ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

பிறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதாவின் தாய்வழிக் குடும்பம் நெல்லுாரில் ரொம்ப காலம் வசித்தவர்கள். மத்திய தர குடும்பம். ஜெயலலிதாவின் தாய்  சந்தியாவோடு (நிஜப்பெயர் வேதவல்லி) பிறந்தவர்கள் 3 பேர். சீனிவாசன், அம்புஜா என்கிற வித்யாவதி மற்றும் பத்மா. சந்தியாவின் பெற்றோர் ரங்கஸ்வாமி ஐயங்கார் - கமலம்மாள்.  பின்னாளில் குடும்பச் சூழலால் நெல்லுாரிலிருந்து சந்தியாவின் குடும்பம் பெங்களுருக்குக் குடிபெயர நேர்ந்தது. 

 

சந்தியாவின் தந்தை அங்குள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்தார். சந்தியாவிற்கு 14 வயதாகும்போது அவருக்கு அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் டாக்டர் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமுடன் திருமணம் நடந்தது. ரங்காச்சாரி மைசூரில் மிகப் பிரபலமான மருத்துவர். அந்தக்காலத்திலேயே ஆபரேஷனுக்கு 100 ரூபாய் கட்டணம் வாங்கியவர். தன் மருத்துவச் சேவைக்காக பிரிட்டிஷ் அரசிடமிருந்து 'ஸிப்பர் ஃபீல்ட்' விருதைப் பெற்றவர். சந்தியா - ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூரில் பிறந்தது. மைசூர் அரண்மனையில் சிறப்பான சேவையாற்றியதற்காக அரண்மனை வாரிசுகளுக்கே உரிய பெயரின் முன் ஜெய என்று சேர்க்கும் பெருமைமிக்க தகுதியை மன்னர் ரங்காச்சாரி குடும்பத்திற்கு வழங்கியிருந்தார். அதன்படி குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டது. குடும்ப வழக்கப்படி கோமளவல்லி என்ற பெயரிலும் குழந்தையை அழைத்தனர். ஆயினும் குடும்பத்தினர் அம்மு என்றே செல்லமாக அழைத்தனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார்.

இளமைப் பருவம்

ஜெயலலிதாவுக்கு ஒரு வயதானபோது  அவரின் தந்தை ஜெயராம் மறைந்தார். தம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி சென்னையில் தங்கி சினிமாவில் நடித்துவந்த தங்கை வித்யாவதியிடம் தன் இரு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தார் சந்தியா. ஜெயலலிதாவுக்கு அப்போது நான்கரை வயது. சகோதரருக்கு ஏழு வயது. சென்னையில் சந்தியாவை சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கற்கோட்டை என்ற படத்தின் மூலம் அவர் சினிமாத்துறையில் கால்பதித்தார். சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் அம்முவும் அவர் சகோதரரும் சேர்க்கப்பட்டனர். சினிமாவில் பிஸியான நடிகையானதால் சந்தியாவால் குழந்தைகளைப் பராமரிக்க முடியவில்லை. பிள்ளைகளை நேரடி பராமரிப்பில் வளர்க்க முடியாத நிலையில் பெங்களுரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சந்தியா. தனது 6 வயது முதல் 10 வயது வரை பெங்களுரில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தார் ஜெயலலிதா. அங்கு பிஷப் காட்டன்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டனர் அவர்கள். பள்ளியில் ஜெயலலிதா ஆங்கிலத்திலும் வரலாற்றுப் பாடத்திலும் முதல் மாணவியாக இருந்தார். விளையாட்டிலும் குறும்பிலும் கூட ஜெயலலிதா படுசுட்டி. ஒருமுறை தீபாவளிப் பண்டிகைக்கு ஒரேநாள் விடுமுறை அளித்ததற்காக பள்ளியைப் பழிவாங்க ஜெயலலிதாவும் அவரின் தோழிகளும் திட்டமிட்டனர். தீபாவளிக்கு முன்தினம், பள்ளியின் சமஸ்கிருத வாத்தியார் வகுப்பறையில் லேசாகக் கண்ணயர்ந்தபோது அவரது இருக்கைக்குக் கீழே பட்டாசை வைத்ததோடு, அவருடைய கால்களிலும் சக்கர ஷூவை மாட்டிவிட்டனர். நைசாக சென்று பட்டாசைக் கொளுத்திவிட அதிர்ந்து எழுந்த வாத்தியார் பதறியபடி ஓட முயன்றார். ஆனால் காலில் கட்டியிருந்த சக்கர ஷூவினால் சார்லி சாப்ளின் போல இங்கும் அங்கும் ஓடி, தடுமாறி விழுந்தார். ஜன்னலுக்கு வெளியே நின்றபடி இதை ரசித்துச் சிரித்தனர் மாணவிகள். ஜெயலலிதாவின் குறும்புக்கு அவருக்குக் கிடைத்த தண்டனை 4 பிரம்படி. 

ஜெயலலிதாவுக்கு பத்து வயதானபோது சந்தியா அவரையும் ஜெயக்குமாரையும் சென்னைக்கே அழைத்துவந்துவிட்டார். பொருளாதார ரீதியாக குடும்பம் வளம்பெற்றிருந்த நேரம். தி.நகர் சிவஞானம் தெருவில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தார் சந்தியா. ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். 1963 ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளித்தேர்வில் ஜெயலலிதா  மாநிலத்திலேயே முதல்மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கல்லுாரியில் தொடர்ந்து படிக்க மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கியது. ஆங்கிலத்தில் மிகப் புலமை பெற்றிருந்த ஜெயலலிதா எதிர்காலத்தில் கல்லுாரியில் ஆங்கில விரிவுரையாளராகவே விரும்பினார். ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாத்துறைக்கு திசைமாறியது காலத்தின் கோலம்... 

குடும்பம்

ஜெயலலிதா திருமணம் செய்துகொள்ளவில்லை. மிக இளம்வயதிலேயே சினிமாத்துறையில் நுழைந்த பல ஆண்டுகள் பிஸியான நடிகையாக ஜொலித்தார். தொடர்ந்து தீவிர அரசியலிலும் அவர் பங்கேற்றதால் திருமணம் செய்துகொள்வது பற்றி அவர் சிந்திக்கவில்லை. ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் - தாயார் சந்தியா. ஒரே சகோதரர் ஜெயக்குமார். அவரது இரு பிள்ளைகள் தீபா- தீபக் இவர்கள்தான் ஜெயலலிதாவின் குடும்பம். இருப்பினும் தன் இறுதிக்காலத்தில் ஜெயலலிதா உறவினர்களிடம் பெரிய அளவில் நட்பு பாராட்டவில்லை. நடிகையாக இருந்தபோது சித்தி- சித்தப்பா மற்றும் அவரது உறவினர்கள் என புடைசூழ இருந்தவர் அரசியல்வாதியாக மாறிய காலகட்டத்தில் அவர்களிடமிருந்து விலகியிருந்தார். பரபரப்பான அரசியல்வாதியாக அவர் ஒருவெடுத்தபின் அவரது உடன்பிறவாச் சகோதரி எனக் கூறப்படும் சசிகலாவைத்தான் தன்னுடன் தங்கவைத்துக்கொண்டார். 

எனக்கும் எல்லா பெண்களைப்போல் ஒரு ஆண்மகனின் அன்பில் திளைத்துவாழும் இயல்பான பெண்ணின் ஆசை இருந்தது. ஆனால் காலம் எனக்கு அந்தவாய்ப்பை அளிக்கவில்லை என பின்னொருநாளில் தனக்கென குடும்பம் இல்லாத கவலையை வெளிப்படுத்தினார்.

சிறுவயது சாதனை

பிரபல நடன ஆசிரியர் ஸரசாவிடம் நாட்டியம் பயின்ற ஜெயலலிதா பள்ளி வயதிலேயே சிறந்த நாட்டியத்தாரகையாகத் திகழ்ந்தார். எட்டு வயதில் நடிகர் சிவாஜிகணேசன் தலைமையில் அரங்கேற்றம் செய்தார். படிப்பில் படுசுட்டி மட்டுமின்றி நீச்சல் வீராங்கனையாகவும் குதிரையேற்றம் தெரிந்தவராகவும் இருந்தார். ஜெயலலிதாவின் ஆங்கிலப்புலமை பள்ளிக்காலத்திலேயே அபாரமானது. வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் எப்போதும் அவரே முதல்மதிப்பெண். சர்ச் பார்க்கில் படித்தபோது அவர் எழுதிய ஒரு கட்டுரை சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியானது. 5 வயதில் அவரது புகைப்படம் ஒன்று  இந்திய புகைப்படக் கண்காட்சியில் முதல்பரிசுக்குத் தேர்வாகி தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. ஒருமுறை விடுமுறையில் தாயாருடன் சென்னை வந்த ஜெயலலிதா, தாய் சந்தியாவுடன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டார். ஸ்ரீசைல மகாத்மியம் என்ற அந்த படத்தில் பால பார்வதி வேடத்தில் நடிக்கவேண்டிய குழந்தை அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வரவில்லை. குழந்தை வரவில்லையென்றால் தயாரிப்பாளருக்கு பல ஆயிரங்கள் நட்டம் ஆகும் என்ற நிலையில் ஜெயலலிதாவை வற்புறுத்தி நடிக்கவைத்தனர். எட்டு வயதில் முதன்முறையாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஜெயலலிதா.    

தனிப்பட்ட வாழ்க்கை

ஜெயலலிதாவின் வாழ்வில் முழு ஆளுமை செலுத்தியவர்களில் முதன்மையானவர் அவரின் தாய் சந்தியா. ஆறு வயதில் தாயிடம் என்ன அன்பை எதிர்பார்த்தாரோ வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தார். பெரிய நடிகையானபின்னும்கூட அவர் அணியும் உடை, அணிகலன்களை அவரின் தாயாரேதான் தேர்வு செய்வார். தாயின் கண்ணசைவின்றி எந்த ஒன்றையும் செய்யமாட்டார் அவர். அத்தனை அம்மா செல்லம். தாயும் சித்தியும் நடிகைகள். 24 மணிநேரமும் சினிமா சம்பந்தமான பேச்சைக் கேட்டு வளர்ந்தவர். இத்தனைக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்றாலும் சினிமா மீது பெரிய கவர்ச்சி அவருக்கு இருந்ததில்லை. ஆனால் நாடகங்களில் நடித்திருக்கிறார். ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் மறைந்த துக்ளக் சோவுடன் அவர் பல ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு எபிசில் என்ற ஆங்கிலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. கர்ணன் படத்தின் நுாறாவது நாள் விழாவிற்கு தாயாருடன் சென்றபோது பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்துலு ஜெயலலிதாவை தன்னுடைய கன்னடப் படத்தில் நடிக்க வற்புறுத்தினார். தாயின் வார்த்தைகளுக்காக விருப்பமில்லாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா. 

பின்னாளில் சாஸ்திர சம்பிரதாயங்களிலும் மூட நம்பிக்கைகளில் மூழ்கியவராகவும் விமர்சிக்கப்பட்ட ஜெயலலிதா தன் முதல் படத்தில் விதவை வேடத்தில் நடித்தது ஆச்சர்யமானது. முதல் படத்திலேயே விதவை வேடத்தில் மகளை நடிக்க ஒப்புக்கொண்ட சந்தியாவின் துணிச்சலையும் பாராட்டவேண்டும். நன்ன கர்த்தவ்யா என்ற அந்த படத்தின் ரஷ்ஷை அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் காண நேர்ந்தது. தனது புதிய படமான 'வெண்ணிற ஆடை'க்கு இளமையான, துறுதுறுப்புடன் நடிக்கும் நடிகை ஒருவரை செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து தேடிக்கொண்டிருந்தவருக்கு ஜெயலலிதாவைக் கண்டதும் மகிழ்ச்சி. உடனே சந்தியா வீட்டின் கதவைத் தட்டினார். 1963-ம் வருட இறுதி அது. மெட்ரிகுலேஷன் பரீட்சையில் முதலாவதாகத் தேறி மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கடிதத்தைப் பள்ளித்தோழிகளிடம் பெருமிதமாகக் காட்டிவந்த ஜெயலலிதாவின் பேராசிரியர் கனவைத் தகர்த்தது ஸ்ரீதரின் பிடிவாதம். வெண்ணிற ஆடையில் நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவை கன்னடத்தில் அறிமுகம் செய்த அதே பந்துலு தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்தார். அந்தத் திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்வை மாற்றியமைத்தது. படப்பிடிப்பில் யாருடனும் அரட்டை அடிக்காதது, புறம் பேசாதது, ஓய்வு கிடைத்தால் ஆங்கில நாவலுடன் ஒதுங்கிவிடுவது, மிதமிஞ்சிய அறிவும் திறமையும் போன்ற ஜெயலலிதாவின் குணங்கள் எம்.ஜி.ஆருக்கு அவர் மேல் மதிப்பைக் கூட்டின. தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார். ஒரு சில வருடங்களில் உச்சக்கட்டப் புகழடைந்தார். எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் இணைந்து நடித்த நடிகை எனப் புகழ்பெற்றார் ஜெயலலிதா.

ஆயினும் தனக்குப் பிடித்த நடனக்கலையை அவர் கைவிடவில்லை. தன் பெயரில் நாட்டியக்குழு ஒன்றைத் தொடங்கி நாட்டிய நாடகங்களை அரங்கேற்றிவந்தார். புகழின் உச்சியில் அவர் இருந்தபோது திருஷ்டியாக நிகழ்ந்தது அவரின் தாயார் மரணம். அவரது வாழ்வில் பேரிடி அது. அதுநாள் வரை அவருக்கு எல்லாமே அம்மாதான். அம்மா இல்லாத ஒரு வாழ்வை அவரால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஒருவித மனச்சோர்வுக்கு ஆளானார் ஜெயலலிதா. 

எம்.ஜி.ஆர்தான் அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தார். தனது சொத்துக்களின் மீது மட்டுமே உறவு கொண்டாடிய சில உறவினர்கள் செயல்கள் இன்னும் மனச்சோர்வைத் தர சினிமா உலகிலிருந்தே விலகத் தொடங்கினார். 

சில தனிப்பட்ட மனிதர்களின் துரோகமும் சேர்ந்துகொள்ள முற்றாக 70களின் மத்தியில் தமிழ்த்திரையுலகிலிருந்து வனவாசம் மேற்கொண்டார். ஹைதராபாத்தில் தங்கியிருந்து சில வருட இடைவெளியில் மீண்டும் தமிழகம் திரும்பி சில திரைப்படங்களில் நடித்தார். ’நதியைத்தேடி வந்த கடல்’ இதுதான் தமிழ்சினிமாவில் அவரது கடைசிப்படம். கொஞ்ச காலம் மீண்டும் இடைவெளி. மீண்டும் நாட்டியக்குழுவில் கவனம் செலுத்தினார்.

 துறை சார்ந்த அனுபவம்

ஸ்ரீசைல மகாத்மியத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஜெயலலிதா அவரது 127-ம் திரைப்படமான 'நதியைத்தேடி வந்த கடல்“ உடன் தன் திரைப்பயணத்தை முடித்துக்கொண்டார். மொத்தம் 127 படங்கள் நடித்த ஜெயலலிதா அத்தனை படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவற்றில் 30 க்கும்மேற்பட்ட படங்கள் 100 நாட்களைத்தாண்டி ஓடி சாதனை படைத்தவை. சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அத்தனை புகழ்பெற்ற நட்சத்திரங்களுடனும் ஈடுகொடுத்து நடித்தார். திருமாங்கல்யம் அவரது நுாறாவது படமாக வெளிவந்தது. ஆயிரத்தில் ஒருவன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, வந்தாளே மகராசி, பட்டிக்காடா பட்டணமா, அடிமைப்பெண், திருமாங்கல்யம், யார் நீ, மேஜர் சந்திரகாந்த், சுமதி என் சுந்தரி, சூரியகாந்தி, கங்கா கௌரி, முகராசி, ரகசிய போலீஸ் போன்ற படங்கள் அவரது திரையுலகில் பெயர் சொல்லும் படங்கள். 

எம்.ஜி.ஆருடன் அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் அவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

சினிமா அரசியில் என  தான் சாதித்த எந்தத் துறையிலும் ஜெயலிதா தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கியதற்கு அவரது சில தனித்துவமான குணங்களே காரணம்.  வெற்றியில் வெறி கொள்வதும் தோல்வியில் துவண்டுவிடுவதும் அவரிடம் காணமுடியாத குணம். 

அரசியல் பங்களிப்பு

நாட்டியக்குழுவில் கவனம் செலுத்திவந்த ஜெயலலிதாவின் வாழ்வில் சென்னையில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில் நிகழ்ந்த நாட்டிய நிகழ்ச்சி அவரது அரசியல் பயணத்திற்குக் கதவைத் திறந்து விட்டது. ஆர்.எம்.வீரப்பன் மூலம் பல வருட இடைவெளிக்குப்பின் எம்.ஜி.ஆரை அவர் சந்தித்தார். 

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தனது கட்சியில் சேர்த்து கொள்கை பரப்புச் செயலாளராக்கினார். சில வருடங்களில் மாநிலங்களவைப் பதவி. ஜெயலிதாவின் அரசியல் பயணம் நன்றாகவே இருந்தது. கட்சியில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த முக்கியத்துவம் சீனியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. 1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஆறடி உயர தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை, கட்சி சார்பில் கொடுத்தார். அதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமே திருப்பிக்கொடுத்தார். இதன் மூலம் தனது அரசியல் வாரிசு ஜெயலலிதாவே எனச் சொல்லாமல் சொன்னதாக ஜெயலலிதா ஆதரவாளர்கள்  பேசினர்.  இதன்பின்னர் நீறுபூத்த நெருப்பாய் இருந்த கோஷ்டிப் புசல், எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாது போனபின் மோசமானது. 1987 ம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் ஜானகி முதல்வரானார். 

ஆனால் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்ததையடுத்து தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதிமுக ஜா, ஜெ என இரு அணிகளாகப் பிரிந்து அடுத்துவந்த 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்தித்தன. இதில் ஜெ.அணி 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஜானகி அணி ஒரே இடத்தைப் பெற்று படுதோல்வியைத் தழுவியது. ஜெ அணி பெற்ற வாக்குகள் 21.15%. ஜானகி அணி 9.19%. முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.

1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையில் இணைந்த பின், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-ல் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதல்முறை முதல்வர் ஆனார்.  ஆனால்  1996-ம் ஆண்டு தேர்தலில் வளர்ப்பு மகன் பிரமாண்ட திருமணம் போலி என்கவுண்டர்கள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் படுதோல்வியடைந்தார்.

மீண்டும் 2001-ம்  ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் டான்சி வழக்கில் தகுதியிழப்பில் அவர் முதல்வர் பதவியை இழக்கநேரிட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். 

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார். அதிமுக கூட்டணிக்கு 69 இடங்களே கிடைத்தன. ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் கருணாநிதி கைது, 42 மாதத்தில் 24 முறை அமைச்சரவையை மாற்றியது, கோயில்களில் ஆடு கோழி பலியிடத் தடைவிதித்தது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறை விடுபுகுந்து தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்டது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே காத்திருந்தது. 2011-ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 

தொடர்ந்து 2016 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வென்று முதல்வர் ஆனார் ஜெ.

சாதனைகள்

ஜெயலலிதா ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர். இது அரசியல் வாழ்வுக்கு உதவியது. தொட்டில் குழந்தை திட்டம், இந்தியாவில் முதல் கமாண்டோப் படையை உருவாக்கியது. மாணவர்களுக்கு மடிக்கணினி, மலிவு விலையில் அம்மா உணவகம், அவர் கொண்டுவந்த பெண்களுக்கான நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

விருதுகள்

திரைத்துறையில் இருந்தபோது 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி” விருது 

1991 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், 1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதே ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை “டாக்டர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. 

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, 2004 ஆம் ஆண்டு, “தங்கத் தாரகை”விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்புக் குழுவினால் வழங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு, இவருடைய மிகச் சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையைப் பாராட்டியதோடு, தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியு ஜெர்ஸி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. 

விமர்சனங்கள்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள், 95 ல் வெகு விமர்சையாக நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், அடிக்கடி அமைச்சரவை மாற்றம், அமைச்சர்களைக் காலில் விழ வைப்பது, ஊழல் புகார்கள், டாஸ்மாக் கடைகள் மூலம் இளந்தலைமுறையை அழிப்பது போன்றவை அவர் காலத்தில் விமர்சனங்களாக வைக்கப்பட்டன.

1991-96-ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று, இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2017 பிப்ரவரி 14 ந்தேதி , அதன் மேல்முறையீட்டு வழக்கில் வெளியான தீர்ப்புடன் வழக்கும் முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ததுடன், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.  ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதத்தை அவரது சொத்துகளை விற்று வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

பிற சிறப்புகள்

திருமணம் செய்துகொள்ளவில்லையென்றாலும் தம் கட்சியினரால் அம்மா என அழைக்கப்பட்டார். கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்துவதில் திறமைசாலி. ஒன்றரைக்கோடி தொண்டர்கள் இருந்தபோதும் கட்சிக்குள் ஒரு சிறு முனகலும் இல்லாதபடி வழிநடத்தியவர். 

மறைவு 

கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் பிரார்த்தனை செய்துவந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவரது மரணம் நிகழ்ந்தது.

75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இறந்தார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது 

புத்தக வெளியீடுகள் : 

ஜெயலலிதா ஒரு புத்தகப்பிரியை. தேர்ந்த எழுத்தாளரும்கூட. தமிழ், ஆங்கிலம், இதழ்களில் கட்டுரைகள் தொடர்கள் பல எழுதியுள்ளார். பிரபல வார இதழில் சுமார் 30 வாரங்கள் தனது சுயசரிதையை 'மனம் திறந்து சொல்கிறேன்' என்ற தலைப்பில் எழுதினார். ஒருத்திக்கே சொந்தம் என்ற நாவலும் எழுதியிருக்கிறார். துக்ளக் பத்திரிகையிலும் அரசியல் விமர்சனங்களை தனது பார்வையில் தொடராக எழுதியிருக்கிறார். பொம்மை சினிமா இதழில் வேதா நிலையம் என்ற தலைப்பிலும், தாய் வார இதழில் எனக்குப் பிடித்தவை என 13 வாரங்கள் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவையன்றி, தனது இளமைப்பருவம் சினிமா குறித்து தொடர் கட்டுரை எழுதினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். 

திரைப்படங்கள்

1957 ல் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீசைல மகாத்மியம் தொடங்கி 1980 ல் நதியைத் தேடி வந்த கடல் வரை 127 படங்களில் நடித்துள்ளார். 

மேற்கோள்கள்

“எனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய "அம்மா" என்று அழைப்பதுதான்”

“வாழ்க்கையில் எப்போதும் வெற்றியைக்கண்டால்  அந்த வெற்றியே கசக்க ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் தோல்வி அடைந்தால்தான் மீண்டும் சிரமப்பட வேண்டும் என்ற தெம்பு உருவாகும். அப்படி சிரமப்பட்டுக் கிடைக்கும் வெற்றி இனிக்கும்” 

இன்னும் சில மேற்கோள்கள் இங்கே.. 

அவரும் விகடனும்

திரைப்பட நட்சத்திரமாக நடிக்கத்தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து ஆனந்தவிகடனில் பல முறை பேட்டியளித்துள்ளார். சினிமா நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் அவர் மிளிர்ந்தபோதும் அவரை நடுநிலையாக விமர்சனம் செய்துவந்துள்ளது விகடன். குறிப்பாக அரசியல் களத்தில் அவரது மக்கள் விரோத நடவடிக்கைகளை எப்போதும் நடுநிலை தவறாமல் விமர்சித்துவந்துள்ளது விகடன். கடந்த முறை ஆட்சியின்போது அவரது அமைச்சரவை சகாக்களின் அதிகார துஷ்பிரயோகம் எல்லைகடந்தபோது மந்திரி தந்திரி என்ற தலைப்பில் அமைச்சர்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டது விகடன். 

சுனாமி உள்ளிட்ட பல சமூகப் பிரச்னைகளில் அரசுக்கு விகடன் தன்னாலான நிதியை வழங்கியிருக்கிறது. ஜெயலலிதா அரசின் ஊழல்கள் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை தொடர்பான நேர்மையான கட்டுரைகள் வெளியிட்டதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட அவதுாறு வழக்குகளை விகடன் சந்தித்தது. அத்தனை வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வெற்றிகண்டது விகடன்.

அதேசமயம் தட்டிக்கொடுக்கவேண்டிய நேரத்தில் தட்டிக்கொடுக்கவும் தவறவில்லை விகடன். அவரது ஆட்சியில் நல்ல விஷயங்களைப் பாராட்டியும் எழுதியிருக்கிறது விகடன்.

வெளி இணைப்புகள்

கட்சியின் அதிகாரபூர்வமான இணையதளம். இதில் கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் பதிவிடப்படுகின்றன.

அதிமுகவின் அதிகாரபூர்வ இணையதளம்

ஜெ - அவர் அப்படித்தான்

பீஷ்மர் அம்மு - பொக்கிஷம்

ஜெயலலிதா இறுதி ஊர்வலம் - 360 டிகிரி வீடியோ

இரட்டை இலை யாருக்கு ? பரபர இறுதிச்சுற்று

'இரட்டை இலை' எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே! 

இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கியது ஏன்? 
 

தொகுப்பு : எஸ். கிருபாகரன்

``அன்புச் சகோதரர்; நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; கூட்டுத் தலைமை" - எடப்பாடிக்கு பன்னீர் அழைப்பு
VM மன்சூர் கைரி

``அன்புச் சகோதரர்; நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; கூட்டுத் தலைமை" - எடப்பாடிக்கு பன்னீர் அழைப்பு

அம்மா உங்கள் கோபம் சரியே - ஜெ.,வின் உதவியாளர்; ”எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல்”! Quick News
ரெ.சு.வெங்கடேஷ்

அம்மா உங்கள் கோபம் சரியே - ஜெ.,வின் உதவியாளர்; ”எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல்”! Quick News

``நானும் சிவாஜியும் சேர்ந்தால் இதுதான் நடக்கும்!" - எம்.ஜி.ஆர் #AppExclusive
Vikatan Correspondent

``நானும் சிவாஜியும் சேர்ந்தால் இதுதான் நடக்கும்!" - எம்.ஜி.ஆர் #AppExclusive

“MGR -ஐ பெயர் சொல்லி அழைப்பார்; ஆனால், ஜெயலலிதாவை...” - கருணாநிதி தனிச்செயலர் ராஜமாணிக்கம்
வினி சர்பனா

“MGR -ஐ பெயர் சொல்லி அழைப்பார்; ஆனால், ஜெயலலிதாவை...” - கருணாநிதி தனிச்செயலர் ராஜமாணிக்கம்

"பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க; ஆனா, ஒரு கட்டத்துல... " - மனம் திறக்கும் வீரப்பன் மகள்
வினி சர்பனா

"பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க; ஆனா, ஒரு கட்டத்துல... " - மனம் திறக்கும் வீரப்பன் மகள்

``ஜெயலலிதா போட்ட அந்தக் கையெழுத்து தான்..!" - மின் கட்டண உயர்வுக்குக் காரணம் சொல்லும் அமைச்சர்
மு.கார்த்திக்

``ஜெயலலிதா போட்ட அந்தக் கையெழுத்து தான்..!" - மின் கட்டண உயர்வுக்குக் காரணம் சொல்லும் அமைச்சர்

`அப்போது எனக்கு இந்தப் பெயரே பிடிக்கவே இல்லை; ஆனால்..?!' - வாணிஶ்ரீ பதில்கள் #AppExclusive
Vikatan Correspondent

`அப்போது எனக்கு இந்தப் பெயரே பிடிக்கவே இல்லை; ஆனால்..?!' - வாணிஶ்ரீ பதில்கள் #AppExclusive

`ராஜதந்திரி’ பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்த சசிகலா... அதிமுக-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மனோஜ் முத்தரசு

`ராஜதந்திரி’ பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்த சசிகலா... அதிமுக-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

“தீபாம்மா தலைமைக்கு வரணும்?!”
குருபிரசாத்

“தீபாம்மா தலைமைக்கு வரணும்?!”

அதிரடி நீக்கம், பதவி வழங்குவதில் எடப்பாடி, பன்னீர் போட்டா போட்டி... அதிமுக-வினர் மைண்ட் வாய்ஸ் என்ன?
இரா.செந்தில் கரிகாலன்

அதிரடி நீக்கம், பதவி வழங்குவதில் எடப்பாடி, பன்னீர் போட்டா போட்டி... அதிமுக-வினர் மைண்ட் வாய்ஸ் என்ன?

“நாங்களும் ஆளணும்!  - டாக்டர் ராமதாஸ் #AppExclusive
Vikatan Correspondent

“நாங்களும் ஆளணும்! - டாக்டர் ராமதாஸ் #AppExclusive

``இன்னும் `அதிமுக தொண்டர்’ என சொல்லிக் கொள்வதற்கு ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா?” - சி.வி.சண்முகம்
சாலினி சுப்ரமணியம்

``இன்னும் `அதிமுக தொண்டர்’ என சொல்லிக் கொள்வதற்கு ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா?” - சி.வி.சண்முகம்