இரோம் சானு ஷர்மிலா

இரோம் சானு ஷர்மிலா

இரோம் சானு ஷர்மிலா

“அன்பு தான் என்னிடமுள்ள ஒரே செய்தி”. இந்த சிறிய செய்தியைத் தான் இரோம் ஷர்மிலா கிட்டத்தட்ட 17 வருடங்களாக அனைவருக்கும் கடத்த முயன்று கொண்டிருக்கிறார். இன்று இவர் உலகின் மிக நீண்ட உண்ணாப் போராட்டத்தைக் கைக்கொண்டவர், சமூக செயற்பாட்டாளர், கவிஞர், இரும்புப் பெண்மணி, மணிப்பூரின் மகள், மனித உரிமைப் போராளி என்று பல்வேறு பெயர்களால் அறியப்பட்டாலும், அடிப்படையில் இவர் யார் என்றால் மனிதர்களை நேசிப்பவர். சக மனிதர்களின் மீதான அன்பு தான் இவரின் மிகப்பெரும் ஆயுதம். மென்மையான விஷயமாக நாம் கருதும் இந்த ஒன்றைக் கொண்டு தான் இவர் தனி ஒருவராக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி இராணுவத்தையே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.

பிறப்பு:

நம் அனைவராலும் மறக்கப்படும், மறுக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கொங்பால் என்னும் ஊரில் மார்ச் 14, 1972-இல் ஐரோம் சி நந்தாவுக்கும் இரோம் ஓங்பி சக்திக்கும் பிறந்தவர், இரோம் சானு ஷர்மிலா. எளிமையான குடும்பம் தான். அப்பா, கால்நடை மருத்துவமனை ஊழியர், உடன் பிறந்தவர்கள் 8 பேர். அண்ணன் இரோம் சிங்கஜித் சிங் தங்கை போராட்டத்தைத் தொடங்கிய பின்னர், அவரைப் பார்த்துக்கொள்வதற்காகத் தன் பணியை உதறித் தள்ளியவர். பன்னிரெண்டாம் வகுப்பு வரை இரோம் படித்தார். பின்பு, மனித உரிமை அமைப்புகளிலும், பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளியிலும், இளையோர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். வெள்ளை நிறம், சுருட்டை முடி, நீளமான முகம், சிறிய கண்கள் என சாதாரணமான தோற்றம் தான். ஆனால், அவரது செயல்பாடுகள் வலிமையாய் இருக்கும்.

தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு:

மலோம், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஓர் அழகிய சிற்றூர். அன்று, நவம்பர் 2, ஆண்டு 2000.  இரோம் ஷர்மிலாவின் 16 ஆண்டுகள் உண்ணாப்போராட்டத்திற்கான விதை அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் அன்று தான் விதைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் கொஞ்சம் கூட்டம் தான், 10 பேர் நின்றிருந்தனர். திடீரென்று சீறிப் பாய்ந்து வந்த தோட்டாக்கள் அங்கு நின்றிருந்த அவ்வளவு பேரின் உயிர்களையும் பறித்தன. இறந்து போனவர்களுள் 62 வயதான லெய்சங்பம் இபெடோமியும் தேசிய சிறார் வீர தீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணியும் அடக்கம். ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்தது, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம். வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் இராணுவம் சந்தேகத்தின் பெயரில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம், சுட்டுத் தள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் வாரண்ட் இன்றி சோதனை போடலாம். இந்த சட்டத்தின் பெயரில் தான் இந்திய இராணுவத்தின் துணைப் படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ் மலோம் படுகொலையை நிகழ்த்தி இருந்தது. இந்த சம்பவம் தான் இரோம் ஷர்மிலாவை மணிப்பூரின் மகளாக மாற்றிய சம்பவம்.

உண்ணாப்போராட்டத்தின் தொடக்கம்:

நவம்பர் 4 இரவு உணவு உண்டுவிட்டு, தாயிடம் ஆசீர் வாங்கி, அடுத்த நாள் மலோமில் காலை தனது உண்ணாப்போராட்டத்தைத் தொடங்கினார். ஓர் நொடியில் எடுத்த முடிவல்ல இது. காந்தியையும், நெல்சன் மண்டேலாவையும் தனது வழிகாட்டிகளாகக் கொண்ட இரோம் ஷர்மிலா அரசை எதிர்த்துப் போராட கையிலெடுத்த ஆயுதம் அகிம்சை. ஆயுதப்படை அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை உண்ண மாட்டேன், தண்ணீர் குடிக்க மாட்டேன், கண்ணாடியில் முகம் பார்க்க மாட்டேன், தலை சீவமாட்டேன் என உறுதியாய் உரைத்த இரோம் ஷர்மிலா போராட்டத்தைத் தொடங்கிய போது அவருக்கு வயது 28.  இடையில், ஒரே ஓர் முறை தன் தாயை நேரில் பார்த்தார். பின்பு, தாயின் முகம் பார்த்தால், தன் முடிவில் இருந்து தான் பின்வாங்கக்கூடும் என நினைத்து, அவரை சந்திப்பதையும் அறவே தவிர்த்தார்.

தொடர்ந்த அடக்குமுறைகள்:  

அவர் போராடத் தொடங்கிய 3 நாட்களில் காவல் துறையினால் தற்கொலை செய்து கொள்ள முயலுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் உடல் நிலை வெகு வேகமாகக் குலையத் தொடங்கியது. சிறையில் இருந்த போது, 21 நவம்பர் அன்று வலுக்கட்டாயமாக நாசித்துவாரம் வழியாக அவருக்குத் திரவ உணவு செலுத்தப்பட்டது. உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கின, மாதவிடாய் முற்றிலுமாய் நின்று போனது. ஆயினும், தன் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. ஆண்டுகள் பல கடந்தும் இரோம் ஷர்மிலாவின் போராட்டம் தொடர்ந்தது. வருடாவருடம் காவல் துறை அவரைக் கைது செய்வதும், பின்பு ஓர் ஆண்டு முடிவில் விடுவிப்பதும், மறுபடி ‘தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார்’ என குற்றம் சாட்டி சிறையில் அடைப்பதும் தொடர்ந்தது. இரோம் ஷர்மிலா தொடர்ந்தார், இந்த ஜனநாயக நாட்டின் இன்னொரு முகத்தை அதன் முழு பரிமாணங்களுடன் உலகிற்குக் காட்டத் தொடர்ந்தார், உடல் நிலை, பெண்மை என அனைத்தையும் இழந்தும் தொடர்ந்தார், மணிப்பூரின் மகளாக, இந்தியத் தாயின் மகளாக.

கிடைத்த உச்சிமுகர்தல்களும், விமர்சனங்களும்:  

முதலில், இவரின் போராட்டம் ‘செய்தித்தாளின் ஏதோ ஓர் பக்கத்தில் கண்டுகொள்ளப்படாத மூலையில்’ என்றளவில் தான் அனைவராலும் கடக்கப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல, அவரது உறுதி மொத்த தேசத்தின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. தனி ஒருவராய் நின்றிருந்த இரோம் ஷர்மிலாவின் பின்னால் மாணவர்களும் மனித உரிமைப் போராளிகளும் அணி திரளத் தொடங்கினர். 2 அக்டோபர் 2006-இல் தில்லி சென்ற இரோம் அங்கு தனது வழிக்காட்டியான காந்தியடிகளுக்கு வணக்கம் செலுத்தினார். அன்று மாலையே ஜந்தர்மந்தரில் தன் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தைத் துவங்கினார். அவர் பின்னால், மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், இந்திய நாட்டின் மக்களும் திரண்டனர். அக்டோபர் 6 அன்று தில்லியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தபடியே, அவர் பிரதமருக்கும், குடியரசுத் தலைவராக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதினார். 2011-இல் அண்ணா ஹசாரே மணிப்பூர் வர அவருக்கு அழைப்பு விடுத்தார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் இரோமின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. அவர் பேரில், குறிப்பாக அவர் போராட எடுத்துக் கொண்ட முறையின் பேரில் விமர்சனங்கள் பாயாமல் இல்லை. அகிம்சையாலும், உண்ணாப்போராட்டத்தாலும் எப்படி இராணுவத்திற்கான சட்டத்தை அகற்ற அரசை நிர்பந்திக்க வைக்க முடியும் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனாலும், கேள்வி கேட்டவர்களாலும் கூட அவரது 16 ஆண்டுகள் உறுதியைக் கண்டு வியக்காமலிருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

மனோரமா தேவி:

இரோம் ஷர்மிலா போராடத் துவங்கிய ஒரு சில வருடங்களுக்குள் 2004-இல் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தின் பெயரில் மற்றொரு சம்பவம் மணிப்பூரில் நடந்தது. அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரால் மனோரமா என்னும் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, சுடப்பட்டு இறந்தார். இது நடந்தேறிய ஒரு சில நாட்களில் உடலில் ஆடைகள் ஏதுமின்றி ‘இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி’ என்று எழுப்பட்டிருந்த பதாகைகளைத் தாங்கியபடி மணிப்பூர் பெண்கள் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகம் முன்பு போராடினர். போராடிய அனைவரும் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரிய அளவில் எதிர்ப்பலைகளை நாடெங்கும் உருவாக்கியது, ஆயுதப் படை அதிகார சட்டத்தின் பெயரில் நடக்கும் அத்துமீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது, ‘இந்த சட்டத்தை நீக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கும் குரல்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. இரோம் ஷர்மிலாவின் ஆதரவாளர்களும் பெருகினர்.

கிடைத்த அங்கீகாரங்கள்:

இரோம் ஷர்மிலாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெற்றன. புனே பல்கலைக்கழகம் இரோம் ஷர்மிளாவின் 39-ஆம் ஆண்டு பிறந்தநாளை ஒட்டி 39 மணிப்பூர் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியது. ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் இரோம் ஷர்மிலாவை ‘prisoner of conscience’ என அறிவித்தது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்குத் தான் முதல் மயிலம்மா விருது வழங்கப்பட்டது.

அரசியல் நுழைவு:

அவர் உண்ணாப்போராட்டம் தொடங்கிய பல்வேறு காலக்கட்டங்களில் பல அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தலில் நிற்க அழைப்புகள் வந்தன. அவற்றை எல்லாம் அவர் நிராகரிக்கவே செய்தார். 16 ஆண்டுகள் உண்ணாப்போராட்டம் நடத்திய பிறகு, ஆகஸ்ட் 9, 2016 அன்று தேன் உண்டு தன் உண்ணாப்போராட்டத்தை முடித்துக் கொண்டார். தேர்தல் அரசியலில் நுழைந்து மணிப்பூர் முதல்வராகி, தன் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளப் போவதாகக் கூறினார். அவரது நீண்ட காலப் போராட்டத்திற்குக் கிடைத்த பதில், அவரது போராட்ட வழியை மாற்றவும், தேர்தலில் நிற்கவும் அவரைத் தூண்டி இருக்கலாம். ஆனால், இவரது முடிவு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ‘குடியரசுத் தலைவரால் கூட அசைத்துப் பார்க்க முடியாத சட்டத்தை இவர் மணிப்பூர் முதல்வராகி மாற்றப் போகிறாரா?’ எனக் கேள்விகள் எழுந்தன. இவரின் 16 ஆண்டுகள் தியாகத்திற்கு அரசியல் ஆசை என்ற பூச்சும் பூசப்பட்டது. அப்போது நடந்த மணிப்பூர் தேர்தலில் அவர் அப்போதைய முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டார். வெறும் 90 வாக்குகளே இரோமிற்கு கிடைத்தன. மணிப்பூர் மக்களே கூட தன்னை ஆதரிக்காதது அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. ஆனாலும், தன் முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. ‘ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை என் போராட்டம் தொடரும்’ என அறிவித்தார்.

இன்று, இயல்பான வாழ்க்கைக்கு இரோம் ஷர்மிலா திரும்பி இருக்கிறார். தன் அன்னையுடன் இருக்கிறார், தன் காதலரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி இருக்கிறார். அநேகமாக, அத்திருமணம் கொடைக்கானலில் நடக்கலாம். ஆயினும், அவர் திருமணம் அங்கு நடக்க ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

போராட்டம் தொடங்கிய போது அவருக்கு வயது 28, இன்றோ கிட்டத்தட்ட 44 வயது அவருக்கு. தன் வாழ்வின் அழகிய பருவங்கள் அனைத்தையும் போராட்டத்தில் தொலைத்தவர் அவர். ஆனால், அவருக்குக் கிடைத்தது அவமானங்களும், புறக்கணிப்புகளும். ஆயினும், அவர் தொடர்கிறார், சக மனிதர் மீதான அன்பு அவருக்கு ஒரு போதும் குறைந்ததே இல்லை. 

இரும்பு மங்கை இரோம் ஷர்மிளாவின் கதை - உலகை மாற்றிய தலைவர்கள் Podcast
விகடன் டீம்

இரும்பு மங்கை இரோம் ஷர்மிளாவின் கதை - உலகை மாற்றிய தலைவர்கள் Podcast

நாகாலாந்து : ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் தேவையா? ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சொல்வதென்ன?
தி.முருகன்

நாகாலாந்து : ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் தேவையா? ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சொல்வதென்ன?