Banner 1
நகைச்சுவை நடிகை

கோவை சரளா

தனது கொங்கு தமிழாலும், அபாரமான நடிப்பு திறமையாலும் காமெடியில் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தவர்தான் கோவை சரளா.

நகைச்சுவை திறன் என்பது அனைவருக்குமே  அமைந்துவிடாது. அது ஒரு தனித்துவமான திறன். ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் நகைச்சுவை நடிகைகள் குறைவாகவே உள்ளனர். அப்படி இருந்தாலும் தனது கொங்கு தமிழாலும், அபாரமான நடிப்பு திறமையாலும் காமெடியில் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தவர்தான் கோவை சரளா. 25 வருட திரைபயணம் , 750 படங்கள், தமிழ், தெலுங்கு,  மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகள் இந்த மூன்று வரிகள் போதும் கோவை சரளாவின் சாதனையை நிரூபிக்க. 

பிறப்பு :

 ஏப்ரல் 7 ஆம் தேதி 1962- ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார் கோவை சரளா. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர்;  இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு அண்ணனும் உள்ளனர். இவர்  பெயர் சரளா மட்டும்தான். மண்வாசம் மறக்க கூடாது என்பதற்காக,  தான்  பிறந்த கொங்கு நாடான "கோவை" என்னும் மாவட்டத்தை தன் பெயரின் முன்னால் சேர்த்துக்கொண்டார்.

பள்ளிப் பருவம் :

             சிறுவயதிலேயே மிகவும் திறமை மிக்கவராக திகழ்ந்தார் கோவை சரளா . பள்ளிப்படிப்பை கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஒருமுறை  எம்.ஜீ.ஆர் அவர்கள் கோவை மாவட்டத்திற்கு சென்றிருந்தபோது,  கோவை சரளாவை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.  சரளாவின் பேச்சு மற்றும்  நடிப்பு திறமைகளை அறிந்த  எம். ஜீ. ஆர் அவர்கள், சரளாவிடம் " உனக்கு நிறைய திறமை இருக்கு,  நல்லா படிக்கணும் " என்று கூறி அவர் படிப்பதற்கு உதவி தொகையும்  வழங்கினார். இந்த  நிகழ்வுதான் சரளாவின் வாழ்வில் முக்கியமான திருப்பம்.  அன்றுமுதல் அவரின் ரோல்மாடல்  MGR தான்.  எம்ஜிஆரின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவார் ; வளர்ந்த பிறகு நானும் அவரைப் போலவே பிறருக்கு படிப்பதற்காக உதவி செய்ய  வேண்டும் என்ற கொள்கையையும் வளர்த்துக்கொண்டார்.

திரையுலக வாழ்க்கை :

      பள்ளிப்படிப்பை  முடித்தபிறகு திரையுலகில் சாதிக்க வேண்டுமென சரளாவிற்கு  ஆசை ஏற்பட்டது . தன் ஆசையை வீட்டில் சொல்ல பச்சைக்கொடி காட்டினர் குடும்பத்தினர்.  சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும்,  தந்தை மற்றும் அக்காவின் ஆதரவோடும் சென்னைக்கு வந்த இவர் முதலில் வாய்ப்புகள் தேடி பலரிடம் அலைந்தார்.  பல தேடுதல்களுக்கு  பிறகு பாக்யராஜை சந்திக்க நேர்ந்தது.  தனது திறமைகளை வெளிப்படுத்தினர் சரளா. இவரின் பேச்சால்  பெரிதும் ஈர்க்கப்பட்டார் பாக்யராஜ்.  எனவே தான்  தயாரித்து,  நடித்த படமான 'முந்தானை முடிச்சு' (1983) என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதுவே கோவை சரளாவின்  முதல் படம். இவரின் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டதால் வரிசையாக பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அடுத்த ஆண்டே (1984) 'வைதேகி காத்திருந்தால்' 'தம்பிக்கு எந்த ஊரு'  'மண்ணுக்கேத்த பொண்ணு' என வரிசையாக மூன்று படங்களில் நடித்தார்.

1985 - 1990 :

           1985 ஆம் ஆண்டில்  உயர்ந்த உள்ளம்,  சின்னவீடு, லக்ஷ்மி வந்தாச்சு, எங்கள் குரல்,  ஜப்பானில்  கல்யாணராமன், உதயகீதம், அன்பின்  முகவரி, நான்சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தார். 1986 -ல் வசந்த ராகம்  என்ற படத்திலும் 1987 களில் ஆனந்த  ஆராதனை, காதல் பரிசு, பேர் சொல்லும் பிள்ளை,மற்றும் 1988-ல்  சூரசம்ஹாரம், எங்க ஊரு காவல்காரன்,1989 -களில் ராஜா சின்ன ரோஜா,  தங்கமான புருஷன், பாண்டி நாட்டு தங்கம், சோலை  குயில்,  "கரகாட்டகாரன் ", தர்மம் வெல்லும், ராஜா ராஜாதான், கைவீசம்மா கைவீசு, தங்கமணி ரங்கமணி படத்திலும், 1990 ல் அதிசய மனிதன், என்  காதல் கண்மணி, மை டியர் மார்த்தாண்டன், சாத்தான்  சொல்லை தட்டாதே, ஜகதாலபிரதாபன் படங்களிலும் நடித்தார். 

1991 -1995: 

       1991 -- ல்  பொண்டாட்டி சொன்னா  கேட்கணும்,  பொண்டாட்டி பொண்டாட்டிதான்,  சித்திரை பூக்கள், புதிய ராகம்  படங்களிலும்,  1992 ல் சின்னவர்,  வரவு எட்டணா  செலவு பத்தணா, திருமதி பழனிச்சாமி, காட்பாதர்,  பொண்டாட்டி ராஜ்ஜியம், எங்களுக்கும் காலம் வரும்,  தெற்கு தெரு  மச்சான் போன்று நிறைய படங்களில் நடித்தார். 1993ல்  துருவ நட்சத்திரம்,1994 ல்  சேதுபதி ஐபிஎஸ், பவித்ரா, நம்மவர்,  மகளீர்க்காக, வாங்க பாட்னர் வாங்க,   பதவி பிரமானம் படங்களில் நடித்தார். 1995 ல் வெளியானது  சதிலீலாவதி திரைப்படம்.  இந்த படம் கோவை சரளாவிற்கு பெருமை சேர்த்த படங்களில் ஒன்று என்றும் கூறலாம். 

1996 -2000:

 1996 ல் வசந்த வாசல்,  காலம் மாறி போச்சு,  1997ல்  காலமெல்லாம் காதல் வாழ்க, 1998ல் காதலா  காதலா, உதவிக்கு வரலாமா, அவள் வருவாளா  1999 ல் கனவே  கலையாதே, ஆனந்த பூங்காற்றே, பாட்டாளி, திருப்பதி  ஏழுமலை வெங்கடேசா,  மின்சார கண்ணா, விரலுக்கேத்த  வீக்கம்,  கண்ணோடு காண்பதெல்லாம் 2000த்தில்  பட்ஜெட்  பத்மநாபன்,  உயிரிலே  கலந்தது, கந்தா கடம்பா கதிர்வேலா,டபுள்ஸ், மாயி படங்களில் நடித்தார். இவரின் கொங்கு தமிழும்,  வடிவேலுடன் இவர் இணைந்து நடிக்கும் காதாபாத்திரங்கள் மக்களை இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 

2001 -2009 :

 2001 ல்  ஷாஜகான், மிட்டா மிராசு,  பூவெல்லாம் உன் வாசம், பிரியாத வரம் வேண்டும், விஸ்வநாதன்  ராமமூர்த்தி, வீட்டோட மாப்பிள்ளை, வடுகப்பட்டி மாப்பிள்ளை, 2002 ல் என்னமா கண்ணு,  தென்காசி பட்டினம்," பஞ்சதந்திரம்",2003 -ல்  நேசம் பேசுது, 2004 -ல்  வானம் வசப்படும்,  விஷ்வ  துளசி,  2005 ல் சக்கலக்கா பேபி, பிரியசகி  "மும்பை எக்ஸ்பிரஸ் ", 2006 -ல்  கோவை பிரதர்ஸ்,2007-ல்  உளியின் ஓசை, " முனி " 2008 -ல்  உயிரின் ஓசை , 2009 ல் வில்லு படங்களில் நடித்தார்.  

தொகுப்பாளராக பயணம் :

 1983 இலிருந்து 2008ஆம் ஆண்டு வரை சினிமாவில் அசத்தினார் கோவை சரளா.   2008 ஆம் ஆண்டுக்கு மேல் வாய்ப்புகள் ஏதும் சரியாக  வரவில்லை. எனவே நடிகையாக இருந்த தனது வழி தடத்தை " தொகுப்பாளினி" எனும் பக்கம் திருப்பி  தொலைகாட்சிகளில் ஜொலிக்க ஆரம்பித்தார்.  சன் டிவியில் சுந்தரி சௌந்தரி என்று நிகழ்ச்சியிலும், எல்லாமே  சிரிப்புத்தான், வந்தனா தந்தனா என்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும்,   சபாஷ் மீரா என்ற நிகழ்ச்சியை  ஜெயா தொலைக்காட்சியிலும்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் Zee தொலைக்காட்சியிலும் , சகலகலா சரளா, காமெடியில் கலக்குவது எப்படி என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்   தொகுப்பாளினியாக வலம் வந்தார். அசத்த போவது  யாரு - நிகழ்ச்சியில்  நடுவராகவும் இருந்தார்.

2011 -2017: 

 2011 ல் இருந்து வாய்ப்புகள் மீண்டும் இவரை தேடி  வர ஆரம்பித்தது. மீண்டும் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார் கோவை சரளா.  2011 ல் முனி 2:காஞ்சனா  மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். 2012 -ல் பாகன்,  ஒரு நடிகையின் வாக்குமூலம் , 2013ல்  கண்ணா லட்டு திங்க ஆசையா, தில்லு முள்ளு, ரகளைபுரம், ஆர்யா  சூர்யா,  சித்திரையில் நிலாச்சோறு, 2014 - ல் வானவராயன் வல்லவராயன்,  மாலினி 22 பாளையங்கோட்டை, சரவண பொய்கை, சிகரம் தொடு, 2015- ல்  கொம்பன், முனி 3:கங்கா, அதிபர், வேதாளம், 2016ல்  அரண்மனை 2 , நாயகி,  திரைக்கு வராத கதை,  கடவுள் இருக்கான் குமாறு, பலே வெள்ளையத்தேவா 2017- ல்  மொட்டசிவா கெட்டசிவா, சங்கிலி புங்கிலி கதவ தொற, அன்பாதவன் அசராதவன் அடங்காதவன், சதுர அடி 3500, பயமாயிருக்கு, மெர்சல் படங்களில் நடித்துள்ளார். 

தெலுங்கு :

 இவரின் நகைச்சுவை திறனை கண்டு தெலுங்கு படங்களில் நடிக்க பல அழைப்புகள் வந்தது.தெலுங்கிலும் தனது தடத்தை பதிக்க ஆரம்பித்தார் கோவை சரளா.  பைரவ தீபம், பெல்லி, நூவே காவாலி,  மரிகராஜு,  "ஒரி நீ பிரேம பங்கரம் கணு ",எலா செப்பனு,   நாயுடு எல்எல்பி,  எவடி கோல வாடி, ஸ்டைல்,  வீரபத்திரர்,ராம்,  தேசமுடு,  ஹீரோ, பாக்யலட்சுமி பம்பர் டிரா,  மிரிகாராஜ்,  ஹனுமான் ஜங்சன்,  மல்லி மல்லி சுடலி, தேவஸ்தானம், நுவ்வா நேனா , தேவுடு சேசினா மனசுலு,  மசாலா, டெம்பர் முதலிய படங்களை 1994 ல் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை நடித்துள்ளார். தெலுங்கில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  

மலையாளம் மற்றும் கன்னடம் :

 தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் கன்னடம் மலையாளம் படங்களிலும்  நடித்தார் கோவை சரளா. மலையாளத்தில் நிறம்(1999), பூமரத்தனில் (1997),  மேட் டாட்(2012)  போன்ற ஐந்து படங்களிலும்,  கன்னடத்தில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார் கோவை சரளா.   

பாடகி மற்றும் தயாரிப்பாளர் :

 நடிப்பை  தவிர்த்து சினிமாத்துறையில்   "சிறையில் பூத்த சின்ன மலர்"மற்றும் "வில்லு"(விஜய் அறிமுக பாடல் )  போன்ற படங்களில் இவர் பாடியுள்ளார். "உழைத்து வாழ வேண்டும்"  என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.  கோவை சரளா சினிமாவின் பல கோணங்களில் தனது திறமையை நிரூபித்தார். 

விருதுகள்:

 பூவெல்லாம் உன் வாசம்,  சதிலீலாவதி, உளியின் ஓசை  போன்ற படங்களில் நடித்ததற்க்காக  சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில  திரைப்பட விருதை  மூன்று முறை பெற்றார். தெலுங்கில் நடித்த ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) என்ற படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான " நந்தி " விருதை வென்றார். விஜய் தொலைக்காட்சியில் விஜய் விருதுகளின் போது சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை முனி 2 : காஞ்சனா படத்திற்கு வென்றார் கோவை சரளா. 

குடும்ப வாழ்க்கை:

 கோவை சரளாவின் குடும்பம் என்றால் அது அவரின் உடன்பிறந்தவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான். இன்று  வரை திருமணமே செய்து கொள்ளாமல் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டோடு வளர்த்து வருகிறார். உதவி செய்வதை தன் வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தில் உள்ள அனைவருக்குமே உதவி செய்வதை சிறந்த நோக்கமாகவே வைத்திருக்கிறார்.

கோவை சரளாவின் விருப்பமான படங்கள்:

       தன் மனதுக்கு விருப்பமான /நெருக்கமான படங்கள்  என கோவை சரளா  குறிப்பிட்டவை,

      1. சதிலீலாவதி

      2. விரலுக்கேத்த வீக்கம் 

      3. வரவு எட்டணா செலவு பத்தணா 

      4. கரகாட்டகாரன் 

      5. விஸ்வநாதன் ராமமூர்த்தி

 ஆச்சி மனோரம்மாவிற்கு அடுத்து நகைச்சுவையில் கலக்கியவர் என்றால் அது கோவை சரளா தான்.

தொகுப்பு : இ.நிவேதா