மு. கருணாநிதி

மு. கருணாநிதி

மு. கருணாநிதி

பிறப்பு  

நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை என்ற கிராமத்தில் இசை சார்ந்த எளிய குடும்பத்தில் 1924, ஜூன் 3-ம் தேதி பிறந்தார். பெற்றோர் முத்துவேலர் நாட்டு வைத்தியர். அம்மா பெயர்-அஞ்சுகம். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தட்சிணாமூர்த்தி. உடன் பிறந்தவர்கள் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரண்டு சகோதரிகள். 
 


Also Read: கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
இளமைப் பருவம், கல்வி

திருக்குவளை தொடக்கப்பள்ளியிலும், திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கவிதை, பேச்சில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். விளையாட்டிலும் தீவிர ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளி ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். 

சிறு வயதிலேயே தன்னம்பிக்கை மிக்கவராகவும், மன உறுதி உடையவராகவும் இருந்தார் கருணாநிதி. "பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்து சென்று விட்டோம். 'என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்' என்றார் நண்பன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான் நீந்த வேண்டும்' என்று சொன்னேன். இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை" என்று பிற்காலத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் சிறுவயது வாழ்க்கை குறித்து விவரிக்கிறார் கருணாநிதி. 

1937-ல் ஆட்சியில் இருந்த ராஜாஜி அரசு, அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பைக் கட்டாயமாக்கியது. அதைக்கண்டித்து, அப்போதைய பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 12 வயதிலேயே கருணாநிதி இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சு கருணாநிதியை பெரிதும் கவர்ந்தது. தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, `இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே `மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  

அரசியல்

1916-ம் ஆண்டு டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் தியாகராயர் ஆகியோரால் நிறுவப்பட்ட நீதிக்கட்சி, பிரமாண எதிர்ப்பை முன்னிறுத்தி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராகவும் இக்கட்சி போராடியது. மாணவர்கள் மத்தியில் இக்கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளி மாணவரான கருணாநிதியும் இந்தக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். அப்பருவத்திலேயே தீவிரமாகவும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் பேசும் ஆற்றல் கொண்டிருந்ததார். இவர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம் திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோரும் இந்த அணியில் இணைந்து செயல்பட்டார்கள்.

1942ல் அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய `இளமைப்பலி' என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர் கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார். அதன்பிறகு இன்னும் தீவிரமாக செயல்படத் தொடங்கினார் கருணாநிதி. துண்டு பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் பிரசாரம் செய்து வந்த கருணாநிதி, தன் பிரசாரத்துக்கென ஒரு அச்சிதழ் தொடங்கும் தேவையை உணர்ந்து 1942, ஆகஸ்ட் மாதம் `முரசொலி' பத்திரிகையை தொடங்கினார். தொடக்கத்தில் வார இதழாக வெளிவந்த இந்த பத்திரிகை, 1960 செப்டம்பர் முதல் நாளேடாக மாற்றப்பட்டது. `சேரன்', `மறவன் குரல்' போன்ற பெயர்களில் தொடக்கத்தில் அனல் தெரிக்கும் கட்டுரைகளை எழுதினார்  கருணாநிதி. பிற்காலத்தில் இது, உடன்பிறப்புகளுக்கான கடிதமாக மாறியது. அக்கடிதம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. 

''கடிதங்கள் மூலம் கருத்துகளைச் சொல்லி, அதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் அந்தக் கருத்துகளோடு தனிப்பட்ட முறையில் ஈடுபாடு கொள்ளச்செய்வதில் நேரு, மு.வரதராசனார் போன்ற அறிஞர்கள் முன்னோடிகள். அண்ணா இருந்தபோது 'தம்பிக்கு...’ என விளித்து, வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவார். அப்போதே நான் 'அன்பு நண்பா...’ என்று அழைக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 1965-ல் இருந்து உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன். 1968-ல் இருந்து எழுதப்பட்ட எனது உடன்பிறப்புக் கடிதங்கள் புத்தமாகத் தொகுக்கப்பட்டு, இதுவரை பன்னிரண்டு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. 'நண்பா...’ என்ற வார்த்தையிலிருந்து 'உடன்பிறப்பே...’ என்ற வார்த்தைக்கு மாறியதன் காரணம், அது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை என்பதால்தான். மற்றபடி, பாச உணர்வோடு கழகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பிணைப்புப் பணியை இந்த உடன்பிறப்புக் கடிதங்கள் செய்கின்றன என்றால், அது மிகையில்லை.'' என்று ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார் கருணாநிதி. 

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்ட தந்தை பெரியார், அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்த இந்து சனாதனக் கோட்பாடுகளால் வெறுப்புற்று 1925ல் அக்கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவ்வியக்கம் 1941-ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் அந்த இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்கள். தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949, செப்டம்பர் 17-ல் திராவிட முன்னேற்றக்கழகத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி கொள்கை பரப்புக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி முழுமையாகப் பங்கேற்றார். திருச்சி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊரின் பெயரை டால்மியாபுரம் என்று மாற்றியதைக் கண்டித்து, 1953 ஜூலை 15-ல் கருணாநிதி ரயில் மறியல் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் கருணாநிதிக்கு பெரும் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. 1957 அக்டோபர் 13ம் தேதி இந்தி எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது. அதற்கு தலைமை தாங்கினார். சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தி சிறைக்கும் சென்றார். 

தேர்தல்

1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியிலும், 1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 1967, 1971-தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977, 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம் தொகுதியிலும் 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயித்தார். 2016 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும்.

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் இக்காலக்கட்டத்தில் தான் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது தமிழகத்தில்தான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அண்ணாவின் மறைவையடுத்து, அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும் கல்வியமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தந்தை பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை முதல்வராக பொறுப்பேற்க செய்தார். அதே ஆண்டில் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின். தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய காலக்கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகும். 

1983-ல் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பரில் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலை

1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது மத்திய அரசு. அன்றைய இரவே ஏராளமான திமுகவினர் கைதுசெய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். திமுக, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், சோஷலிஸ்ட், ஆர்எஸ்எஸ் எனப் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் அனைத்து மத்தியச் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சிறைகளிலேயே சென்னை மத்தியச் சிறை சித்திரவதைக் கூடமாக மாறியது.  திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, எம்.ஆர்.ராதா, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு எனப் பலரும் சிறைச்சாலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலேயே மாண்டார். நெருக்கடி நிலையால், கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அதிகம் பாதிக்கப்பட்டது. 

கருணாநிதி குடும்பம்

கருணாநிதியின் முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு முத்து என்ற மகன் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே பத்மாவதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரண்டாவது மனைவி பெயர் தயாளு அம்மாள். இவருக்கு அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு என நான்கு பிள்ளைகள். மூன்றாவது மனைவி பெயர் ராஜாத்தி அம்மாள். இவருக்கு ஒரு மகள், கனிமொழி.    

Karunanidhi Family

 

Karunanidhi Family members

 

 

Karunanidhi-Wife

 

Karunanidhi-Next-Gen

 

கருணாநிதியின் குடும்பம் பற்றி மேலும் அறிய

 

விமர்சனங்கள்

கருணாநிதி மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், குடும்ப அரசியல் என்பதாகும். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, அக்காவின் மகன் முரசொலி மாறன், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என குடும்ப உறுப்பினர்கள் பலரும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் பல முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

தமிழகத்தின் வலுவான அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், பல தருணங்களில் மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியிருக்கிறது. அத்தருணங்களில் மாநில நலனைக் காட்டிலும் தம் குடும்ப நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டார் என்ற விமர்சனமும் இவர் மீது உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலங்களிலும் இவரது குடும்பத்தாரின் தலையீடும், அதிகாரமும் பெருமளவு இருப்பதாகக் குற்றச்சாட்டு உண்டு.  மத்தியில் தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் பதவிகள் பெறுவதற்காக பல சமரசங்களை செய்து கொள்வதாகவும் இவர் மீது விமர்சனம் உண்டு.   

இவரது மகன்களான ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் இடையில் வெளிப்படையாக நடக்கும் அதிகாரப்போர் பற்றிய விமர்சனங்களும் இவர் மீது இருக்கிறது.  

இவரது கட்சியைச் சேர்ந்த அ.ராஜா மத்தியத் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் இவரது மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது. 

ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்தபோது, அங்கு உயிருக்குப் போராடிய தமிழர்களைக் காப்பாற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது மெரினாவில் இவர் இருந்த சிலமணி நேர உண்ணாவிரதமும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. 

கருணாநிதியின் குட்

நூல்கள் நாடகங்கள் 


நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் இயங்கியிருக்கிறார் கருணாநிதி. `பழனியப்பன்' என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அறங்கேற்றம் செய்தார். பிற்காலத்தில் இந்த நாடகம் `நச்சுக்கோப்பை' என்ற பெயரில் தமிழகம் எங்கும் அறங்கேறியது.  `தூக்குமேடை', `பரபிரம்மம்', `சிலப்பதிகாரம்', `மணிமகுடம்', `ஒரே ரத்தம்', `காகிதப்பூ', `நானே அறிவாளி', `வெள்ளிக்கிழமை', `உதயசூரியன்', `திருவாளர் தேசியம்பிள்ளை', `அனார்கலி', `சாம்ராட் அசோகன்', `சேரன் செங்குட்டுவன்', `நாடகக்காப்பியம்', `பரதாயணம்'  உள்பட 17 நாடகங்களை எழுதியுள்ளார். `தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, `கலைஞர்' என்ற அடைமொழியை கருணாநிதிக்கு வழங்கினார். அதன்பிறகே இவர், `கலைஞர் கருணாநிதி' என்று அழைக்கப்பட்டார்.  

`நளாயினி', `பழக்கூடை', `பதினாறு கதையினிலே' உள்பட நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். `புதையல்', `வான்கோழி'. `சுருளிமலை', `ஒரு மரம் பூத்தது', `ஒரே ரத்தம்', `ரோமாபுரிப் பாண்டியன்', `தென்பாண்டிச் சிங்கம்', `பாயும்புலி பண்டாரக வன்னியன்', `பொன்னர் சங்கர்' ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். `தென்பாண்டிச் சிங்கம்' நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் `ராஜராஜன்' விருதைப் பெற்றது. எளிய நடையில் திருக்குறளை ஆய்ந்து எழுதிய `குறளோவியம்', கருணாநிதியின் முக்கிய இலக்கியப் பங்களிப்பாகும். `நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.  

`சங்கத்தமிழ்', `தொல்காப்பிய உரை', `இனியவை இருபது', `மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று', `மலரும் நினைவுகள்', `கலைஞரின் கவிதை மழை', `இளைய சமுதாயம் எழுகவே' உள்பட 178 நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 

திரைப்படம்

1946-ல் `ராஜகுமாரி' திரைப்படத்தில் இருந்து கருணாநிதியின் திரைப்பயணம் தொடங்குகிறது. அப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். 1952-ல் வெளிவந்த `பராசக்தி' திரைப்படம் தமிழ்த்திரையுலகை வியந்து பார்க்க வைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கிலான கூர்மையான வசனங்கள் திரைப்படத்துறையையே புதிய பாதைக்கு இட்டுச்சென்றன. 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு பணியாற்றினார். `மந்திரி குமாரி', `மணமகள்', `பூம்புகார்', `மனோகரா', `திரும்பிப்பார்', `அபிமன்யூ', `மருதநாட்டு இளவரசி', `மந்திரி குமாரி', `தேவகி', `பணம்', `நாம்', `மலைக்கள்ளன்', `அம்மையப்பன்', `ராஜாராணி', `ரங்கோன்ராதா', `புதையல்', `புதுமைப்பித்தன்', `குறவஞ்சி', `எல்லோரும் இந்நாட்டு மன்னர்', `அரசிளங்குமரி', `தாயில்லாப்பிள்ளை', `இருவர் உள்ளம்', `காஞ்சித்தலைவன்', `பூமாலை', `அவன் பித்தனா?', `மணிமகுடம்', `தங்கக்கம்பி', `வாலிப விருந்து', `எங்கள் தங்கம்', `பிள்ளையோ பிள்ளை', `அணையாவிளக்கு', `வண்டிக்காரன் மகன்', `நெஞ்சுக்கு நீதி', `ஆடுபாம்பே', `குலக்கொழுந்து', `மாடிவீட்டு ஏழை', `தூக்குமேடை', `புயல்பாடும் பாட்டு', `ஒரே ரத்தம்', `வீரன் வேலுத்தம்பி', `சட்டம் ஒரு விளையாட்டு', `மக்கள் ஆணையிட்டால்', `பாசப்பறவைகள்', `இது எங்கள் நீதி', `பாடாத தேனீக்கள்', `தென்றல் சுடும்', `பொறுத்தது போதும்', `நியாயத் தராசு', `பாசமழை', `காவலுக்குக் கெட்டிக்காரன்', `மதுரை மீனாட்சி', `புதிய பராசக்தி', `இளைஞன்' என 40க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பொன்னர் சங்கர் என்ற கருணாநிதியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது. 

திரைப்படம் என்னும் வலிமை மிக்க ஊடகத்தை மிகத்திறமையாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட கருணாநிதி, கதை, திரைக்கதை, உரையாடல், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல தளங்களிலும் தன் பங்களிப்பை அளித்திருக்கிறார்.  

குறிப்பிடத்தகுந்த பணிகள்

சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார். தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்,-திருவள்ளுவர் பெயர்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை மக்களும் மாடி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார். கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் மொழிப்போர் தியாகிகளுக்கும் ஒய்வூதியம் வழங்கினார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார். அரசு-பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்தைக் கொண்டு வந்தார். 

நாடெங்கும் சமத்துவபுரங்களைத் திறந்து அவற்றிற்குப் `பெரியார் நினைவு சமத்துவபுரம்' எனப் பெயிரிட்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.  கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட மினிபஸ்களை அறிமுகம் செய்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பார்க் என்னும் கணினி மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தார். உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கும் முறையை தொடங்கி வைத்தார். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.

தளராத உழைப்பு

90 வயதுகளைக் கடந்தபிறகும், சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களில் தீவிரமாக இருந்தார் கருணாநிதி. அரசியல் சார்ந்த கூட்டங்கள், முடிவுகள், பிரசாரம் என அவரது உழைப்பு இளம் தலைமுறைக்கு பாடமாக அமைந்தது. 

2016, அக்டோபரில் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருணாநிதி எடுத்துக்கொண்ட மாத்திரைகளாலேயே ஒவ்வாமை  ஏற்பட்டு ‘ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம்’ என்ற நோய்த்தாக்கமும் இருந்துள்ளது. உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறார். மன வருத்தமே அவருடைய உடல்நிலை பாதிக்கக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

மேலும் அறிய

கருணாநிதி 90 - பொக்கிஷம்

கருணாநிதிக்கு அவர் அம்மா எழுதும் கடிதங்களில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விஷயம்! #Karunanidhi
வி.எஸ்.சரவணன்

கருணாநிதிக்கு அவர் அம்மா எழுதும் கடிதங்களில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விஷயம்! #Karunanidhi

Secret behind Karunanidhi's new 'LOOK' !
விகடன் விமர்சனக்குழு

Secret behind Karunanidhi's new 'LOOK' !

Secret behind Modi-Karunanidhi's meet ? | JV Breaks
விகடன் விமர்சனக்குழு

Secret behind Modi-Karunanidhi's meet ? | JV Breaks

DMK Chief Karunanidhi is Back !!!
விகடன் விமர்சனக்குழு

DMK Chief Karunanidhi is Back !!!

கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? | Current status of Karunanidhi
விகடன் விமர்சனக்குழு

கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? | Current status of Karunanidhi

Did Karunanidhi blessed Rajinikanth ? | JV Breaks
விகடன் விமர்சனக்குழு

Did Karunanidhi blessed Rajinikanth ? | JV Breaks

Who will fix the appointment for meeting Karunanidhi ?
விகடன் விமர்சனக்குழு

Who will fix the appointment for meeting Karunanidhi ?

Vikatan
விகடன் விமர்சனக்குழு

Anandaraj's Prayer For Karunanidhi | ElectionFever