா தோல்வியடைந்தார்.அப்பொழுது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

திராவிடநாடு:
திமுகவின் திராவிட நாடு கோரிக்கை 1962 வரை நீடித்தது.1963ஆம் ஆண்டு மே 3ம் நாள் இந்திய அரசியல் சட்டத்தின் 16வது திருத்தத்தின் படி,9வது பிரிவு நிறுத்தப்பட்டு,பிரிவினை கோருகின்ற இயக்கங்களை தடை செய்வதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதனால்  திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைப்பதாக அண்ணா அறிவித்தார்.

அமோக வெற்றி:
1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்டு,138 தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஒரு மாநில சட்டமன்றத்தில் தனித்த பெரும்பான்மை பெற்ற முதல் காட்சி என்ற சிறப்பை பெற்றது.அப்போது,நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றியது.

பெரியார் மீது கொண்ட மரியாதை:
1967இல் நடைபெற்ற தேர்தலில் பெரியார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அனால்1967 மார்ச் 6ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அண்ணா,உடனே திருச்சிக்கு சென்று தந்தை பெரியாரை சந்தித்து,"திமுக ஆட்சி பெரியாருக்கு காணிக்கை" என்று அண்ணா அறிவித்தார்.

அண்ணாவின் சாதனைகள்:

  • சென்னை மாகாணம் என்ற  பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
  • சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட ஒப்புதல் வழங்கினார்.
  • மும்மொழித்திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கினார்.
  • தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
  • 1969இல் 2வது உலக தமிழ்மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டினார்.
  • சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன. 
  • பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதும் முறையையும் கொண்டு வந்தார்.

அண்ணா மறைவு:
திடீரென ஏற்பட்ட உடல்நலகுறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து கொண்டார் அண்ணா.இச்சிகிச்சையில் அவருக்கு புற்று நோய் உள்ளது கண்டறியப்பட்டது.குணமடைந்து நாடு திரும்பிய அண்ணா,1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் மரணமடைந்தார்.பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த அளவிற்கு மக்கள் கடல் அலை போல் திரண்டனர். 
கலைஞருக்கு எம்.ஜி. ஆர் ஆதரவு: அண்ணாவின் மறைவுக்கு பின்னர்,முதலமைச்சர் பதவிக்கு மு.கருணாநிதியும்,நாவலர் நெடுஞ்செழியனும் போட்டியிட்டனர்.எம்.ஜி. ஆர் ஆதரவுடன் கலைஞர் முதல்வராக பதவி ஏற்றார்.

கலைஞரும் எம்.ஜி. ஆறும்:
காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். அப்போது கருணாநிதி பங்கேற்ற கல்லுக்குடி போராட்டத்தின் காரணமாகப் போடப்பட்ட கல்லுக்குடி வழக்கு நிதிக்காகவும், கழக நிதிக்காகவும் எம்.ஜி.ஆரின் நாடகக் கம்பெனி சார்பில் நாடகங்கள் நடத்தப்பட்டன. அப்போது கருணாநிதிக்கும்-எம்.ஜி.ஆருக்குமான நட்பு மேலும் வலுப்பட்டது.கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டு அண்ணா அடிக்கடி இப்படிச் சொல்வார். இவர்கள் என் தம்பிகள் என்று அடிக்கடி சொல்வார். எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், கருணாநிதியின் எழுத்தின் வீச்சையும் வைத்து அவர் அப்படிச் சொன்னார்.

முழக்கங்கள்:
அண்ணாவின் முதலாமாண்டு நினைவு நாள்,திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்கள் வெளியிடப்பட்டது. அந்த ஐம்பெரும் முழக்கங்கள்: 

  • அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
  • ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
  • இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
  • வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
  • மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

வரலாறு காணாத வெற்றி:
1971ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டன.சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு,184 இடங்களை திமுக கைப்பற்றி மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றது.நாடாளுமன்றத்தில் 25 இடங்களையும் பிடித்தது.15.03.1971 இல் கருணாநிதி 2வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

கருணாநிதி vs எம்.ஜி.ஆர்:
திமுகவில் எம்.ஜி. ஆர் பொருளாளராக செயல்பட்டு கொண்டிருந்தார்.திமுகவின் முக்கிய தலைவர்கள் எம்.ஜி. ஆரை புறக்கணித்தனர்.அப்பொழுது கலைஞருக்கும் எம்.ஜி. ஆருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கலைஞரோ தனது மூத்த மகன் மு.க.முத்துவை 'பிள்ளையோ பிள்ளை' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க வைத்தார்.எம்.ஜி. ஆருக்கு ஜோடியாக நடித்த மஞ்சுளா மற்றும் லட்சுமியை நடிக்க வைத்தார். ஏற்கனவே,1971 தேர்தலில் பொருளாளரான எம்.ஜி. ஆருக்கு தெரியாமல் வேட்பாளர்களுக்கு திமுக தலைமை பணம் வழங்கியது.இதனால் மிகவும் வருத்தமடைந்தார் எம்.ஜி. ஆர்.

எம்.ஜி. ஆர் நீக்கம்:
1972,அக்டோபர் 8 இல் திருக்கழுக்குன்றம் மற்றும் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி. ஆர், 'திமுக தலைவர் பொறுப்பிலிருந்து கிளை கழக செயலாளர் வரை தங்கள் சொத்து கணக்கை காட்ட வேண்டும்,இப்படி செய்தால் தான் திமுக மீது சொல்லும் குற்றச்சாட்டை பொய்யாக்க முடியும்' என்று கூறினார்.எம். ஜி. ஆரிடம் விளக்கம் கேட்காமலேயே 1972 அக்டோபர் 10 திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக உருவானது:
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற புதிய கட்சியை எம்.ஜி. ஆர் தொடங்கினார்.திமுகவில் இருந்து விலகி நிறைய பேர் எம்.ஜி. ஆருக்கு ஆதரவளித்தனர்.இவ்வாறு 17 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றார். அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.அதில் அண்ணா ஆணையிடுவது போன்ற படம் கொடிக்கு நடுவே இடம்பெற்றிருக்கும்.

சட்டப்பேரவை அமளி:
சட்டப்பேரவை தலைவரான கே.ஏ.மதியழகன் எம்.ஜி.ஆர் ஆதரவாளராக மாறினார்.பின்னர்,அவர் கருணாநிதி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.ஆனால்,அப்போது சபாநாயகர் இருக்கையின் முன்பு ஒரு நாற்காலி போடப்பட்டு,சட்டப்பேரவை துணை தலைவராக இருந்த பெ. சீனிவாசனை கொண்டு சபையை நடத்தி,'ஆட்சிக்கு ஆதரவு இருப்பதாக' கருணாநிதி அறிவித்தார்.ஒரே நாளில் இரண்டு கூட்டங்கள் நடந்து வேடிக்கையாக இருந்தது.கருணாநிதி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக ஆளுநர் அறிவித்தார்.கே.ஏ.மதியழகன் நீக்கப்பட்டு கா. கோவிந்தன் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெருக்கடி நிலை:
1975ம் ஆண்டு இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் அரசு இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையை கொண்டுவந்தது.தமிழகத்தின் மீது மத்திய அரசான காங்கிரஸ் தனது முழு அதிகாரத்தையும் செலுத்தி வன்முறையை தமிழகம் முழுவதும் பரப்பியது.இதனால்,1976ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் திமுக அரசு கலைக்கப்பட்டது.மிசா சட்டத்தின் கீழ் தமிழகவும் முழுவதும் பல்லாயிரகணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.சிட்டிபாபு,சாத்தூர் பால கிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறையிலேயே கொல்லப்பட்டனர்.

சர்க்காரியா கமிஷன்:
திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி,ஆர்.எஸ். சர்க்காரியா என்பவரது தலைமையில் ஒரு விசாரணை குழுவை மத்திய அரசு நியமித்தது.இதில் கருணாநிதி,அன்பில் தர்மலிங்கம்,மண்ணை நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குகள் தொடங்கப்பட்டன.
1977இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆசை தம்பி ஒருவர் மட்டும்  வெற்றி பெற்றார்.

எதிர்க்கட்சி:
1977,ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டு 48 இடங்களில் வெற்றி பெற்றது.தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பொறுப்பில் இருந்து கலைஞரும்,பொது செயலாளர் பொறுப்பில் இருந்து நெடுஞ்செழியனும் விலகினர்.பின்னர் கலைஞர் தனது முடிவை திரும்ப பெற்று கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி:
1980இல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 38 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.சார்க்காரியா கமிஷனில் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் மாற்றப்பட்டன,சாட்சிகள் மாற்றப்பட்டு,வழக்குகள் திரும்ப பெறப்பட்டன.சட்டமன்ற தேர்தலில் 68 இடங்களை திமுக கூட்டணி பெற்றது.130 இடங்களை பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது.கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

இலங்கை தமிழர்கள் படுகொலை:
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.தமிழ்நாட்டு அரசியலில் புயல் வீசியது.கலைஞர் கருணாநிதியும்,அன்பழகனும் சட்டமன்ற பொறுப்பில் இருந்து விலகினர்.

இந்திரா காந்தி படுகொலை:
1984ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார்.உடனே,ராஜிவ் காந்தி நாடாளுமன்றத்தை கலைத்தார்.அப்பொழுது எம்.ஜி. ஆருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.அப்பொழுது திமுக வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மீண்டும் ஆட்சி:
டிசம்பர் 24, 1987 அன்று எம்.ஜி. ஆர் இயற்கை எய்தினார்.அப்போது,அதிமுக இரு அணிகளாக பிரிந்தன.இதனால், நான்கு முனை போட்டி நிலவியது.146 இடங்களை திமுக கைப்பற்றியது.13 வருட இடைவெளிக்கு பிறகு கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார்.அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஓர் இடத்தில கூட வெற்றிபெற இயலவில்லை.பிரதமராக இருந்த வி.பி.சிங்,தேசிய முன்னணியின் இடம் பெற்று இருந்ததால்,திமுக சார்பில் முரசொலி மாறன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.பொய்க்குற்றசாட்டுகளை கூறி 1991ம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்,ஜெயலலிதா.

ராஜிவ் படுகொலை:
1991 தேர்தலில் பிரச்சார கூட்டத்தின் போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார்.அவரும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

வைகோ நீக்கம்:
1993ம் ஆண்டு கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து, 'வைகோவின் ஆதாயத்திற்காக விடுதலை புலிகள் தம்மை கொலை செய்ய திட்டமிடுவதாக' கலைஞர் கூறினார்.வைகோ வெளியிட்ட அறிக்கையில் 'கருணாநிதிக்காக உயிரும்' கொடுப்பேன்  என்று கூறினார்.இதனால்,கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சியில் இடிமழை உதயன் தீக்குளித்து இறந்தார்.அரவகுறிச்சியில் தண்டபாணியும் தீக்குளித்தார்.இவர்கள் அல்லாது இன்னும் பலரும் இறந்தனர்.1993,டிசம்பர் 24இல் வைகோவை ஆதரித்து திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 29இல் கருணாநிதி தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டினார்.இந்நிலைமையில் 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்' தொடங்கப்பட்டது.

4வது முறை முதல்வர்:
1996 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 176 இடங்களை கைப்பற்றி 4 வது முறையாக கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களை கைப்பற்றியது.முரசொலி மாறன்,திண்டிவனம் வெங்கட்ராமன்,என். வி. என். சோமு,டி. ஆர்.பாலு ஆகியோர் மத்தியில் அமைச்சராக பணியாற்றினர்.

தொடரும் கவிழ்ப்பு:
காங்கிரஸ் ஆதரவை விளக்கி கொண்டதால்,தேவ கவுடா அரசு கவிழ்ந்தது.குஜ்ரால் அரசு பொறுப்பேற்றது. ராஜிவ் கொலை வழக்கில் திமுக சம்பந்தம் பட்டிருப்பதால் திமுக உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் அறிவித்தது.குஜ்ரால் அரசு இதனை மறுத்தது.இதனால் காங்கிரஸ் அரசு ஆதரவை விளக்கி கொண்டது,குஜ்ரால் அரசு கவிழ்ந்தது.1998 நாடாளுமன்ற தேர்தலில் திமுக 5 இடங்களில் வெற்றி பெற்றது.13 மாதங்களில் அதிமுக அரசு தனது ஆதரவை விளக்கி கொண்டதால்,வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.1999 நாடாளுமன்ற தேர்தலில் 26 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி மாறன்,இலாக்கா இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.

கட்சிக் கூட்டணி:
2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சாதிகட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து.பாட்டாளி மக்கள் கட்சி,புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி,மக்கள் தமிழ் தேசம் என இன்னும் பல கட்சிகள் இடம் பெற்றுஇருந்தன.  2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது.

மைனாரிட்டி அரசு:
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 95 இடங்களே கிடைத்தன.கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 163 இடங்களை பெற்றிருந்தது.கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.அதிமுக அரசு திமுக அரசை 'மைனாரிட்டி அரசு' என்று விமர்ச்சித்தது.

கருணாநிதி ஆட்சியின் சாதனைகள்:

  • குடிசை மாற்று வாரியம்.
  • பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள்.
  • கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.
  • கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – அவர்களுக்கு இலவச கண்ணாடிகள்.
  • பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி - ஆடைகள்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
  • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
  • போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ்கமிஷன் அமைக்கப்பட்டது.
  • தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்விளக்குவசதி.
  • விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோகதாரர்கள் சட்டம்.
  • பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப்பெற்றது.
  • அரசுஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்.
  • சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்பு முறை ஒழிப்பு.
  • கைரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது.
  • ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.
  • பெண்களுக்கு சொத்துரிமை.
  • மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.
  • ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம்.
  • அரசுப்பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.
  • கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.
  • சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
  • புதிய பல்கலைக்கழகங்கள்
  • மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.
  • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை.
  • ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.

 

2009,2011 தேர்தல்கள்:
2009 நாடாளுமன்ற தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது.2011 சட்டமன்ற தேர்தலில் வெறும் 23 சீட்களை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.முதன்மை எதிர்க்கட்சி என்ற இடத்தை பறிக்கொடுத்தது.

2014,2016 தேர்தல்கள்:
2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.திமுக ஒரு தொகுதி கூட கைப்பற்றவில்லை.2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.திமுக 89 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சி என்ற சாதனை படைத்துள்ளது.

செயல்தலைவர்:
வயது மூப்பின் காரணமாக கருணாநிதிக்கு உடல்நலக்குறைவினால் தற்போது ஓய்வு எடுத்துவருகிறார். எனவே அவரது தலைவர் பணியை மு.க.ஸ்டாலின்க்கு தற்போது திமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.இவர் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவியை மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.திமுகவின் பொது செயலாளர் ஆக அன்பழகன் 9 வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். முப்பெரும் விழா,வைர விழா ஆகிய நிகழ்வுகளை  திமுக சிறப்பான முறையில் நடத்தியது.ஆளுங்கட்சிக்கு எதிராகவும்,மக்களுக்கு ஆதரவாகவும்  செயல்பட்டுவருகிறது திமுக.இளைஞர்களால் வளர்ந்த திமுக,தற்போது இளைஞர்களை தேடி வருகிறது.

'ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா'! தே.மு.தி.க-வின் புது டீல்..? #MKStalin #Vijayakanth #DMK #DMDK
விகடன் விமர்சனக்குழு

'ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா'! தே.மு.தி.க-வின் புது டீல்..? #MKStalin #Vijayakanth #DMK #DMDK

DMK-வும் இல்ல, BJP-யும் இல்ல! TTV வைக்கும் ட்விஸ்ட்! | The Imperfect Show
விகடன் விமர்சனக்குழு

DMK-வும் இல்ல, BJP-யும் இல்ல! TTV வைக்கும் ட்விஸ்ட்! | The Imperfect Show

No alliance with Dmk and Admk - Vaiko
விகடன் விமர்சனக்குழு

No alliance with Dmk and Admk - Vaiko

KANIMOZHI RELEASED - DMK Protest 4th July 2012
விகடன் விமர்சனக்குழு

KANIMOZHI RELEASED - DMK Protest 4th July 2012

M.K.STALIN RELEASED - DMK Protest 04-07-2012.flv
விகடன் விமர்சனக்குழு

M.K.STALIN RELEASED - DMK Protest 04-07-2012.flv

DMK Protest - Junior Vikatan
விகடன் விமர்சனக்குழு

DMK Protest - Junior Vikatan

Vaiko on MDMK Future, Vijayakanth, DMK Stand, Tamil Eelam | Ananda Vikatan
விகடன் விமர்சனக்குழு

Vaiko on MDMK Future, Vijayakanth, DMK Stand, Tamil Eelam | Ananda Vikatan

DMK Agitation against power problem - Karunanidhi Speech
விகடன் விமர்சனக்குழு

DMK Agitation against power problem - Karunanidhi Speech